70-களில் சில தீவிர வாசகர்கள், அவரது எழுத்துக்களை மனனம் செய்ததுபோல் ஒப்புவித்து மகிழ்ந்தார்கள், சக்தியையும், அதன் ஆதாரமாகப் பெண்மையையும், அது ஒளிவீசும் தாய்மையையும் தன் வாழ்க்கையின் அடிநாதமாக உபாசித்து, எழுத்தை ஒரு தவமாகக் கொண்டவர். அண்மையில் மறைந்த லா.ச.ர அவருக்கு நமது அஞ்சலி.
**********
தமிழில் கவிதை நாளுக்குநாள், பெருகி, உயர்ந்து வருகின்றது வார, மாத இதழ்கள், கவிதைக்கு இடத்தை உற்சாகமாகவே தருகின்றன। சில இதழ்கள், இலக்கிய தீபாவளி கொண்டாடின. 'குமுதம்' இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் வேகமாக எழுதுவதையும், திரைப்படங்களை அவர் ஊன்றி பார்பதில்லையென்றும், இயக்குனர் சேரன் சிகரெட் அதிகமாகப் பிடிப்பதையும் கூறி தன் இலக்கியப் பணியை முடித்துக் கொண்டது. ஆனந்தவிகடனில், கவிஞர் விக்கிரமாதித்யன், பீடி சுற்றும் பெண்களைப் பற்றி ஒரு நீண்ட வியாசத்தை கவிதையாக எழுதியிருந்தார், சுவைபட, ஆனால் கவிதைக்கு இறுக்கமும், சுருக்கமும்தானே அழகு. என்னை மிகவும் ஈர்த்தது, கவிதையின் மொழி, பேச்சு மொழியாக மாறும்போது கிடைக்கும் மழலையின் அழகு. அது கு. உமாதேவியின் 'அன்னாடங்காச்சி' என்ற கவிதையில்
'ஆனா। சின்ன கொடிகுத்தி
எங்கொழந்த கிட்ட ஆரஞ்சுமிட்டாய்
கொடுக்கும்போது
வுழுந்து வுழுந்து சிரிப்போம்'
என்கிறபோது உண்மையை நேரில் காணும் ஒரு வெள்ளந்திப் பார்வையின் ஏகத்தாளம் வெளியிடப்பட்டாலும், மழலைச் சொல்லாகவே இருப்பதால், இதன் கனமும் குறைந்து விடுகின்றதே।
நேரில் காணும் உண்மையை, உள்ளபடி, ஒரு பயமும் இல்லாது கூறும் நேர்மைக்கு அருகாமையில் வருகின்றது தமிழ்க்கவிதை. ஆனால் இன்னும் நீண்டதூரம் நாம் போக வேண்டும்।. தமிழர்கள் நல்ல கற்பனையுள்ளவர்கள், ஆகவே தீக்குள் விரலை விட்டாலும், பெரும்பான்மையானபோது உண்மை இதமாக தண்ணித்துப் போகின்றது. உர்து மொழி இதற்கு சற்று மாறான நிலையை எடுக்கின்றது. குர்ஷித் அஃப்சார் பிஸ்ரானி, தான் எழுதும் உர்தூமொழி பற்றி,
''அப் உர்தூ க்யா ஹை ஏக் கோத்தே கீதவாய்ஃப் ஹை
மஜா ஹர்ஏக் லேத்தாஹை மொகயத் கோன்கர்த்தாஹை''
மொழி பெயர்த்தால் (ஆங்கிலம் வழியாக)
இப்போது ஊர்தூ என்ன, விபாசர விடுதியில் ஒரு வேசியாக
யார் வேண்டுமானாலும் அவளுடன் உல்லாசம் காணலாம்,
யாரோ அவளை காதலிக்கின்றார்।'
**********
பேச்சில், எழுத்தில் வரும் பிழைகள், பேசுபவரின், எழுதுபவரின் ஆழ்ந்த உள்ளக்கிடைக்கைகளென்றும், அவையே உண்மையான எண்ணங்கள் என்றும் ஒரு உளவியல் கோட்பாடு உண்டு. எழுதியவை அச்சில் வரும்போது ஏற்படும் பிழைகளுக்கு யார் பொறுப்பு? என்னைக் கேட்டால் எழுதியவர்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எழுதுபவர் சற்று கூடிய கவனத்துடன் தான் எழுதுவது, எழுதியது அச்சில் வெளிவரும்போது பிழைகள் நேரக்கூடும் என்ற பொறுப்புடன் எழுத வேண்டும். சென்ற 'சந்தி'யில் நேர்ந்த பிழைகளுக்கு கொம்பன் பொறுப்பேற்று வாசகர்களின் மன்னிப்பை யாசிக்கிறான் புத்தி. புத்தி. புத்தி.
சிரிக்க :
பள்ளிப் பிள்ளைகளாக நாம் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாட்டில் பெரிய நகரங்களில் சர்கஸ் வருவதுபோல குத்துச் சண்டை, மற்போர்கள் வரும்। முன் மாலைகளில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு, வண்ண வண்ண மலிவான காகிதத்தில் கருப்புப் பையில் அச்சிட்டுப் புகைப் படங்களுடன், அன்றைய ''ரோஃமான்'' குத்துச் சண்டையை பற்றி விளம்பரம் செய்துகொண்டு போவார்கள். எந்தச் சண்டையிலும் தோற்காத இந்தியத் தாராசிங், உச்சக்கட்ட போராக, கிங்காங்வுடன் முகமூடி அணிந்த 'வாங் பக்லி' மோதுவதாக இருக்கும். ஒவ்வொருநாள், தனித்தனி ஊர்திகளில் 'கிங்காங்' ஒரு வண்டியிலும், பின்னோ முன்னோ இன்னொரு வண்டியில் கருப்பு முகமூடியணிந்து வாங் பக்லியும் வீதி உலா வருவார்கள். வாரம் ஒரு தடவையாவது கிங் காங் வாங் பக்லியின் முகமூடியை கிழிக்கப் போவதாக சவால் விடுவார். ஆனால் போட்டி அமைப்பாளர்கள் தவிர வேறு யாராலும் 'வாங் பக்லி' யார் என்று அறிய முடியாது. சென்ற இதழ் நவீன விருட்சம் படித்தபோது திரு தி.க.சி யின் கடிதம் என்னைக் கவர்ந்தது. 'வாங் பக்லி'யின் முகமூடியை திரு.தி.க.சி கிழிக்கப் போவதில்லை போலும்.
(நவீன விருட்சம் 2008ல் பிரசுரமான சந்தி)
Comments