Skip to main content

இன்ன பிற


காலச்சுவடு கதைகள் 1994-2000 படிக்கக் கிடைத்தது। மனுஷ்ய புத்திரன் தொகுத்திருக்கிறார்। 5 நெடுங்கதைகள், 18 சிறுகதைகள் உள்ளன। ஜி நாகராஜனின் 'ஆண்மை'என்ற கதைதான் என்னை முதல் வாசிப்பிலேயே அசாத்தியமாக தாக்கியது।

ஒரு வேசியின் பின்னால் போகிற ஆண்மகன் ஒருவன் சொல்வதாக கதை அமைந்துள்ளது। இருபது வயது நிரம்பிய அந்த வேசியைப் பார்த்ததும் ஆண்மகன் எண்ணுகிறான்। 'கடவுளை மன்னித்துவிட வேண்டியதுதான்। எத்தனை விகாரமான உருவங்களுக்கிடையே இப்படியும் அழகான ஒரு உருவத்தைப் படைத்திருக்கிறாரே! அவளது மோகனச் சிரிப்பையும், மலர்ந்த கண்களையும், உலகத்து அழகையெல்லாம் வடித்திறக்கிய அவளது மார்பகத்தையும் பார்த்தபோது எனது இரத்த நாளங்கள் விரிந்தன,'ரொமாண்டிக்கான வர்ணனைதான்। எட்டு வயது மகனுடன் அந்த வேசியின் அப்பா அவளை பஸ் ஸ்டாப்பு வரை கொண்டு விடுகிறார்। தம்பி அக்காகூடப் போவேன் என்று படுத்துகிறான்। அப்பா அவனைச் சமாதனப்படுத்தி அழைத்துப் போகிறார்।

பேரம் பேசப்படுகிறது। பணத்தைப் பெறுவதில் அவள் குறியாக இருக்கிறாள்।

ஆண்மகன் நினைக்கிறான்। 'எதற்கும் ஏதாவது கொடுத்தாக வேண்டும்। கொடுக்காமல் எதுவும் கிடைப்பதில்லை। மனைவி மட்டும் என்ன? அவளுக்கும் கொடுத்தாக வேண்டும்। அங்கு எல்லாம் நாகரிகமாக நடக்கிறது। இங்கு விலை; அங்கு கடமை।

கதைகளில் வரும் எல்லா வேசிகளைப் போலவே இவளும் ஒரு சோகக்கதையைக்கூறுகிறாள்। குடும்பக்கதை।

'நாங்க ரொம்ப கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க। வேண்டாதவங்க செய்வினை செஞ்சு எங்காம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சதனால்தான் மெட்ராசுக்கு வந்தோம்।

'ஹøம...உங்கப்பாவுக்குஎன்ன தொழில்?'

'அவர் செய்யாத பிசனஸ் இல்லை। நூறு பேருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சவரு। கூட்டாளிங்க ஏமாத்தி அவரெ ஓட்டாண்டியாக்கிட்டாங்க।'

'எங்கம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சதிலிருந்து அவர் எந்தப் பிசினெஸ் எடுத்தாலும் நஷ்டம்தான்। ஆனாலும் பிடிவாதக்காரரு। எங்கம்மாவை குணப்படுத்தவ்ணும்; இதே மெட்ராசிலே பெரிய பிசினெஸ் நடத்தி வீடும் காரும் வாங்கணும்பாரு।'

'நீதான் மூலதனமா?'என்கிறான் ஆண்மகன்। இந்தக் கேள்வியை நக்கல் செய்யும் விதமாக ஆண்மகன் கேட்பதுபோல முதல் பார்வைக்குத் தோன்றினாலும் கேள்வியின் பின்னால் பச்சாதாபம் தொனிக்கிறது। ஐம்பது வயது அப்பா எட்டு வயது சிறுவனோடு பஸ் ஸ்டாப் வந்து இருபது வயது நிரம்பிய அவர் மகளை வேசித் தொழிலுக்குப் பணம் பண்ண அனுப்புகிறார்। அந்தப் பெண் இந்த நாடகத்தில் தன் பங்கை அட்சரம் பிசகாமல் நடத்தித் தருகிறாள்। தம்பியை, அப்பாவைக் காப்பாற்றுகிறாள்। அம்மாவை குணப்படுத்த பணம்.

'என்னெப் பார்த்தா காசுக்கு வரவ மாதிரி தெரியுதா?'

'அதுதான் உம் முகத்திலே எழுதி ஒட்டியிருக்கே,'என்கிறான் ஆண்மகன்।

'அப்ப, இனிமே அப்பாவையும் தம்பியையும் பஸ் ஸ்டாப்புக்கு வரவேண்டாண்டிற வேண் டியதுதான்।'

'எனக்குக் கூட அவெரப் பார்த்தா என்னவோ மாதிரி இருந்திச்சு. என்னவோ மகளை மருமகன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறமாதிரி பஸ் ஸ்டாப்புக்கு ந்திருட்டாரு।'

மீண்டும் நக்கல்போல தொனித்தாலும் தன் மகளை சோரம் போக அனுப்புகிற கையாலாகாத அப்பா மீது கதை சொல்லிக்குக் கோபம்। ஒன்றும் அறியாத எட்டு வயது சிறுவன் மீதும் சினம்। அக்காவிற்கு நேருகிற அவலம், சீரழிவு அவன் சின்ன மூளைக்குப் புரிபடவில்லை। நாளை அவன் பெரியவன் ஆனதும் தன் சிறுவயதில் இப்படி விவரம் புரியாமல் இருந்ததற்கு அவன் வருத்தப்படக்கூடும்;வேதனையடையக்கூடும்।

அப்பா மீது வெறுப்பு தோன்றக்கூடும்। ஆண்மகன் அந்த அறையைவிட்டு வெளியேறுகிறான்।

'எனக்கு ஆண்மை கிடையாது। என்னாலே எதுவும் செய்ய முடியாது। நான் பேடி,'என்கிறான்। அவன் அவளிடம் கோபித்துக்கொண்டு போவதாக எண்ணி அந்தப் பெண் பரதவிக்கிறாள்।

'சந்தோஷமா இருக்கணும்னு வந்தீங்க। நான் அழுமூஞ்சி மாதிரி இருந்திட்டேன்,'என்று கூறி வலிய தன்னை மகிழ்ச்சி நிரம்பியவளாக மாற்றிக்கொள்கிறாள்।

கண்ணீர்த்துளி வர உள்ளுருக்கும் கலை ஜி.நாகராஜனுக்கு அநாயசமாக கை வருகிறது.

'உனக்கு நான் கொடுத்தது எவ்வளவு?'

'முப்பது।'

'அந்த முப்பதா உன்னை இங்கே நிறுத்தியிருக்கு।'

'நீங்க சொல்றது எனக்குப் புரியலையே?'

உம்। உங்கம்மாவுக்கு பைத்தியம் பிடிக்காட்டி, உங்கப்பாவுக்கு பிசினெஸ்லே நஷ்டம் வராட்டி, நீ இப்ப இங்கே இருக்கமாட்டே இல்லை। இல்லையா?' மெய்மறக்கச் செய்யும் ஜ÷கல்பந்தி நிகழ்ச்சியில் ஆலாபனை அலை அலையாக நம்மைத் தாக்குமே அந்த பிரமிப்பு இந்த வசனங்களைப் படிக்கும்போது. அந்தப் பெண் எவ்வளவு பேதை। குடும்பத்திற்காக நோய் வாய்ப்பட்ட அம்மாவுக்காக, சம்பாதிக்க இயலாத அப்பாவுக்காக, எட்டு வயது தம்பிக்காக சிலுவை சுமக்கிறாள்। சென்னையில் பெரியதொரு பிசினெஸ் நடத்தி, வீடும் காரும் வாங்கிப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளத்தைக் குடைக்க, மகனை கையில் பிடித்துக்கொண்டு, மகளை பஸ்ஸில் ஏற்றிவிட வந்த அவரின் முகம் ஒரு கண நேரம் என் கண்களின் முன்பு தோன்றி மறைந்தது। அவளுடைய முகத்தை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை। கதையின் தலைப்பு, 'ஆண்மை'। அந்த அப்பாதான் பேடி. ஆண்மை இல்லாதவர். இந்தக் கருத்து நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. ஆனால் கதையின் அடிநாதம் இதுதான். பத்துப் பக்கங்களில் ஒரு பேரிலக்கியத்தை படைத்துவிட்டார் ஜி.நாகராஜன். இந்தக் கதையைப் பிரசுரித்ததற்காக காலச்சுவடு பதிப்பகத்தை நாம் பாராட்டலாம்.

நவீன விருட்சம் செப்டம்பர் 2005 ஆண்டு இதழில் வெளிவந்த ஐராவதம் கட்டுரை

Comments

anujanya said…
கதையும், அதை ஐராவதம் அவர்கள் விவரிக்கும் பாணியும், அதைப் படிக்கத் தூண்டுகிறது.

//தன் மகளை சோரம் போக அனுப்புகிற கையாலாகாத அப்பா மீது கதை சொல்லிக்குக் கோபம்। // என்று ஐராவதம் எழுதிய வரிகளில் ஒரு சிறு சந்தேகம்.

'சோரம்' என்பது குடும்பப் பெண், மற்றவர்க்குத் தெரியாமல் பிறழும் நிலை. இதில் ஒரு தெரிந்த, educated decision என்ற வகையில் எடுக்கப்பட்ட நிலைக்கும் அதேதான் பெயரா?

அனுஜன்யா