Skip to main content

மூன்று கவிதைகள்

01
இசைபட...!

அனேக நேரங்களில்

அடித்துப் பிடித்து ஓடி வரும்

ஒருவனுக்கோ ஒருத்திக்கோ

காத்திருக்க முடியாமல்

விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில்

வெறுமனே இருக்க நேர்கிறது।


யாசிக்கும் கைகளுக்கு
யோசித்துக் கொடுப்பதற்குள்

பெரும்பாலும் நகர்ந்துவிடும்
பேருந்துகளிலும்
இருக்க நேர்கிறது.

முன்பைவிட விரைவாய் நகரும்

இவன் விட்டு நகர்ந்த
வரிசைகளையும்
எப்போதும் காண நேர்கிறது.

வேண்டாத நேரங்களில்

வெறுமனே இருக்கும்
சலூன் நாற்காலிகளையும்

காண நேர்கிறது
கணக்கற்ற பொழுதுகளில்.

எதிர்பாராப் பொழுதொன்றில்
இசைபட ஒன்றும் நேர்கிறது

இவளது வருகையைப் போல।



உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்கவிதை...

அச்சில் வந்த
கவிதைகளைப் பற்றி

அதிகமாய்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


காதல் தவிர்த்து
எழுதலாமே என்கிறீர்கள்।

கவிதையைப் பற்றி

எழுதுவதை தவிர் என்கிறீர்கள்.

இத்தனை கவிதைகளா
இதற்குள் என்கிறீர்கள்.
இத்தனைக்கும் எப்படி
நேரம் என்கிறீர்கள்.

இன்ஸ்பிரேசன் இதற்கெல்லாம்
எது என்கிறீர்கள்?

உணர்வுதளம் தாண்டி
ஒன்றும் வரவில்லை என்கிறீர்கள்।

அச்சுநேர்த்தி பற்றியும்


அதிகம் சொல்கிறீர்கள்।

அடர்த்தி இன்னமும்


வேண்டும் என்கிறீர்கள்.

செய்த கவிதைகளே
நிறைய என்கிறீர்கள்.

அதிகமும் படித்தல்


ஆகச் சிறந்தது என்கிறீர்கள்.

எதையும் வாய்மொழியாய்


சொல்வதற்கில்லை நான்.

என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்
கவிதை ஒன்றை
எழுதிவிட்டு வந்து உங்களை
எதிர்கொள்ளவே ஆசை।


குழந்தைக் கேள்விகள்..!

ஏன்

வீடு திரும்ப வேண்டும்?

ஏன்

சக்கரங்கள் சுழல்கின்றன?

ஏன்

அம்மா வேலைக்கு போவதில்லை?

எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்

எல்லோரும் இத்தனை வாகனங்களில்?

வளர்ந்த பின் தான்

வேலைக்கு போகணுமா?

சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?

குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை

எப்போதும்

குழந்தைகளின் கேள்விகள்।

அறிவிப்பு
நண்பர்களே,
நவீன விருட்சம் 81-வது இதழ் இன்னும் சில தினங்களில் வெளிவந்துவிடும். நவீன விருட்சத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி உரித்தாகும்.
இனிவரும் படைப்புகள் நவீன விருட்சம் 82வது இதழிற்காக தேர்ந்தெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்தக்கொள்கிறேன்.
அன்புடன் அழகியசிங்கர்

Comments

anujanya said…
மூன்று கவிதைகளுமே பிடித்திருந்தது. மூன்றும் வேறு வேறு களங்கள். வாழ்த்துக்கள் செல்வராஜ் ஜெகதீசன்

அனுஜன்யா
Anonymous said…
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அனுஜன்யா.

செல்வராஜ் ஜெகதீசன் அபுதாபி