கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணதைப்பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர்ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக்கொண்டிருந்தான்.தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை. கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் 'பைத்தியம்'. கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும்...