Skip to main content

பிரிவு என்கிற ஈரானிய படம்

அழகியசிங்கர்



ஆஸ்கர் ப்ர்கடி இயக்கிய   A Separation (பிரிவு) என்ற படத்தைப் பார்த்து விட்டு அசந்து விட்டேன்.  இது குறித்து எப்படியாவது எழுத வேண்டுமென்பது என் ஆசை.

இந்த ஈரானியப் படத்தில் என்ன விசேஷமென்றால்  மனைவி கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்கிறாள்.  பட ஆரம்பத்தில் இந்தக் காட்சி முதலில் காட்டப்படுகிறது.  இருவரும் நீதிபதி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்.  ஏன் விவகாரத்து வேண்டுமென்று கேட்கிறீர்கள் என்று  சிம்மின் (மனைவி- லைலா ஹாத்மி) பார்த்துக் கேட்கிறார்.  

'நான் என் பெண்ணுடன் ஈரானை விட்டுப் போக விரும்புகிறேன்.  என்னுடன் என் கணவர் வர விரும்பவில்லை,' என்கிறாள்.

நீதிபதி நாடாரை (கணவன் பேமென் மூடி) பார்த்துக் கேட்கிறார்.  உடனே நாடார்,  'என் அப்பா மோசமான நிலையில் இருக்கிறார். அவர் மறதி நோயால் அவதிப்படுகிறார்.  அவரை விட்டு வர முடியாது,' என்கிறான்.

  கூடவே தன் பெண்ணை மனைவியுடன் அனுப்ப முடியாது என்கிறான். உடனே தீர்ப்பு தரப்படவில்லை. இஸ்லாமிய விதிப்படி கணவர் விவகாரத்துக்குச் சம்மதித்தால்தான் விவாகரத்து கொடுக்க முடியும்.  இருவரும் நீதிமன்ற நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இயல்பாக ஈரான்  நாட்டில் விவாகரத்து  சகஜமாகக் காட்டப் படுகிறது.  சிம்மின் தனியாக அவள் பெற்றோர்களுடன் இருக்கிறாள்.  நாடார் அவன் பெண்ணுடன் இருக்கிறான்.  அவன் அப்பாவைப் பார்த்துக் கொள்ளச் சிரமப்படுகிறான்.

இந்தச் சமயத்தில்தான் நாடார் ரஸய்யா என்ற ஏழைப் பெண்ணை அப்பாவைப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறான்.  அவள் அவளுடைய பெண்ணையும் அழைத்துக் கொண்டு அங்குப் பணி புரிய வருகிறாள்.   முதல் நாளே என்னால் பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்கிறாள்.  ஒரு நாளைக்கான சம்பளத்தைக் கொடுத்துவிடச் சொல்கிறாள்.  நாடார் நான் இன்னொருவரை ஏற்பாடு பண்ணுவதற்குள் காத்திருக்கும்படி சொல்கிறான்.  

'அப்பாவைப் பார்த்துக்கொள்ள ஆண் அட்டென்டர்தான் வேண்டுமென்கிறாள்.' 

'யாரையும் நம்ப முடியாது என்கிறான்,' நாடார்.

.இரண்டாவது நாள் திரும்பவும் வருகிறாள் அவள்.  அவளுடைய ஏழ்மை அவளை வரவழைக்கிறது.  அவள் கணவன் செருப்பு தைப்பவன்.  ஒரே கடன்.  
 
அவளுக்குப் பதிலாக அவள் கணவன் வருவதாக இருந்தது.  அவன் வரவில்லை.  இரண்டாவது நாள் அவர்கள் கவனிக்காத சமயத்தில் நாடார் அப்பா வீட்டை விட்டு தெருவிற்குப்  போய்விடுகிறார்.  

பதட்டம் அடைந்த  பணிபுரியும் பெண் ரஸய்யா ஓட்டமாய் ஓடுகிறாள் அவரைக் கண்டுபிடிக்க.  செய்தித்தாள் கடையில் அவர் நின்று கொண்டிருக்கிறார்..  அவரைப் பார்த்தபடியே பதட்டத்துடன் தெருவைக் கடக்கிறாள் ரஸய்யா. வசனமே பேசாமல் அப்பாவாக நடித்திருப்பவர் மிகச் சிறப்பாக அந்தப் பாத்திரத்திற்கேற்ப நடித்திருக்கிறார்.

அடுத்தாள் பணிபுரிய ரஸய்யா வருகிறாள். தன் பெண்ணை அழைத்துக்கொண்டு.  நாடார் மாலை நேரத்தில்  வீடு திரும்புகிறான்.  வீடு பூட்டியிருக்கிறது.  சாவி பொதுவான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கிறான். இல்லை.  கதவைத் தட்டுகிறான்.  அவன் அப்பா கதவைத் திறக்க வரவில்லை.   காரில் வைத்திருக்கும் இன்னொரு சாவியை எடுத்து வந்து திறக்கிறான்.  வீடு அலங்கோலமாக இருக்கிறது.  அவன் அப்பா கட்டிலுடன் கட்டப்பட்டிருக்கிறார்.  அவர் கட்டிலிருந்து சரிந்து கீழே விழுந்து கிடக்கிறார்.  

பதறிப்போய்விடுகிறான்.  அவருக்கு நினைவு இருக்கிறதா என்று தட்டி எழுப்புகிறான். அப்பாவைத் தூக்கமுடியாமல் தூக்கி ஓய்வறைக்குள் அழைத்துக் கொண்டு போய் குளிப்பாட்டுகிறான். 

 ரஸய்யா மெதுவாக வருகிறாள்.  ஒன்றும் தெரியாதவள் மாதிரி.  நாடார் அவளைப் பார்த்துக் கடுப்படைகிறான்.   மேலும் அவள் பர்ஸில் வைத்த பணத்தைத் திருடி விட்டதாகத்  திருட்டுப் பட்டம் கொடுக்கிறான்.  ரஸய்யாவிற்கு இந்தக் குற்றத்தைச் சொல்லும்போது தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் இனிமேல் வரவேண்டாமென்று வெளியே அனுப்பி விடுகிறான். திருட்டுக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் திரும்பித்  திரும்பி வந்து கலாட்டா செய்கிறாள்.  நாடார் வேறுவழியில்லாமல் கதவைச் சாத்தி அவளைப் பிடித்துத் தள்ளி விடுகிறான்.  அவன் அவளைத் தொட்டுத் தள்ளியதைப் பார்த்து, அவள் கத்துகிறாள்.  எப்படி ஒரு முஸ்லிம் பெண்ணைத் தொடலாமென்று.

ஏற்கனவே கர்ப்பமாக இருக்கிறாள் ரஸய்ய்ô.  இந்தத் தகராறில் அவளுடைய கர்ப்பம் கலைந்து விட்டதாக நாடார் மீது குற்றம் சுமத்தப் படுகிறது.   தனக்கு அவள் கர்ப்பமாக இருப்பது தெரியாதென்றும், அவளுடைய கருக் கலைந்ததற்கு நான் காரணம் இல்லை என்றும் நாடார் வாதாடுகிறான்.  நீதிபதி அவனுடைய வாதத்தை எடுத்துக்கொள்ள வில்லை.

கோபக்காரனாக உள்ள ரஸய்யாவின் கணவன், கோபத்தில் நாடாரை அடிக்கக் கூடப் போய்விடுகிறான்.  நாடாரின் பெண் அடிக்கடி ஒரு கேள்வியை அவனைப் பார்த்துக் கேட்கிறாள்.  அவள் கர்ப்பமாக இருப்பதை அவளுடைய ஆசிரியருடன் பேசிக் கொண்டிருக்கும்போது நீ கேட்கவில்லையா கேட்கவில்லையா என்று.

நாடார் வேறுவழியில்லாமல் கேட்டதாக உண்மையை ஒப்புக் கொள்கிறான்.  ஆனால் அவன் தள்ளிவிட்டு அவளுடைய கர்ப்பம் கலையவில்லை என்று உறுதியாகக் கூறுகிறான். 

நாடார் ஒரு நாள் ஜெயிலில் கூட அடைத்து விடுகிறார்கள்.  இந்த வழக்கிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.  நாடாரின் மனைவி சிம்மின் ரஸ்ஸயாவிற்கு பணம் கொடுத்து இந்த வழக்கை முடித்து விடலாமென்று தீர்மானிக்கிறாள்.  இதற்காக சிம்மின் காரை அவள் விற்பதற்குத் தயாராக இருக்கிறாள்.

இந்த வழக்கை சுமுகமாக முடிப்பதற்கு ரஸய்யாவின் வீட்டிற்கு வருகிறார்கள்.  பணம் கொடுப்பதற்கு முன் ஒரே ஒரு கேள்வியை நாடார் கேட்கிறான்.  ரஸய்யாவின் கர்ப்பம் கலைவதற்குத் தான் காரணமில்லை என்று கூறுகிறான்.  இது ரஸய்யாவிற்கே தெரியும்.  அது உண்மையாக இருந்தால் ரஸய்யா குரானை வைத்து சத்தியம் செய்ய வேண்டும் என்கிறான்.

ரஸய்யா தீவிர மத நம்பிக்கை உள்ளவள்.  குரான் வைத்து சத்தியம் செய்ய வேண்டுமென்று சொன்னதைக் கேட்டு அழுது விடுகிறாள்.  உண்மையில் தெருவில் சென்று விடுகிற நாடாரின் அப்பாவை அழைத்து வரும்போது ரஸய்யாவின் மீது கார் இடித்து அதனால் பிரச்சினை ஆகிறது.

ரஸய்யா குரான் மீது பொய்ச் சத்தியம் வைக்க விரும்பவில்லை.  ரஸய்யாவின் கணவன் ஆத்திரத்தில் கத்துகிறான்.  அந்த வீட்டைவிட்டு வெளியே போகிறான். 

நாடாரும் அவன் மனைவியும் திரும்பவும் அவர்கள் கார் வைத்திருக்கும் இடத்திற்கு வரும்போது கார் கண்ணாடி நொறுங்கியிருக்கிறது

திரும்பவும் இந்தப் படம் முடியும்போது நீதிபதி முன் நாடாரும் சிம்மின் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்களுடைய பெண்ணும் அவர்களுடன் இருக்கிறாள்.  

நீதிபதி அவர்கள் பெண்ணைப் பார்த்துக் கேட்கிறாள்.

'நீ முடிவு பண்ணிவிட்டாயா?  யாருடன் இருக்கிறது,' என்று. 

'முடிவு பண்ணிவிட்டேன்'  என்கிறாள்.

பெற்றோர்கள் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  

பெண் சொல்வதற்குத் தயங்குகிறாள்.  நீதிபதி அவர்கள் இருவரையும் பார்த்து, கொஞ்சம் வெளியில் இருங்கள் என்று அவர்களை அனுப்பிவிடுகிறார்.

நீதிமன்றம்  வராந்தாவில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.  

இத்துடன் படம் முடிவடைந்து விடுகிறது.   மனதை உலுக்குகிற ஈரான் படம் இது.   ஒரு காட்சியைக் கூட வீணடிக்கவில்லை.  இந்தப் படத்தில் இசை இல்லை என்பதே ஒரு குறையாக இல்லை.  2012ல் வெளிவந்த இப்படம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. படத்தை இயக்கிய  ஆஸ்கர் ப்ர்கடிதான் கதை வசனமும் எழுதி உள்ளார்.  

  ப்ரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பலமுறை பார்த்து ரசித்தேன். 



Comments