Skip to main content

பிரபஞ்சனின் பகல் நேர நாடகம்


அழகியசிங்கர்







பிரபஞ்சனின் ஒரு பகல் நேர நாடகம் என்ற சிறுகதை 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது.   இதில் தன் அனுபவத்தைக் கதையாக மாற்றி உள்ளார். ஒரு திறமையான எழுத்தாளர் எதையும் சிறப்பாக எழுதக் கூடியவர் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.

பொதுவாக இங்கே ஒரு கதையைச் சுருக்கமாக சொல்லிவிட்டு பின் அக்கதையைக் குறித்துத் தோன்றுவதைக் குறிப்பிடுகிறேன். 8 பக்கங்கள் கொண்ட கதை.

முதலில் ஆரம்பிக்கும்போது நட்ராஜன்  குறிப்பிடப்படாத ஊரிலுள்ள எம்பளாயிமென்டில் பதிவு செய்ய ருகிறான்.   புலவர் பட்டம் பெற்றிருக்கிற நட்ராஜன் அந்தப் படிப்பைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைக்கிறான்.

பஸ்ஸில் வந்து இறங்குகிறான் நட்ராஜன்.  அதை இப்படி வர்ணிக்கிறார் பிரபஞ்சன்.

'நட்ராஜனை மட்டும் இறக்கி விட்டு விட்டு நகர்ந்தது பஸ்.  ஓடும் பஸ்ஸின் பின்புறத்தையும் அந்தக் காலை வெயிலில் மினுமினுக்கும் நீண்ட தார் ரோட்டையும் பார்த்துக்கொண்டு கொஞ்ச நாழி அப்படியே நின்றான் நடராஜன்.

பக்கத்தில் டீ கடை இருக்கிறது.  டீ கடைப் பக்கத்தில் சைக்கிள் கடையும் அதன் பக்கத்தில் வெற்றிலை பாக்குக் கடையும் இருக்கிறது.  வெற்றிலை பாக்குக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைத்துக் கொண்டே போக வேண்டிய ஆபிஸ் பேரை சொல்லி வழி கேட்கிறான்.

இந்த இடத்தில் எந்த இடத்திற்குப் போகப் போகிறான் என்ற விபரத்தைக் கதாசிரியர் ஆரம்பத்தில் கூறவில்லை.  குறிப்பிடப்படாத ஊரிலுள்ள எம்பளாயிமென்ட் அலுவலகத்தில் தனது புலவர் படிப்பைப் பதிவு செய்ய போகிறான்.  எல்லோரும் வரிசையாக நிற்கிறார்கள்.  எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்தவர்கள், எஸ்.எஸ்.எல்.சி பெயில் ஆனவர்கள், பியூசிடிகிரி படித்தவர்கள் என்றெல்லாம்.  இதில் புலவர் படித்த நட்ராஜனை எங்கே நிற்க வைப்பது என்று காக்கிச் சட்டைக் காரனுக்குத் தெரியவில்லை.  

அந்த ஊர் கடலூர் அல்ல என்பதை ஒருவர் பேசுகிற வசனத்தின் மூலம் காட்டுகிறார்.  

'இன்னாபா ஒண்ணும் தெரியாதவனாட்ட கார்டு காடடறே.  இது கடலூர் எம்பிளாய்மண்டுல ரிஜிஸ்டரான செத்திபிகேட்டுல்ல?' என்கிறான் காக்கி சட்டை. 

ஒரு பக்கம் இந்தக் கூத்தெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற நட்ராஜன் தன் வீட்டு ஞாபகம் வர அங்கே போய் விடுகிறான். அவன் மனைவியைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நினைக்கிறான்

நட்ராஜன் எஸ.எஸ்.எல்.சி பாஸ் செய்தவர்கள் வரிசையில் வந்து நிற்கிறான்.  வரிசை நகர்கிறது.  பதிவு செய்கிற க்ளார்க் முன்னால் தன்னுடைய  காகிதங்களைக் காட்டுகிறான்.  

அவன்,  'நீங்கப் புலவரில்ல... எஸ்எஸ்எல.சி கான்டிடேட்ஸ்கூட ஏன் சார் வந்து நிக்கிறீங்கஒங்கள மாதிரி ஏஜ÷கேட்ஸ இப்படி இருந்தா என்ன சார் அர்த்தம். போங்க போங்க அந்த டிவிஷனுக்குப் போங்க, ' என்று துரத்தி அடிக்கப்படுகிறான்.

இன்னொரு இடத்தில் போய் நிற்கிறான்.  அவரும் நட்ராஜனை துரத்தி அடிக்கிறார். 
'யார்கிட்டே போகுது?' என்று நட்ராஜன் பணிவாகக் கேட்கிறான்.

'ஆபீஸரைப் போய்ப் பார்,' என்கிறார். 
அவரைப் பற்றி விசாரிக்கும்போது கதாசிரியர், தன் எண்ணெய் வழியும் மூஞ்சை ஒரு பைலுக்குள் நுழைத்துக் கொண்டார் என்கிறார்.  இங்கே எந்தவித உணர்ச்சியும் வெளிப்படாமல் ஒரு அலுவலகத்தில் இயந்திரத்தனமாக நடப்பதை அப்படியே கொண்டு வருகிறார்.  

எதோ பெயர் போட்ட ஆபிஸர் என்ற பெயர் போட்ட அறை முன் நிற்கிறான் நட்ராஜன்.  அந்த அறை முன் பாப் வெட்டிக்கொண்ட பெண்ணைப் பார்த்து ரசிக்கிறான். 

''ஆபீஸர் இப்போதுதான் வெளியே போனார் 3 மணி ஆகும்,'  என்று இங்கிலீஷ்காரர்களின் தமிழில் சொல்லி, அழகாகச் சிரித்தாள் அவள்.  

நட்ராஜன் வெறுத்து விட்டான். மணி ஒன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தது.  இந்த இடத்தில் அவனைப் பற்றிய வர்ணனை வருகிறது. தலையை விண் விண்ணென்று தெறித்தது.  நேராக டீ கடையை நோக்கி நடந்தான்.  சோறு சாப்பிடத் தோன்றவில்லை.  பசித்தது. ஒரு வயதானவரும் ஒரு சிறுமியும் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  இவன் ரெண்டு வடையை மென்று டீயைக் குடித்தான்.  பெஞ்சின் மேல் உட்கார்ந்துகொண்டு புகைக்க ஆரம்பித்தான். 

மூன்றரை மணிக்குமேல் ஆபீஸர் ஸ்கூட்டரிலிருந்து வந்து இறங்குகிறார்.  அவர் விறைப்பாகக் கம்பீரமாக ஆபீசுக்குற் நுழைந்தார்.நட்ராஜன் அவர் கூடவே போனான்.  உள்ளே அதே டைப்பிஸ்ட். அதே அழகான சிரிப்போடு அவனை வரவேற்றாள். 

இந்த இடத்தில் கதாசிரியர் ஒன்றைக் கூறுகிறார். வெயிலின் உஷ்ணமான சூழ்நிலையில் இங்கு மட்டும் குளிர்ச்சியாய் இருப்பதற்கு இவள் சிரிப்பும் ஒரு காரணமாக இவனுக்குப் பட்டது.

கொஞ்ச நேரம் காத்திருக்கிறான்.  அங்கே உள்ள சூழ்நிலை வர்ணிக்கிறார் கதாசிரியர் நட்ராஜன் ராஜன் பார்வையில்.   டைப்பிஸ்ட் கொடி மாதிரி அசைந்து அசைந்து அறைக்குள் போய் மிக நிதானமாக வெளியில் வந்தாள் என்று ஒரு வர்ணனை.

ஆபீஸர் அறைக்குள் நுழைகிறான் நடராஜன். அந்தப் பெரிய அறையில் நன்றாகச் சாய்ந்து ஈஸிசேரில் இருப்பதுமாதிரி இருந்தார் அவர். 

நட்ராஜன் காகிதங்களை அவர் முன் நகர்த்தி,  'நான் புலவர் பாஸ் செய்திருக்கிறேன், தமிழ் பண்டிட்டாகப் பதிஞ்சுக்கலாம்னு'  நினைக்கிறேன் என்கிறான். 

அவர் துரைசாமி என்ற கீழ்நிலை சிம்பந்தியைக் கூப்பிட்டுக் காகிதத்தில் ஏதே எழுதி அவனிடம் கொடுக்கிறார்.  போய் வந்த களப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். காலை நீட்டி நன்றாகச் சாய்ந்து அந்த வசதியான நாற்காலியில் படுத்தார்.  கண்களை மூடினார். 

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  ஆபீஸர் ஒரு வார்த்தை கூட நடராஜனுடன் பேசவில்லை. அசதி ஒரு காரணமாக இருக்கலாம்.

அவன் வெளியே வர ஐந்து மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.  ஒரு புளியமரத்து நிழ அடக்கி வைத்த மூத்திரம் போய்விட்டு பெட்டிக் கடைக்குப் போய் சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு தான் போக வேண்டிய ஊருக்கு, பஸ்û1 எதிர்கொண்டு நிற்கிறான்.

இந்தக் கதையில் நட்ராஜன் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறான் என்று தெரியவில்லை திரும்பிப் போகும்போதும் எந்த ஊருக்குப் போகிறான் என்பது தெரியவில்லை.

        அவன் படிப்புச் சான்றுகளைப் பதிவு செய்யும் இடம் கடலூர் இல்லை என்பதை இருவர் பேசும் உரையாடல் மூலம் கதாசிரியர் தெரியப்படுத்துகிறார்.  பிரபஞ்சனின் வாழ்கை அனுபவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

  அவன் முன் தென்படும் மனிதர்கள் இயந்திரத்தனமாகத் தென்படும்போதும் அவன் உற்சாகமாக இருக்கிறான்.  

         டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ள கதைகளில் இது முதல் தொகுப்பில் உள்ள கதை. இது ஆரம்பகாலக் கதையாக இருக்குமென்று தோன்றுகிறது. அதையே சிறப்பாக எழுதி உள்ளார்.


Comments