நான் பொதுவாக ஒவ்வொரு எழுத்தாளரின் நினைவு நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை. சில தினங்களுக்கு முன்னால் என் நண்பர் உதவியால் நகுலனின் நினைவுநாள் இன்று என்பதை அறிந்தேன். 2007ஆம் ஆண்டு இறந்தார். அவர் இறந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. 86வது வயதில் அவர் இறந்தார்.
'சென்னைக்கு நகுலன் வந்திருக்கிறார்,' என்ற தகவலை நண்பர் ஐராவதம் அவர்களிடம் சொன்னேன். நாங்கள் எப்போதும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் சந்திப்பது வழக்கம்.
'லீவு போடலாமய்யா இன்னிக்கு,' என்றார் அவர்
'சரி" என்றேன். இருவரும் அசோக்நகரில் நகுலனை சந்திக்கப் புறப்பட்டோம். நகுலன் அவருடைய சகோதரர் வீட்டில் தங்கி இருந்தார்.
நகுலன் எப்போதுமே அதிர்ந்து பேசத் தெரியாதவர். அவர் ஒரு சமயத்தில் ஒருவருடன்தான் பேச முடியும். இன்னொருவர் கேட்க வேண்டுமென்றால் கிட்டே நெருங்கி வரவேண்டும்.
அன்று பேசிக்கொண்டே இருந்தோம். நகுலனைப் பேட்டி எடுத்தோம். ஐராவதம்தான் பேட்டி எடுத்தார். நான் நோட்புக்கில் அவர் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டிருந்தேன். இறுதியில் அந்தப் பேட்டியை வெளியிட வேண்டாமென்று சொல் லி விட்டார். நோட்டில் எழுதி வைத்த அந்தப் பேட்டி என் கண்ணில் இன்று வரை படவில்லை.
விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்பும் போது தபால் தலை வைத்து அனுப்புவார். பிரசுரம் செய்யாவிட்டால் திருப்பி அனுப்பி விடுங்கள் என்பார்.
'நீங்கள் எது எழுதினாலும் நான் பிரசுரம் செய்வேன்,' என்று அவருக்குப் பதில் எழுதுவேன்.
நில்
போ
வா
வா
போ
நில்
போ
வா
நில்
நில் போ வா?
என்று நகுலன் கவிதையைப் பிரசுரம் செய்து விட்டு மாட்டிக்கொண்டு விட்டேன். எல்லோரும் இது எப்படிக் கவிதை என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
நான் நகுலனிடம் பதில் அளிக்கும்படி கேட்டேன். அவர் இரண்டரைப் பக்கம் பதில் அனுப்பி இருந்தார். அதையும் பிரசுரம் செய்தேன்.
எல்லோரும் கிண்டல் செய்கிற 'ராமச்சந்திரன்' என்ற கவிதை. இது அவருடைய கோட் . ஸ்டாண்ட் கவிதைகள் என்ற் புத்தகத்தில் வெளிவந்துள்ளது. இது 'ழ" வெளியீடாக வந்த புத்தகம். அந்தக் கவிதை இதோ:
ராமச்சந்திரனா
“ என்று கேட்டேன்”
ராமச்சந்திரன்
“ என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை.
இந்தக் கவிதையைப் படித்துவிட்டு பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தக் கவிதை ஒரு மனநிலையை விவரிக்கிறது. எல்லா உறவு நிலையிலும் ஆழமில்லை என்று விவரிக்கிறது. எனக்குப் பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று.
கவிதைகளைத் தவிர அவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று பலவும் எழுதி உள்ளார். இரு நீண்ட கவிதைகள் என்ற புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன். ரூ.12தான் புத்தகம் விலை. மிகவும் முக்கியமான புத்தகம் அது. ஆனால் யாரும் வாங்கி ஆதரவு கொடுக்கவில்லை. அந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நெருப்பு. பெரும்பாலான கவிதைப் பிரதிகள் எரிந்து சாம்பலாகிவிட்டன.
நகுலனைப் பற்றி அதிகமாகச் சொல்லலாம். முடிந்த வரைச் சொல்ல முயல்கிறேன் .
Comments