அழகியசிங்கர்
இது என் 13வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.
கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமஙூருக்க முடியாது.
எதிர்பாராத தகவல்?
நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி , தினசரி எல்லாம் பார்ப்பதில்லை , படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோம். நான் புத்தகங்களுடன் ஐக்கியமானேன். அவள் ஜவ்வரிசி வடாம் இடுவது என்று தீர்மானித்து மும்முரமாக அதில் ஈடுபட்டிருந்தாள். ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்தாள். வெயில் படுகிற மாதிரி பால்கனிக்கு இழுத்துக்கொண்டு வந்தாள். பின் மடமடவென்று ஜவ்வரிசி வடத்தை இட்டாள்.
“ அலாதியான மகிழ்ச்சி. ஜவ்வரிசி வடாம் இடுவதற்கு முன் என் நாக்கில் அதன் மாவைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள். புளிப்பு உரைப்பு சரியாக இருக்கிறதென்று சொன்னேன்.
ஒவ்வொரு பையிலும் பத்து பன்னிரண்டு புத்தகங்கள் படிப்பதற்காக வைத்திருப்பேன். இதுமாதிரி 6 பைகள் நிறையப் புத்தகங்கள். ஒரு பையை எடுத்து வைத்துக்கொண்டேன். அந்தப் பையிலிருந்து ஒரு புத்தகத்தில் சில பக்கங்களைப் படித்துவிட்டு வைத்துவிடுவேன். பிறகு இன்னொரு புத்தகம். இப்படியாக நான் புத்தகம் படிப்பது போய்க் கொண்டிருக்கும். இன்று சாப்பாடு முடிந்தவுடன் சில மணி நேரம் தூங்கலாமென்று போய்விட்டேன்.
பொழுது மெதுவாக நகர்ந்து நகர்ந்து நடுப்பகலைத் தாண்டி இரவும் வந்து விட்டது. நாங்கள் குறிப்பாக அதைப் பற்றிப் பேசவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. நான் எழுதற கதையெல்லாம் அதைப் பற்றியே எழுதுகிறேன் என்று பலர் குற்றம் சாட்டி உள்ளார்கள். அதனால் ஒரு கதையாவது அதைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுதலாமென்று நினைத்தேன்.
இரவு தூங்குவதற்குப் போகும்போது ஜவ்வரிசி வடாம் போட்டது பற்றி பெண்ணிடம் சொல்லலாமா என்று மனைவி கேட்டாள்.
சரி என்றேன்.
“ பெண்ணிற்கு ஆவலுடன் தொலைப்பேசி செய்தாள். பெண் தொலைப்பேசியை எடுத்தாள். அம்மா இன்றைக்கு 768. மரணம் 100 என்றாள் பெண்.
Comments