Skip to main content

துளி - 68 தீபாவளி மலரும் நானும்...2



அழகியசிங்கர்






எப்போதும் நான் தீபாவளி மலர்களை வாங்குபவன் கிடையாது.  பல ஆண்டுகளாக எனக்குத் தீபாவளி மலர் என்ற நினைப்பே இருக்காது.  ஆனால் நான் எப்போது தீபாவளி மலர்களைப் பார்க்கவும் வாங்கி வைத்துக்கொள்ளவும் நினைப்பு ஏற்பட்டது.  யார் மூலம் இது ஏற்பட்டது?  ஐராவதம் மூலம்தான்.  அவரும் தீபாவளி மலர்களை வாங்கிப் படியுங்கள் என்று சொன்னதே கிடையாது.  உண்மையில் அவர் தீபாவளி மலர்களைத் தீபாவளி அன்று வாங்குவதே கிடையாது.  அப்படியே வாங்கினாலும் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் தீபாவளி மலர்களைத்தான் வாங்குவார்.
  
ஆனால் அவர் லென்டிங் லைப்ரரியில் தீபாவளி மலர்களைப் படித்துவிட்டுக் கொடுத்து விடுவார்.  எந்த ஆண்டு தீபாவளி மலர் என்ற கணக்கெல்லாம் கிடையாது.  அடிக்கடி அவர் வீட்டிற்குப் போவேன்.  அவர் பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அதைப் பற்றி எழுதுவார்.  அதில் வெளிவந்திருக்கும் சிறுகதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருப்பார்.  என்னிடம்தான் விருட்சத்தில் பிரசுரிக்கக் கொடுப்பார்.  அப்போதுதான் எனக்கும் தீபாவளி மலர்கள் ஒன்றிரண்டு வாங்கவேண்டுமென்று தோன்றியது.  

ஐராவதம் உலக இலக்கியமெல்லாம் அறிந்தவர்.  சிறந்த சிறுகதை ஆசிரியர்.  ஏன் சம்பத் என்ற எழுத்தாளரை விட சிறந்த சிறுகதை எழுத்தாளர்.  அவரை யாரும் கொண்டாடவில்லை.  அசோகமித்திரன் அவரை மதிப்பார்.  அவரிடமிருந்து சில எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார்.  

ஆனால் எந்தத் தீபாவளி மலரிலும் அவருடைய படைப்புகளைக் கேட்டதே இல்லை.  அவர் கவிதை எழுதுவார், கதை எழுதித் தருவார், கட்டுரை எழுதுவார், ஏன் மொழிபெயர்த்தும் கொடுப்பார்.  ஆனால் எந்தத் தீபாவளி மலரிலும் அவர் படைப்பு வந்ததில்லை.  ஏன்?  ஒரு தீபாவளி மலரைத் தயாரிக்க பத்திரிகை ஆசிரியர் முக்கியப் பங்கு வகுக்கிறார்கள்.  யாருக்கும் அவரிடமிருந்து எழுதி வாங்கவேண்டுமென்று தோன்றவில்லை.  இதுதான் கொடுமை.

ஆனாலும் தீபாவளி மலர்களை லென்டில் லைப்பரரியிலிருந்து வாங்கி வந்து புரட்டிப் புரட்டிப் பார்க்கும் ஆவலை என்னால் நம்ப முடியவில்லை.  அவரைப் பார்த்துக்கொண்டுதான் நான் தீபாவளி மலர்களை வாங்கி வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.  தீபாவளி மலர்கள் தயாரித்த ஆசிரியர்கள் எல்லோரும் ஐராவதத்திற்குத் துரோகம் செய்து விட்டதாக நான் நினைப்பேன்.

ஆனால் ஒருபோதும் இது குறித்து அவர் பொருட்படுத்தியது இல்லை.  பல தீபாவளி மலர்களில் ஒரே எழுத்தாளரின் பல படைப்புகள் வந்திருக்கின்றன.  இதையெல்லாம் ஐராவதம் கூறக் கேட்டிருக்கிறேன்.  அசோகமித்திரன் எத்தனை தீபாவளி மலர்களில் கதைகள் எழுதியிருக்கிறார் என்று சொல்வார்.  அவர் தன்னுடைய படைப்புகள் வரவேண்டுமென்று லாபி பண்ணியது கிடையாது.  ஆனால் தீபாவளி மலர்களைப் பார்க்கும்போது நம் படைப்புகள் ஒரு ஓரமாவது வரவேண்டுமென்று நினைக்காமல் அவர் இருந்திருப்பாரா?  
 


Comments