Skip to main content

இருபத்தாறாம் நாளின் வாசிப்பனுபவம் (27.09.2019)




அழகியசிங்கர்






க நா சுப்ரமண்யம் நாவலான 'பெரிய மனிதன்' புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  85 பக்கங்கள் கொண்ட புத்தகம். ஆனால் அவ்வளவு எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாத நாவல் இது.
குறைவான பக்கங்களைக் கொண்ட நாவல்களை க நா சு எழுதித் தள்ளியிருக்கிறார்.  என் கையில் இந்தப் புத்தகம் பல ஆண்டுகளாக இருந்தாலும் படிக்கத் துணியாத புத்தகமாக இது இருந்தது.  க நா சு நாவல்களைப் படிக்கும்போது நாம் வேற ஒரு நிலைக்குத் தயாராக வேண்டும். நாவல் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரிய மனிதன் என்ற இந்த நாவலில் யார் பெரிய மனிதன் என்ற கேள்வியை எழுப்புகிறார்.  எப்படிப்பட்டவர்கள் பெரிய மனிதனாக மாறுகிறார்கள் என்ற ஐயமும் எழுகிறது.  சமூகத்தில் இன்றுள்ள நிலையில், தவறு செய்யாமல் பொருளாதார ரீதியில் முன்னேறவும் முடியாது என்கிறார் க.நா.சு.  அவர் கூற்று இன்றுவரை உண்மைதான். 
பெரிய மனிதனாக இருக்க வேண்டியவன் தவறு செய்யாமல் பொருளாதார ரீதியில் முன்னேறவும் முடியாது.  தவறு செய்யலாம் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற பொருளாதார யுகத் தத்துவம் இருக்கிறதே, அது பயங்கரமானது என்கிறார் க நா சு.  நாம் பார்க்கிறோம் இன்று கூட இது உண்மையாக இருக்கிறது. 
சமுதாயத்தில் பெரிய மனிதனாக அறிமுகம் ஆகிறவர்களெல்லாம் அயோக்கியனாக இருக்கிறான் என்ற தத்துவத்தை க நா சு 1959 ஆண்டிலேயே கண்டுபிடித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இந்த நாவலில் நாத் என்பவன் ஒரு சுயசரிதமாக டைரி குறிப்பாக எழுதுகிறான்.  உண்மையில் அவன் எழுத்தாளன் இல்லை.
இந்த நாவலில் ஒருவர் 25 அல்லது 30 பக்கங்கள் படித்து மீண்டு வந்தால்தான் மேலும் படிக்க முடியும்.  முதல் 30 பக்கங்களில் இது கட்டுரையா நாவலா என்பது தெரியவில்லை.  கட்டுரை மாதிரி யோசித்துப் பார்த்தால் கட்டுரை மாதிரியும் தெரியவில்லை.
ஒரு நாவல் எப்படியும் எழுதலாம் என்பதற்கு இந்த நாவல் உதாரணம்.  படிக்கிறவர்களின் ஆர்வத்தைக் கட்டுடைத்தல்தான்  இந்த நாவல்.    
மிஸ்டர் நாத் என்பவனுக்கு 45 வயது முடிந்து  விடுகிறது.  தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்க்கிறான்.  எல்லோரும் குறிப்பிடுவதுபோல் சமூகத்தில் அவன் பெரிய மனிதன்.  பெரிய மனிதனாகவே எப்போதும் இருப்பதற்கு அவன் தவறு செய்து விடுகிறான்.  இந்த 46வது வயதில்தான் அதைப் பற்றி யோசிக்கிறான்.
அவன் மனைவியின் பெயர் மீனாட்சி.  அவள் ஏற்கனவே திருமணமாகி விதவை ஆகிவிட்டாள்.  அவளுக்கு ஏற்கனவே முதல் கணவன் மூலம் ஒரு பையன் இருக்கிறான்.  இருந்தும் அவளைத் துணிந்து திருமணம் செய்து கொள்கிறான் நாத்.  
மீனாட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்கிறான் நாத்.  
'நான் அவளை (மீனாட்சியை) மணம் செய்துகொண்டது காதலால் அல்ல.  வேறு ஏதோ காரணத்தினால்தான் என்பதை அவள் ஊஹித்துக் கொண்டிருக்கலாம்.  அதனால் தான் அவளுக்கு என்னுடன் வாழ்ந்த வாழ்வு சௌகரியமான வாழ்வாக இருந்ததே தவிர, உண்மையில் இன்பம் அளிப்பதாக இல்லை.'
இந்த இடத்தில் க.நாசு நாத் பாத்திரம் மூலம் பெண்களின் சுபாவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 
'பெண்கள் சுபாவத்தில் இரண்டு வகையுண்டு.  ஒரு வகையினர் எல்லா விஷயங்களையும் உரக்க வாய்விட்டுப் பேசியே தீர்த்துக் கட்டிவிடுவார்கள்.  வார்த்தைகளுக்கு அடங்காத விஷயங்களைக் கண்ணீரால் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.' 
நாத்திற்கு மீனாட்சி மூலம் பிறந்த குழந்தைகளில் மூத்தவள் மைதிலி, இரண்டாவது ராஜாராமன் என்கிற பையன், மூன்றாவது ஒரு பெண்.  நளினிக்கு வயது பதினாறுதான் ஆகிறது.  அதற்குப்பின் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன.  அதற்குப் பிறகு பிறந்தவன் ராமநாதன்.  மைதிலி, ராஜாராம் பற்றிய குறிப்புகள்தான் இந்த நாவல் முழுவதும் வருகிறது. மற்ற பிள்ளைகளான நளினி, இராமநாதனை பின்னால் குறிப்பிடப்படவில்லை.   அதேபோல் மீனாட்சி முதல் கணவன் மூலம் பிறந்த பையன்  வினாயகத்தை நாத்தால் சரிவர அறிந்துகொள்ள முடியவில்லை.
மூன்று நிகழ்ச்சிகளை நாத் எழுதுகிறான் அவனுடைய சுய சரிதத்தில்.  முதல் நிகழ்ச்சி ஒரு தடவை பாரிஸ÷க்குப் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தில் ஏதோ பழுது ஏற்பட்டு, நாத்தும் இன்னொருவரும் மோதிக்கொண்டு விழுந்து கிடக்கிறார்கள்.  அவர்கள் இருவருக்கும் சொற்பக் காயங்கள் மட்டுமே.  அவர்களுடன் பயணம் ஆன இரண்டு பயணிகள் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்கள்.  எத்தனையோ தடவைகளில் ஆச்சரியமாக உயிர் தப்பியது என்பது தன் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தப்பட்டதாக நினைக்கிறான்.
இரண்டாவது நிகழ்ச்சி.  ஒரு தடவை நாத்தின் பணம் ஒரு சினிமா எடுக்கப் பயன் பட்டது.  இந்த மாதிரி சந்தர்ப்பத்தை நாத்தின் தகப்பனார் எப்படிப் பயன்படுத்தி இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்தப் பணத்தை ஒன்றுக்கு ஒன்றரையாகப் பெருக்குவதற்குத் தவிர. இந்த முயற்சி எதனாலும் பயன்படப் போவதில்லை என்று நினைக்கிறான் நாத்.
ஒரு பெரிய மனிதர் வீட்டுப் பெண் காரியதரிசியாக நாத்திற்கு இருந்தாள்.  அவள் முத்தப் பெண் மைதிலி மாதிரி இருந்தாள்.  அவளை நாத் தன் பெண் போல் நடத்தத் தயாராய் இருந்தான்.  அந்தப் பெண் வேறுவிதமாக நினைத்தாள்.  இரண்டு பங்கு வயதான நாத்தை தன் காதலனாக அங்கீகரிக்க அவள் தயாராக இருப்பதுபோல் இருந்தது.  அதனால் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டான் நாத்.  அவனுடைய பாங்க் பணத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம். 
வியாபாரம் விருத்தி அடைந்து வரும் காலத்தில் நாத்தின் வாழ்க்கையில் ஒரு முட்டாள் குறுக்கிட்டான்.  அவனை முட்டாள் என்று சொல்வது தவறு.  அவன் மகா புத்திசாலி. 1950 ல் செய்ய வேண்டிய காரியத்தை 1935 லேயே செய்யச் சொல்லி வற்புறுத்துவான்.  அவன் சண்டைக்காரன் பிடித்த பிடியை லேசில் விட மாட்டான்.  டைரக்டல் போர்டில் தொல்லை கொடுப்பான்.  அவனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்று நினைத்துத் தீர்த்துக் கட்டிவிடுகிறான்.  நாத் பற்றி யாருக்கும் சந்தேகம் வரவிலலை.  கொலை செய்ததை ருஜ÷ப்படுத்த முடியவில்லை.  அன்றிலிருந்து மீனாட்சி நாத்திடமிருந்து ஒதுங்கி நின்று வாழத் தொடங்கினாள்.  நாத்தின் வாழ்க்கையில் அன்பு என்கிற அம்சம் சிறிதும் இல்லாமல் போனதற்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறான்.
இந்த 45வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நாத் தன் வாழ்நாளில் குறுக்கிட்ட சீனுவாசனை அப்புறப்படுத்திய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கு உறுத்தலாக இருக்கிறது.   அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.  
அந்த சீனுவாசனுக்கு ஒரு பையன் இருக்கிறான்.  நாத்தின் பெண் மைதிலிக்கு திருமணம் செய்து வைத்துவிடலாமென்று நினைக்கிறான்.   அவ்வாறு செய்துவிட்டால் கொலைகாரன் என்ற உணர்ச்சி தனக்குப் போய்விடும் என்று நினைக்கிறான் நாத்.  இப்படி யோசிக்கும்போது அவன் மனது நிம்மதி அடைகிறது.
தொடர்ந்து கவனமாக இந்த நாவலை ஒருவர் வாசித்துக்கொண்டிருக்க வேண்டும்.  மனசாட்சியைத் திருப்பிப் பார்க்கிற ஒரு நிகழ்வாக 46வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாத்திற்குத் தோன்றுகிறது. 
இந்த நாவல் கைப்பிரதியாக இருக்கும்போது ஒரு நண்பரிடம் படிக்கக் கொடுத்திருக்கிறார் க நா சு.  üஇது ஒரு மனிதக் குணத்தைத் தகர்க்கும் கதை,ý என்று நண்பர் கூறியிருக்கிறார்.  க.நாசு அந்த நண்பரிடம், üஅப்படி இருந்தால் அது இக்காலத்து நிலையைப் பூரணமாகப் பிரதிபலிப்பதாக ஆகும்ý என்று கூறி உள்ளார்.
குறைவான பக்கங்கள் ஆனால் அதிக கனமான ஒரு விஷயத்தைக் கையாண்டுள்ளார்.   
திருவல்லிக்கேணியில் உள்ள வேல் புத்தக நிலையத்திலிருந்த இந்த நாவல் முதல் பதிப்பாக 1959ல் வெளிவந்துள்ளது.  அப்போது விலை : ரூ.1.50.
 
 

Comments