Skip to main content

இருபத்துநான்காம் நாளின் வாசிப்பனுபவம் (24.09.2019)





அழகியசிங்கர்





கடந்த சில தினங்களாக நான் சில புத்தகங்களை முழுவதும் முடிக்க முடியாமல் திணறுகிறேன்.  இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறேன்.  இன்று நான் படிக்க எடுத்துக்கொண்ட புத்தகம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  சின்ன அண்ணாமலை எழுதிய புத்தகம்.  நான் இந்தப் புத்தகத்தை வாங்கிய தேதி. கிழமையைப் புத்தகத்திலேயே குறித்து வைத்திருக்கிறேன்.  வாங்கிய தேதி 05.10.2015 - திங்கட் கிழமை.  கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் முடிந்து விட்டன.

படிக்காமலேயே இந்தப் புத்தகத்தை வைத்திருக்கிறேன்.  இன்னும் பல புத்தகங்கள் பல ஆண்டுகளாகப் படிக்காமல் வைத்திருக்கிறேன்.  நான் படித்த புத்தகங்களில் பல படித்தும் மறந்து போயிருக்கிறேன்.  

கட்டாயம் படிக்க வேண்டுமென்ற நிபந்தனையின் (நானே ஏற்படுத்திக்கொண்டது). பேரில்தான் இந்தப் புத்தகங்களை எல்லாம் எடுத்து வாசிக்கிறேன்.  ஒரு புத்தகம் வாங்கினால் நாம் எப்போது வாசிக்கப் போகிறோம் என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும். 

இன்று பலர் புத்தகம் வாங்குவதுமில்லை, படிப்பதும் இல்லை. ஜாலியாக இருக்கிறார்கள்.  என்னைப் பார்க்க வரும் உறவினர்கள் எல்லோரும் இவன் ஏன் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அழுகிறான் என்று நினைக்கத் தோன்றும்.  ஆனால் அவர்கள் நினைப்பது போல் இல்லை.  வாழ்க்கையில் அவர்கள் எதையோ தவற விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பேன்.

சொன்னால் நம்ப மாட்டேன் புத்தகத்தில் நான் இதுவரை 110பக்கங்கள் படித்துவிட்டேன்.  இதுவரை படித்ததைப் பற்றி எதாவது சொல்வோம் என்றுதான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.  இந்தப் புத்தகத்தில் பாரதி நிதி வரை 110 பக்கங்கள் படித்து விட்டேன்.  30 அத்தியாயங்கள் படித்து விட்டேன். இன்னும் 34 அத்தியாயங்கள் படிக்க வேண்டும்.  கிட்டத்தட்ட 82 பக்கங்கள் படிக்க வேண்டும். நாளை படித்துவிட்டு அதைப் பற்றியும் எழுதுகிறேன்.

முதல் அத்தியாயம் காந்தி தரிசனம் என்ற பெயரில் காந்தியைப் பார்த்த அனுபவத்தை எழுதுகிறார்.  கார் ஒன்று அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.  அதில் மகாத்மாவை வைத்து ஊர்வலம் நடத்தப் போவதாகச் சொன்னார்கள். அதைக் கேள்விபட்டதலிருந்து சின்ன அண்ணாமலை பரபரப்புக்கு ஆளாகிறார்.  எப்படியாவது காந்தியைப் பார்க்க வேண்டுமென்று துடிப்பாக இருக்கிறார்.

காந்தி வந்து விட்டார்.  காரிலும் ஏறி உட்கார்ந்து விட்டார்.  ஆனால் கூட்டம்.  காந்திஜியின் முகம் தெரியவில்லை.  முதுகு மட்டும் தெரிந்தது. சட்டென்று காரின் காரியலில் ஏறி உட்கார்ந்துகொண்டு காந்திஜியின் முதுகைத் தொடுகிறார்.  காந்திஜி திரும்பிப்பார்த்துச் சிரிக்கிறார்.  உடனே ஒரு ஆப்பிளைக் கொடுத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டுகிறார்.  அதன்பின் அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார்.  காந்தி கொடுத்த ஆப்பிளைச் சுவைத்துச் சாப்பிடுகிறார்.  அன்றிலிருந்து சின்ன அண்ணாமலை காந்தியைப் பின்பற்றி வருவதாக எழுதியிருக்கிறார்.

பாட்டியின் சாபம் என்கிற இன்னொரு கட்டுரை உருக்கமாக இருக்கிறது. சின்ன அண்ணாமலையை தேவகோட்டைக்கு சுவீகாரம் விடுவதென்று அவர் பெற்றோர்களால் தீர்மானிக்கப்படுகிறது.  இந்த முடிவு பாட்டிக்குப்பிடிக்கவில்லை (தந்தையைப் பெற்றவர்).  விக்கி விக்கி அழுதபடி சின்ன அண்ணாமலையின் அப்பாவைப் பார்த்து சாபம் இடுகிறார்.  இனிமேல் ஆண் வாரிசே இல்லாமல் போகுமென்று.  அதேபோல் ஆகிவிடுவதாக சின்ன அண்ணாமலை குறிப்பிடுகிறார்.  அவர் அப்பாவை சேர்ந்த யாருக்கும் ஆண் வாரிசு இல்லாமல் போய் விடுகிறது. 

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்று குறிப்பிட்டு முடிக்கிறார்.  அதுதான் இந்தக் கட்டுரைகளின் விசேஷம்.  
டாக்டர் டி எஸ் எஸ் ராஜன் அவர்கள் ராஜாஜி மந்திரி சபையில் இருந்தபோது அவரைப் பார்க்கப் போகிறார் சின்ன அண்ணாமலை.  "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று டாக்டர் ராஜன் கேட்கிறார். "புத்தகம் போட்டுக்கொண்டிருக்திறேன்," என்று பதில் சொல்கிறார் சின்ன அண்ணாமலை. 
"அது சரி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறீர்கள்?" என்று கேட்கிறார் ராஜன்.  
"என் மனைவியின் நகைகளை விற்றுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்," என்று கூறுகிறார்.
மறுநாள் ராஜாஜி சின்ன அண்ணாமலை வீட்டிற்கு வந்து மனைவியிடம் இனிமேல் நகைகளை விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக்கொள்கிறார்.  
கூட்டங்களில் பேசும்போது சின்ன அண்ணாமலை கல்கி எழுதும் தலையங்கக் கட்டுரைகளை மனப்பாடமாகப் படித்து விடுவார்.  பின் அதையே கூட்டங்களில் பேசப் பயன்படுத்துவார். கூட்டத்தில் பேச வேண்டுமென்ற மோகம் சின்ன அண்ணாமலைக்கு உண்டு.  ஒரு சமயம் ராஜாஜி  தேவகோட்டையில் பேசக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. சின்ன அண்ணாமலை கெஞ்சி ராஜாஜி கூட்டத்தில் பேச அனுமதி வாங்கியிருந்தார்.  
ஆனந்தவிகடனில் எழுதிய கல்கியின் தலையங்கக் கட்டுரையை அப்படியே ஒப்பித்துப் பேசிவிட்டார் சின்ன அண்ணாமலை.  கூட்டத்தில் கரகோஷம்.  ராஜாஜி அன்புடன் சின்ன அண்ணாமலையைத் தட்டிக்கொடுத்து தைரியமாகப் பேசு என்று கூறி உள்ளார்.  எல்லோரும் பேசி முடித்தவுடன், ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு வணங்கியபோது, 'நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்,' என்று பாராட்டி உள்ளார்.  சின்ன அண்ணாமலைக்கு சங்கடமாகப் போய் விட்டது, ராஜாஜி கண்டு பிடித்துவிட்டாரேயென்று.  
மேடையின் பின்னால் போய் அமர்ந்து கொள்கிறார் சின்ன அண்ணாமலை. அருகிலிருந்த ஒருவர், 'நன்றாகப் பேசினீர்கள், இதையெல்லாம் எதில் படித்தீர்கள்?' என்று கேட்டுள்ளார். 'ஏன்?' என்று வெலவெலத்துப் போய்க் கேட்கிறார்.  
'யார் எழுதியது என்பது தெரியுமா?' என்று கேட்கிறார். 
'கல்கி எழுதியது,' என்கிறார் சின்ன அண்ணாமலை.
'கல்கியைத் தெரியுமா?' 
'தெரியாது. பார்த்ததில்லை.'
'பார்த்தால் என்ன செய்வீர்கள்?'
'பார்த்தால் நமஸ்காரம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.'
'சரி என்னையே நமஸ்காரம் பண்ணுங்கள்?' என்கிறார் கல்கி.
'ஏன்?'
'நான்தான் அந்த கல்கி.'
கல்கியின் திருக்கரங்களைப் பற்றி ஆனந்தக் கண்ணீர் வடித்தேன் என்கிறார் சின்ன அண்ணாமலை.   ராஜாஜியுடனும், கல்கியுடனும் உள்ள அவருடைய நட்பு கடைசி வரை வருகிறது.
இந்தப் புத்தகத்தில் கல்கி தந்த கார் என்ற அத்தியாயம் இருக்கிறது.  கல்கி சென்னையில் அடையாறு பங்களாவில் வசித்தபோது, தினமும் 4 மணிக்கு கல்கியைப் பார்க்கப் போவார் சின்ன அண்ணாமலை.  ஒருநாள் இரவு பத்து மணி மேல் ஆகிவிட்டது.  கல்கியிலிருந்து விடைபெற்றுப் போகும்போது, கல்கி சின்ன அண்ணாமலையைப் பார்த்து, 'கார் எங்கே?' என்று கேட்கிறார். 'காரா? கார் ஏது?' என்கிறார் சின்ன அண்ணாமலை.  
'தினமும் மாம்பலத்திலிருந்து எப்படி வருகிறீர்கள்?' என்று கல்கி கேட்க.
'பஸ் மூலம்தான்.  தினமும் லஸ்வந்து பஸ் மாறி அடையாறு வருவேன்,' என்கிறார் சின்ன அண்ணாமலை.
மைத்துனனைக் கூப்பிட்டு சின்ன அண்ணாமலையை காரில் கொண்டு போய் விடச் சொல்கிறார்.  அடுத்தநாள் வழக்கம்போல சின்ன அண்ணாமலை கல்கியைப் பார்க்கப் போகிறார்.  அவரை கீழே கூட்டிக்கொண்டு போய் போர்டு ஆங்கிலியா காரை கொடுத்து விடுகிறார். திகைப்பாகப் போய்விடுகிறது சின்ன அண்ணாமலைக்கு. 'என்னிடம் பணம் இல்லை.  இந்த காருக்குப் பணம் கொடுக்க முடியாது.' என்கிறார் சின்ன அண்ணாமலை.  
கல்கி சொல்கிறார் : 'என் ஆப்த நண்பராகிய நீங்கள் பஸ்ஸிலும் நடையிலும் என்னைப் பார்க்க வருவதை நான் தெரிந்துகொண்டும் சும்மா இருந்தால் அந்த நட்பு உண்மை நட்பாகாது. இந்தக் கார் உங்களையும் என்னையும் தினம் சேர்த்து வைக்கும்,'
சொல்லும்போது அவர் கண்களில் நீர் பனித்தது.  'என் கண்களோ குளமாயின,' என்கிறார் சின்ன அண்ணாமலை.  
'என் தாய் இறந்தபோது கூட எனக்கு அழுகை பொங்கி வரவில்லை.  ஆனால் காந்திஜி இறந்தபோதும், கல்கி இறந்தபோதும் நான் விக்கி விக்கி அழுதேன்,' என்கிறார் சின்ன அண்ணாமலை.    
திருவாடானைச் சிறையில் 1942ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 12 மணிக்கு போலீசார் சின்ன அண்ணாமலையை கைதி செய்கிறார்கள்.  
20000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடானை சப்-ஜெயிலுக்கு சின்ன அண்ணாமலையை விடுதலை செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கேள்வி படுகிறார்கள்.  எல்லோரும் என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்று சின்ன அண்ணாமலையிடமே ஆலோசனை கேட்கிறார்கள்.
சின்ன அண்ணாமலை யோசனைப்படி போலீஸôர் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி அவர் இருந்த சப்ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள்.  எல்லோரும் அவரவர் வீட்டிற்குப் போய் நிம்மதியாக இருக்கச் சொல்கிறார் சின்ன அண்ணாமலை.  
'இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்,' என்கிறது கும்பல்.  'சரி அப்படியே செய்யுங்கள்?' என்கிறார் சின்ன அண்ணாமலை.  அதன்படியே அவர்கள் கொண்டு வந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களால் சின்ன அண்ணாமலையை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்து விடுதலை செய்கிறார்கள்.  
இது குறித்து சின்ன அண்ணாமலை இப்படி எழுதுகிறார் : üபட்டப் பகல் 12 மணிக்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.,ý என்கிறார். புத்தகம் தலைப்புப்படி சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  
இதுமாதிரி எத்தனையோ சம்பவங்களை விவரித்துக்கொண்டு போகிறார் சின்ன அண்ணாமலை.  படிக்க படிக்க இன்னும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.  இந்தப் புத்தகம் முழுவதையும் படித்து விட்டு இன்னும் எழுதுகிறேன்.  




Comments