அழகியசிங்கர்
இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள். அவர் இன்று உயிரோடு இருந்தால் 81 வயதாகியிருக்கும். ஆனால் இன்று இல்லை என்பது உண்மை. 1998ல் அவருடைய 60வது வயதில் அவருடைய மொத்த கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்தேன். எனக்கு முன்னால் 'மீண்டும் அவர்கள்' என்ற பெயரில் மையம் ராஜகோபாலன் ஒரு தொகுப்பு கொண்டு வந்துள்ளார். .
ஞானக்கூத்தன் கவிதைத் தொகுதிக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன் காதி கிராப்டில். ஆதிமூலம், சா கந்தசாமி, ஞானக்கூத்தன் என்று மூவருக்குமான கூட்டம் அது. . 21ஆண்டுகளுக்குப் பிறகு அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.
ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகள் நவீன விருட்சத்தில் வெளிவந்தவை. ஒரு முறை ஞானக்கூத்தன் கடற்கரையில் என்னுடன் பேசும்போது, üஉங்கள் கைக்குத் தங்கக் காப்பு போடவேண்டும்,ý என்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை அவர் சொல்வாரென்று.
ஞானக்கூத்தன் இறக்கும் சமயத்தில் 'இம்பர் உலகம்' என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன். அவர் விருப்பப்பட்டு. ஞானக்கூத்தன் மரணப் படுக்கையிலிருந்தபோது இரண்டு பேர்களை மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் பார்க்க விரும்பினார். ஒன்று: நான். இன்னொருவர்: ழ ராஜகோபாலன்.
நவம்பர் 2018-ல் வெளிவந்த ஞானக்கூத்தனின் முழுத் தொகுதியை விலைக்கு வாங்கினேன். இதனை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நேற்றுதான் அதில் உள்ள மனநல ஆலோசகர் ஆனந்த் அவர்களின் முன்னுரையை வாசித்தேன். அந்த முன்னுரையில் ஞானக்கூத்தன் கவிதைகளை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து எப்படி உருவாக்கினோம் என்ற தகவல் எதுவுமில்லை. விருட்சத்தின் முக்கியமான பங்களிப்பைக் கூடச் சொல்லவில்லை. ழ பத்திரிகையை நான் மதிக்கிறேன். அதைப் பார்த்துத்தான் நான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்தேன். ழ என்ற பத்திரிகை 1978ல் ஆரம்பித்து 1988ல் நின்றுவிட்டது. அந்தப் பத்திரிகை 24 இதழ்கள்தான் வந்துள்ளன.. ஆனால் விருட்சம் 1988ஆம் ஆண்டிலிருந்து 110 இதழ்களுடன் 31 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
விருட்சத்தில் பங்குகொண்ட முக்கியமான கவிஞர்களாக நான் நினைத்துக்கொண்டது, ஞானக்கூத்தனையும், பிரமிளையும்தான். அதில் ஞானக்கூத்தனின் பங்கு முக்கியமானது. விருட்சத்தின் பங்கு பற்றி ஏன் மனநல ஆலோசகர் ஆனந்த் குறிப்பிடவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. ஞானக்கூத்தனுக்கு ஒரு கட்டத்தில் கவிதைத் தொகுதியே வரவில்லை. இது தமிழின் சாபக்கேடு. மையம் ராஜகோபாலன் முயற்சியில் üமீண்டும் அவர்கள்ý என்ற முழுத் தொகுப்பு வந்தது. அதைப் பற்றியும் ஆனந்த் குறிப்பிடவில்லை.
அதன்பின் ஞானக்கூத்தனின் 60வது வயதில் அவருடைய முழுத் தொகுதி வெளிவந்துள்ளது. என் முயற்சியாலும், ஞானக்கூத்தன் முயற்சியாலும். பல விடுபட்ட கவிதைகளை மறைந்த தீபம் பத்திரிகை ஆசிரியர் நா பார்த்தசாரதி வீட்டிற்குச் சென்று தனிப்பட்ட முறையில் நான் சேகரித்துக் கொண்டு வந்தேன். விருட்சம் ஞானக்கூத்தனின் முழுத் தொகுதியை மட்டும் கொண்டு வரவில்லை. அவருடைய 'பென்சில் படங்கள்', üகவிதைக்காகý கட்டுரைப் புத்தகமும், இறுதியில் 'இம்பர் உலகம்' என்ற தொகுப்பும் கொண்டு வந்தேன்.
ஆழி பதிப்பகம் அவருடைய முழுத் தொகுதியை திரும்பவும் இன்னும் சில கவிதைகளைச் சேர்த்து வெளியிட்டது. எல்லாவற்றையும் முன்னுரை என்ற பெயரில் எழுதிய ஆனந்த் சொல்ல மறந்தது ஏனோ?. விருட்சம் மூலமாக ஆனந்த் கவிதைத் தொகுதியும், சிறுகதைத் தொகுதியும் கூடக் கொண்டு வந்திருக்கிறேன். ஞானக்கூத்தனும் சரி, ஆனந்தும் சரி என் பதிப்பக சேவையைப் பயன்படுத்திக் கொண்டவர்கள். இதே முன்னுரையை காலச்சுவடிலிருந்து வேற யாராவது எழுதியிருந்தால் நான் கண்டு கொண்டிருக்க மாட்டேன்.
ஞானக்கூத்தன் இந்தத் தொகுப்பில் காணப்படுகிற தவறுகளை விரும்பியிருக்க மாட்டார். என்னுடைய ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுப்பில் பலருடைய ஓவியங்களும், கவிதை வந்த ஆண்டும் குறிப்பிட்டிருப்பேன். முக்கியமாக அகரவரிசையைக் கொடுத்திருப்பேன். இதெல்லாம் ஞானக்கூத்தன் விரும்பியபடி நான் செய்தவை. ஆனால் இது எதுவும் காலச்சுவடு தொகுப்பில் சேர்க்கப் படவில்லை. பதிப்பாசிரியர் திவாகர் ஏன் இதைச் செய்ய விரும்பவில்லை என்று தெரியவில்லை. எந்தெந்த ஆண்டில் கவிதைகள் எழுதினார் என்ற விபரம் இல்லை. ஒரு மூத்த கவிஞரின் தொகுப்புக்கு இது அவசியம் என்று நினைக்கிறேன். நாளைய ஆய்வுக்கு இவை உரம் சேர்ப்பவை.
இதன் மூலம் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஞானக்கூத்தன் கவிதைகள் என்று மொத்த கவிதைகளைக் கொண்டு வந்த காலச்சுவடு, ஏன் இதற்கு முன்னால் இக்கவிதைகளை வெளியிட்ட பதிப்பாளர்களின் பதிப்புகளைக் கூற தயங்குகிறார்கள். அவர்களே கண்டுபிடித்து முதன் முறையாகக் கொண்டு வந்ததுபோல் ஒரு மயக்கத்தை இது ஏற்படுத்தாதா? இது தகுமோ?
Comments