அழகியசிங்கர்
தமிழில் தீபாவளி மலர்கள் எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை. அது ஆரம்பமாக யார் அல்லது எந்தப் பத்திரிகை துணிந்தது என்று தெரியவில்லை. 2015ஆம் ஆண்டு நான் எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கினேன். பட்டாசு வாங்கி கொளுத்தி பணத்தை வீணடிக்க வேண்டாமென்றும் அதற்குப் பதில் தீபாவளி மலர்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாமென்று நினைத்தேன்.
அப்படி வாங்கிச் சேகரித்த தீபாவளி மலர்களில் ஒன்றைக் கூட எடுத்துப்படிக்கவில்லை. புரட்டிப் பார்த்ததோடு சரி. அதன் பின் வந்த ஆண்டுகளில் தீபாவளி மலர்கள் வாங்குவது கிடையாது. நான்கு முறைகள்தான் தீபாவளி மலர்களில் என் படைப்புகள் இடம் பெற்றன. கல்கி தீபாவளி மலரில் ராகவன் ஆசிரியர் பொறுப்பிலி ருந்தபோது என் சிறுகதை ஒன்று பிரசுரமானது. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ச சி சிவக்குமார் முயற்சியில் சிறுபத்திரிகைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமானது. மூன்றாவது முறையாக அமுதசுரபி தீபாவளி மலரில் திரூப்பூர் கிருஷணன் ஆசிரியப் பொறுப்பில் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதிய கட்டுரை வந்தது. தற்போது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் 2019ஆம் ஆண்டில் üபயணம்ý என்ற சிறுகதை பிரசுரமானது. தேர்ந்தெடுத்தவர் கிரிஜா ராகவன்.
ஒவ்வொரு தீபாவளி மலரிலும் எனக்குப் பிடித்தது அதனுடைய வழவழப்பான வண்ண அட்டைப்படங்கள். என்னிடமுள்ள தீபாவளி மலர்களைக் குறித்து எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எழுதலாமென்று நினைக்கிறேன்.
Comments