Skip to main content

இருபத்தொன்பதாம் நாள் வாசிப்பனுபவம் (30.09.2019)



அழகியசிங்கர்





நான் ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டே இருக்கிறேன்.  அது அவ்வளவு சுலபமாக முடியாது போல் தோன்றுகிறது.  நாளைக்கு முடியலாம் அல்லது நாளான்னைக்கு முடியலாம்.  முடிந்தபிறகு அந்த நாவலைப் பற்றி எழுத முடியும் என்று தோன்றுகிறது. 

 இப்போது சுலபமாக வேறு எதாவது புத்தகத்தைப் படித்து எழுத வேண்டுமென்று தோன்றியது.  கையில் கிடைத்தது சூபி கதைகள்.  இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் யூமா வாசுகி. 

எளிமையான விளக்கத்துடன் 49 கதைகளை மொழிபெயர்த்துள்ளார் யூமா வாசுகி.  முன்னுரை வாசகமாக ஒன்று எழுதியிருக்கிறார்.  'இந்த உலகின் மீதான தெளிவை ஏற்படுத்த விழைகின்றன.'

இக் கதைகள் எல்லாவற்றையும் படித்து முடித்தப் பிற்கு இன்னும் ஒரு மறை இதை மறுவாசிப்புக்கு ஆளாக்க வேண்டுமென்று தோன்றியது.  இக் கதை ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை நமக்கு அளிக்கிறது.  

ஒரு ராஜா நிறையா தேசங்களை வென்று செல்வம் சேர்த்தவர்.  ஒரு நாள் அவர் சூபி தத்துவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்.  ஒரு ஞானியைச் சந்திக்கிறார். ராஜாவைப் பார்த்தவுடன் ஞானி, 'நீங்கள் சூபி ஆக முடியாது' என்கிறார்.  ராஜாவிற்குக் கோபம்.  'ஏன் முடியாது?' என்கிறான்.

'சரி நான் உங்களைச் சோதிக்கிறேன்.  எல்லார் முன்னிலையிலும் சபையில்தான் இந்தச் சோதனை நடத்த முடியும்.' என்கிறார் ஞானி.  அரசன் சம்மதிக்கிறான்.  ஞானி சொல்கிறார் நான் பத்து கேள்விகள் கேட்போன், நீங்கள் பதில் சொல்லும்போது 'நான் உங்களை நம்புகிறேன்,' என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லத் தவறிவிட்டால் உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்,ý என்கிறார் ஞானி.

எல்லாக் கேள்விக்கும் அரசன், நான் உங்களை நம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.   ஒரு கேள்விக்கு மட்டும் வேற மாதிரி சொல்கிறான்.  

ஞானி கேட்ட கேள்வி இதுதான் : ;'ஒரு பயணத்தின் போது நான் உங்கள் தாய் தந்தையைப் பார்த்தேன்.  அவர்கள் திருடர்களாயிருந்தார்கள். மோசடிக்காரர்களாய் இருந்தார்கள்.  அவர்கள் செய்த பெரிய குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடைத்தது.'
ராஜா சொன்னார் : 'இது பொய்.  இதில் ஒரு வார்த்தையைக் கூட நான் நம்பவில்லை.'
கிட்டத்தட்ட இத் தொகுப்பில் 49 கதைகள் இருக்கின்றன. எல்லாக் கதைகளும் அரை பக்கம், முக்கால் பக்கம், முழு பக்கம்.  ஒரு கதையை விட்டு விட்டு இன்னொரு கதையைத் தொடரலாம்.

ஜென் கதைகளுக்கும் சூபி கதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.  இரண்டு புத்தகங்களும் ஒருவர் வைத்துக்கொண்டு படித்தால் கிட்டத்தட்ட இரண்டு ஒன்றாகத்தான் தோன்றுகிறது.

இக் கதைகளில் ஒரு பொதுவான தன்மை இருக்கிறது.  கதைகள் எந்த அறிவுரையும் கூறுவதில்லை. படிப்பவர்கள் கதைகள் மூலம் வாழ்க்கையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளவேண்டும். 

மேலும் இதை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படுகிறது.  சுதந்திரமான வாசிப்புக்கு இது வழிவகுக்கிறது.  

ராஜ அதிகாரத்தைத் துறந்து சென்ற ஒரு சூபி, பக்கீராகத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.  வரும் வழியில் அடிமை சந்தையிலிருந்து ஒரு அடிமையை விலைக்கு வாங்கிக கொண்டு வருகிறார். அடிமையிடம் கேட்கிறார்: உங்கள் பெயர் என்ன? 

அடிமையின் பதிலை பாருங்கள்,"நீங்கள் என்ன சொல்லி அழைக்கிறீகளோ அதுதான்." இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை சொல்லிக்கொண்டே போகிறான்.  கடைசியில் ஒரு கேள்வி, உங்களுக்கு என்ன பிடிக்கும்? அதற்குப் பதில் ஒரு அடிமை எதாவது  ஆசைப்படுவதில் அர்த்தம் உண்டா? என்று சொல்கிறான்.  

இறுதியில் சூபி, உங்களிடம் அதிகமாகக் கற்றுக்கொண்டேன் என்கிறார் அடிமையைப் பார்த்து.    இப்படி கதைகளின் சில பகுதிகள் உரையாடல்களில் போய் முடிகின்றன.

ஒன்று சூபி அடிமையிடம் கற்றுக் கொள்வார்.  அல்லது அடிமை சூபியிடம் ஞானம் பெறுவார்.  எல்லாம் கன கச்சிதமான கதைகள். பெரும்பாலும் மேடைப் பேச்சாளருக்கும் இதுமாதிரியான கதைகள பெரும்பாலும் பயன்படும். 

ஞானம் தேடும் ஒருவர் ஒரு சூபி குருவைப் பார்க்கச் சென்றார்.  ஒரு கம்பளத்தில் அமர்ந்திருக்கும் குருவிடம் அவர் சொன்னார் :

'மதிப்பிற்குரிய குரு அவர்களே, நான் சூபி வழியில் செல்வதற்கு நீங்கள் எனக்கு உபதேசம் தர வேண்டும்.'
குரு சொன்னார் :
'நீங்கள் உடனடியாக மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும்.  அதன் பிறகுதான உபதேசம்.'
'அந்த மூன்று விஷயங்கள் என்னவென்று சொல்லுங்கள். நான் உடனே அவற்றைச் செய்து முடிக்கிறேன்.'
'ஒன்று நீங்கள் உங்கள் அதிக அவசரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  இரண்டு நீங்கள் என் காலை மிதித்து நின்று கொண்டு பேசுகிறீர்கள்.  எனக்கு வலிக்கிறது.  நீங்கள் காலை எடுக்க வேண்டும்.  மூன்றாவது, சூபி நான் அல்ல.  அவர் பக்கத்து வீட்டில் வசிக்கிறார்.'
இக்கதைகளில் சில இடங்களில் தத்துவமாக சில வரிகள் பளிச்சிடுகின்றன.
'அன்பு பரிசுத்தமாக இருந்தால் என்ன பிரார்த்தித்தாலும் அது நடக்கும்.  நல்லதையும் கெட்டதையும் நாம்தான் முடிவு செய்கிறோம்.'
புகழ் பெற்றுவிட்டால் பெரும்பாலான சூபிக்கள் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள்.  
பெரும்பாலும் கதைகள் மூலம் தத்துவத்தைக் கூறுவது சூபியின் தத்துவம். 
இக்கதைகளைப் படிக்கும் போது ஆழமான அனுபவத்தைப் படிப்பவருக்குக் கொடுக்கும். 

Comments