Skip to main content

திருச்சி பயணத்தில் இன்னொரு புத்தகம்

அழகியசிங்கர்






என் பயணத்தின்போது புத்தகங்களைப் படிப்பது என் வழக்கம்.  எல்லோரும் என்னைக் கவனிக்கும்படி புத்தகத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருப்பேன்.  அப்படிப் படித்துக்கொண்டிருக்கும்போது என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக்கொண்டிருப்பேன்.  ரயில் பயணித்தின்போது ஜன்னல் வழியாகப் பல காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருப்பேன்.
நான் இப்படிப் புத்தகம் படிப்பதே என்னை யாராவது பார்த்து, அவர்களுக்கும் புத்தகம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதுதான். 
இந்தப் பயணத்தின் போது பாரதி விஜயம் புத்தகத்தோடு இன்னொரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போனேன்.  அந்தப் புத்தகத்தின் பெயர் üவெயிலும் நிழலும்,ý என்கிற பிரமிள் புத்தகம்.  51 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகத்தில் 25 கட்டுரைகள் வரை படித்துவிட்டேன்.  இப் புத்தகத்தை வெளியிட்டவர் வம்சி புக்ஸ்.
இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.  பிரமிள் 1939ல் பிறந்து 1997ல் இறந்து விட்டார்.  அவருடைய முதல் கட்டுரை எழுத்துவில் 1960ல் பிரசுரமாகி உள்ளது.  அப்போது அவருக்கு வயது 21 இருக்கும்.
அவருடைய அந்த முதல் கட்டுரையை இப்போது கூட சுலபமாக படித்துப் புரிந்து கொள்ள முடியாது.  அந்தக் கட்டுரையில் காணப்பட்ட சிலவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  அதற்கு முன்னால் 20 வயதில் இவ்வளவு திறமையாக எழுதிய பிரமிள் ஒரு சாதாரணமான அதிக எதிர்பார்ப்பு இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாமல் ஏன் அவதிப்பட்டார்?  ஒரு ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறவர் கூட பிரமிள் எழுதிய இக் கட்டுரை மாதிரி எழுதி இருக்க முடியாது.  ஆனால் பிரமிளால் ஒரு சாதாரண யாரையும் சார்ந்து இருக்காத ஒரு வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஏன்?   ஆனால் அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையிலும் அவர் இறந்து போய் 21 ஆகி விட்டதால் இப்போது இதை யோசித்துப் பார்க்கிறேன்.
üசொல்லும் நடையும்ý என்ற முதல் கட்டுரையில், இதுதான் அவருடைய முதல் கட்டுரையா என்று எனக்குத் தெரியாது.   
தனித்தமிழ்க் குழுவைத் தாக்குகிறார்.  üஎப்படி ஹைட்ரஜன் என்று எல்லாரும் புரிந்து வைத்திருக்கிற இரவல் சொல்லை, ஒரு தனித்தமிழ்க் குழு üஐதரன்ý ஆக்க, இன்னொன்று üநீரகம்ý ஆக்க, இந்த இரண்டும் வேண்டாம், ஹைட்ரஜன் போதும் என்று ஏற்றுக்கொள்கிறோமோ, அப்போதே நமக்கு, சப்த வரம்பில் விஸ்தீரணம் உண்டாகிறது.ý
பெரும்பாலும் பிரமிள் கட்டுரைகள் ஆரம்பத்தில் எழுத்து வில் வந்துள்ளதால், சி சு செல்லப்பாவின் நாவல்களை விமர்சனம் செய்துள்ளார்.  செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலைப் பற்றிப் பேசும்போது, ஒருசில இடங்களில் நனவோடைப் போக்கிலும் நாவல் முழுக்க நினைப்பாதையிலும் போவது மட்டுமல்ல, ஒரே பாத்திரம் மட்டும் தன் அவசங்களோடு விசார ரீதியில் நாவலைத் தூக்கிச் செல்வதும், உண்மையில் தமிழுக்கு ரொம்ப ரொம்பப் புதிது என்கிறார்.
மொழிபெயர்ப்பு என்ற கட்டுரையில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு, கருத்து நடை மொழிபெயர்ப்பு என்ற இரண்டு ரகங்களை தனித்தனியாகக் குறிப்பிடுகிறார்.
அக உலகக் கலைஞர்கள் என்ற கட்டுரையில் தூல உலகக் கலைஞர்கள், சூட்சும உலகக் கலைஞர்கள் என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டு வருகிறார்.  
மௌனி பிரமிளிடம் சொன்ன கருத்தை இங்குத் தெரிவிக்கிறார்.  'அகநானூறின் மன உலகம் இந்தப் பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால், இன்று உன் கதைகளையும், என் கதைகளையும் 'புரியவில்லை,' 'தெளிவில்லை,' என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்,"  என்று குறிப்பிடுகிறார்.  
லா ச ராவின் 'பச்சைக் கனவு,' ஆர் சூடாமணியின் 'மனத்துக்கு இனியவள்' என்ற புத்தகங்களின் மதிப்புரைகளை எழுதி உள்ளார். 
தேசிய இலக்கியம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.  அதில் பிரமிள் குறிப்பிடுகிற ஒரு விஷயம் : இலக்கியத்தைப் பொறுத்தவரை தேசவாழ்க்கையும், சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும், வேறு வேறான வாழ்க்கைகள் அல்ல.  ஏனென்றால், அவையாவுமே மனித இதயத்தில் நிகழ்கிறவைதான் என்கிறார்.
பிரமிள் பல கட்டுரைகளில் தன்னுடைய தெளிவான பார்வையை உண்டாக்குகிறார்.  தமிழில் அவரைப் பொறுத்தவரை, மௌனியும், புதுமைப்பித்தனும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கியவர்கள்.  
நான் இப் புத்தகத்தில் 237 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் புத்தகம் முழுவதும் படித்து முடித்து இன்னும் எனக்குத் தோன்றுவதை சொல்ல இருக்கிறேன்.  

Comments