அழகியசிங்கர்
1. 105வது இதழ் வரை விருட்சம் கொண்டு வந்து விட்டீர்கள்?
ஆமாம். 84 பக்கங்கள் வரை கொண்டு வந்துள்ளேன். விலை அதிகம்.
2. நீங்கள் 30 ஆண்டுகளாகக் கொண்டு வந்துள்ளீர்கள்..அவ்வளவு நீண்ட காலம் ஒரு சிறு பத்திரிகையைக் கொண்டு வரக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே?
அப்படி சொல்பவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். முதல் இதழுக்கும் கடைசி இதழுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் கூறுவார்கள்.
3. வித்தியாசம் இல்லையா?
இல்லை. முதல் இதழும் கடைசி இதழும் எல்லாம் ஒன்றுதான். கவிதைகள், கதைகள், கட்டுரைகளைப் பதிவு செய்யும் ஒரு இயந்திரமாகத்தான் சிறுபத்திரிகையைக் கருதுகிறேன்.
4. உங்கள் பத்திரிகையைப் படிப்பவர்கள் இருக்கிறார்களா?
இருக்கிறார்கள். யார் என்று தெரியாது. கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்ய மாட்டார்கள்.
5. எல்லா சிறு பத்திரிகைக்கும் இந்தக் கதிதானா?
இப்போது வருகிற எல்லாச் சிறுபத்திரிகைக்கும் இந்தக் கதிதான்.
6. ஆத்மாநாம் இப்போது இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பார்?
ழ பத்திரிகையின் 200வது இதழ் கொண்டு வந்திருப்பார். 16 பக்கங்களில் தொடர்ந்து கவிதைகாளக வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்.
7. ஞாநியின் தீம்தரிகிட பார்த்தீர்களா?
ஞாநி தீம்தரிகிட ஆரம்பிக்கும்போதே நான் ஒரு சந்தாதாரர். ஆனால் தொடர்ச்சியான சந்தாதாரர் இல்லை. விளம்பரம் இல்லாமல் பத்திரிகையை நடத்தியவர். அவருடைய தீம்தரிகிட பத்திரிகை ஏழு தொகுப்புகளாக வந்துள்ளன. ஒவ்வொருவரும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம்.
8.இந்த மாதம் 26ஆம் தேதி அன்று ஒரு முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது அல்லவா?
ஆமாம். பாவண்ணனைப் பாராட்டுவோம் என்ற கூட்டம். ஒருநாள் முழுவதும் நடைபெறுகிற கூட்டம். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என்று பவற்றை எழுதி சாதித்திருக்கிறார் பாவண்ணன். அவருக்கான வாசகர் வட்டமும் இருக்கிறது.
9. உங்கள் வாழ்க்கையின் லட்சியம் எது?
புத்தகம் வாசிப்பது.
10. அலட்சியம்?
புத்தகத்தை வைத்துக்கொண்டே தூங்குவது.
11. உங்கள் முழுச் சிறுகதைத் தொகுப்புப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
12. சமீபத்தில் வெளிவந்த மணல்வீடு தொகுப்பைப் பார்த்தீர்களா?
இன்றுதான் வந்தது. இதழ் எண் : 32-33 என்று அச்சாகியிருந்தது. 192 பக்கங்கள் கொண்ட வித்தியாசமான தொகுப்பு. இதழ் விலை : ரூ.150 என்றிருந்தது. நம்ப முடியவில்லை.
13. உங்களால் இப்படியொரு இதழைக் கொண்டு வர முடியாதா?
கற்பனையே செய்ய முடியாது. ஆத்மாநாமின் ழ தான் என்னுடைய பத்திரிகை. இன்னும் பக்கங்களைக் குறைக்க வேண்டும்.
14. வெயிலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. வெயில் கொளுத்துகிறது. புத்தகங்கள்தான் எனக்குத் துணை.
15. நீங்கள் நடத்தும் கூட்டங்கள் பற்றி
மாதம் ஒரு முறை கூட்டம் நடத்துகிறேன். 3வது சனிக்கிழமை. நானும் கோவிந்தராஜன் என்ற நண்பரும் சேர்ந்து 27 கூட்டங்கள் நடத்தியிருப்போம். இப்போது தனியாக 10 கூட்டங்கள் நடத்திக்கொண்டு வருகிறேன்.
16. கூட்டம் நடத்துவது பொழுதுபோக்கா இலக்கிய சேவையா
இரண்டும் இல்லை.
17. இந்த மாதம் யார் பேசுகிறார்கள்
சுனில் கில்நானியின் இந்தியா என்கிற கருத்தாக்கம் பற்றி சா கந்தசாமி பேசுகிறார். கூட்டம் இந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
18. நீங்கள் பிரமிள் புத்தகமான வெயிலும் நிழலும் பாதிதான் படித்தீர்கள் போலிருக்கிறது.
ஆமாம். நான் படித்த பாதிக்குப் பிறகு அவர் தீவிரமாக எல்லோரையும் விமர்சிக்கிறார்.
19. கடற்கரையின் பாரதி விஜயம் புத்தகம் பற்றி..
பாரதியைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். படிக்க படிக்க சோகமயமான புத்தகமாக இருக்கும்போல் தோன்றுகிறது.
20. ம்.
ம்.
Comments