அழகியசிங்கர்
அழகியசிங்கர் மதியம் 4 மணிக்குமேல் பூங்காவில் மர நிழலில் காத்துக்கொண்டிருக்கிறார். அவரை நோக்கி ஜெகனும், மோகினியும் வருகிறார்கள்.
மூவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரும் சில மணித்துளிகள் பேசவில்லை.
அழகியசிங்கர் : நடந்திருக்கக் கூடாது.
மோகினி : நம் கையில் எதுவுமில்லை
ஜெகன் : துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை.
அழகியசிங்கர் : இப்படி ஒரு துயரமான நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடாது.
மோகினி : நம்மால் என்ன செய்ய முடியும். நாமும் சாமானியர்கள்.
ஜெகன் : சாமானியர்களுக்கு உள்ள தைரியம் கூட நமக்குக் கிடையாது.
அழகியசிங்கர் : துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்தனை செய்கிறேன்.
ஜெகனும், மோகினியும் : நாங்களும்.
***********
ஜெகன் : பாலகுமாரன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டாரே?
மோகினி : ஆமாம்.
அழகியசிங்கர் : 200க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி உள்ளார். சிறுகதைகள் எழுதி உள்ளார். முதலில் சிற்றேடுகளில் எழுத ஆரம்பித்தவர். பின் பிரபல பத்திரிகைகளுக்கு எழுதி பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்தவர்.
ஜெகன் : நீங்கள் அவர் பூத உடலைப் போய்ப் பார்த்தீரா?
அழகியசிங்கர் : பார்த்தேன். ஒரே கூட்டம். தாங்க முடியாத கூட்டம். ü100வது இதழ் விருட்சத்திற்கு யோகி சுரத் குமாரின் ஆஞ்ஞைப்படி உங்களுக்கு நன்கொடை தருகிறேன் என்று அழைத்துக் கொடுத்தார்.ý மறக்க முடியாத சம்பவம் அது.
ஜெகன் : நீங்கள் யோகி ராம் சுரத்குமாரை நம்புகிறீர்களா?
அழகியசிங்கர் : நம்புவதும் நம்பாமல் இருப்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் ஏன் மக்கள் அவரைப் பார்க்கப் போகிறார்கள். நம்முடைய துயரங்களில் எதாவது ஒரு பகுதியை யோகியார் தீர்க்க முடியுமா என்று பார்க்கிறார்கள். இன்னும் சிலர் ஆன்மிகத் தேடலுக்காகப் போகிறார்கள். பிரமிள் மூலமாகத்தான் யோகியாரை பாலகுமாரனுக்கும் தெரியும். பின் பாலகுமாரன் மூலம் யோகியார் ரொம்பவும் பிரபலமாகிவிட்டார். ஆனால் யோகி ராம்சுரத் குமார் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்.
மோகினி : பாவண்ணன் கூட்டத்திற்குப் போயிருந்தேன்.
அழகியசிங்கர் : 4 மணிக்குமேல்தான் போக முடிந்தது. வெயில். வீட்டிலிருந்து கிளம்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
ஜெகன் : இந்தக் கூட்டத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்.
அழகியசிங்கர் : கூட்டத்தை சிறப்பாக அமெரிக்க தமிழர் குழுவும், இங்குள்ள பாவண்ணனின் சில நண்பர்களும் நடத்தினார்கள்.
எனக்கு ஆச்சரியம். காலையிலிருந்து இக் கூட்டம் முடியும்வரை கவிக்கோ அரங்கத்தில் பலர் கூடி கலந்துகொண்டதுதான்.
மோகினி : முக்கியமாகத் தமிழ் நாட்டிலிருந்து பல இடங்களிலிருந்து இக் கூட்டத்திற்கு வந்திருந்ததுதான்.
அழகியசிங்கர் : பாவண்ணனின் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் என்று பலரும் கலந்துகொண்ட கூட்டம் இது.
ஜெகன் : பாவண்ணன் இறுதியில் பேசும்போது நெகிழ்ச்சி அடைந்துவிட்டார்.
அழகியசிங்கர் யாராயிருந்தாலும் நெகிழ்ச்சி அடையத்தான் அடைவார்கள். காலையிலிருந்து மாலை வரை எல்லோரும் ஒருவரைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் நெகிழ்ச்சி அடையாமல் தப்பிக்க முடியாது. சிலர் அழக்கூட அழுதுவிடுவார்கள். ஆனால் அது ஆனந்தக் கண்ணீராக இருக்கும்.
ஜெகன் : பாவண்ணின் உழைப்பைப் பற்றிதான் நான் ஆச்சரியப்படுகிறேன். அலுவலகப் பணியில் கூட அவர் திறமையான ஊழியர் என்று குறிப்பிடுவார்களாம்.
அழகியசிங்கர் : ஊழியத்தில் இருந்துகொண்டு ஒருவர் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருவது. சாதாரண விஷயமாக எனக்குப் படவில்ûடில. இதை பாவண்ணன் ஒதுங்கி நின்று நடத்தியிருக்கிறார். பாவண்ணனின் அடுக்கு மாளிகை என்ற கதைத் தொகுதியை வாசித்தேன். üபருவம்ý என்ற மொழிபெயர்ப்பு நாவலை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன் பாவண்ணன் மொழி பெயர்த்தது. வாசித்தல் என்பது ஒரு தவம். படிக்கப் படிக்க நமக்கு எதாவது தோன்றினால் சொல்லலாம். சொல்ல முடியாமல் போனால் விட்டுவிடலாம்.
(பேசி முடித்தபின் மூவரும் கலைந்து போகிறார்கள்)
*********
29.05.2018
அன்புள்ள ஜெகனுக்கு,
வணக்கம்.
நான் அவசரமாக காரில் குடும்பத்துடன், மனைவி, பெண், என் பேரன், பேத்தியுடன் பங்களூர் கிளம்பிப் போகிறேன்.
என் மனைவியின் மூத்த சகோதரியின் கணவர் இறந்து விட்டார். பல மாதங்களாக அவர் உடல் நலமில்லாமல் இருந்தார். என் மனைவியின் முத்த சகோதரி கணவரைப்பார்த்துக்கொள்ளக் கூட முடியாமல் அவதிப்பட்டார். அவருடைய கணவர் சாப்பிடும்போது சாப்பாடு வாயிற்குள் போகாமல் ஒழுகி விடும். சாதத்தை முழுங்கக் கூட முடியாது.
ஒரு முறை நான் அவரைச் சந்திக்க வரும்போது எத்தனை நாட்கள் இவர் உயிருடன் இருப்பார் என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டிருக்கும். ஆனால் அவருக்கு யார் நம்மைப் பார்க்க வருகிறார்கள் என்ற ஞாபகம் இரந்துகொண்டிருக்கும். சரியாகப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். ஆனால் ஒரு நோயாளியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது விலகிப் போகும் நம் மனநிலையை என்னவென்று விவரிப்பது.
அவர் நல்ல நிலையில் இருந்தபோது எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வார். அவர் வாழ்நாள் முழுவதும் சைக்கிள், டூவீலர், கார் என்று எதையும் பயன்படுத்தியதில்லை. நேற்று முழுவதும் அவர் நினைவாகவே இருந்தேன். அவர் உடலை தகனம் செய்யுமிடத்திற்குச் சென்றபோது அவர் நினைவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவர் 82 வயதில்தான் இறந்து போனார். ஆனால் இந்த வயதுவரை ஒருவர் உயிருடன் இருப்பது அதிகம் என்று ஏனோ என் மனம் சொல்லிக்கொண்டிருந்தது. அவர் முழுமையான வாழ்க்கை வாழ்ந்துவிட்டார் என்று கூட சொல்லிவிடலாம்.
சரி, நாம் திரும்பவும் சந்தித்துப் புத்தகங்களைப் பற்றிப் பேசுவோம்.
அன்புடன்
அழகியசிங்கர்
Comments