அழகியசிங்கர்
சில தினங்களுக்கு முன் நான் திருச்சி சென்றேன். என் பெண்ணை அழைத்துக்கொண்டு. பல்லவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வண்டியில் ஏகப்பட்டக் கூட்டம். ஒரு சீட்டில் நான் உட்கார்ந்து இருந்தாலும் நின்றுகொண்டு பல பயணிகள் இருந்தார்கள். வெயில் புழுக்கம். அது மோசமான ரயில் பயணம் என்று எனக்குத் தோன்றியது.
நான் எப்போதும் பயணம் மேற்கொண்டால் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன். இப்படி பயணத்தின்போதுதான் விழுந்து விழுந்து புத்தகங்களைப் படித்துக்கொண்டு போவேன். பொதுவாக புத்தகங்களைக் குறித்து எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி உண்டு. புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் படிப்பதில்லை என்று. அந்தக் குற்ற உணர்ச்சியைப் போக்கவே பயணத்தின்போது புத்தகங்களை ஒரு ஜோல்னாப் பையில் சுமந்து செல்வேன்.
என்ன புத்தகங்களைப் படிக்க எடுத்துக்கொண்டு போவது என்ற குழப்பம் எனக்கு ஏற்படாமல் இருக்காது. கடைசி நிமிடம் வரை யோசித்துக்கொண்டிருந்தேன். என் புத்தக வரிசையில் 'சிதைந்த கூடு' என்ற தாகூரின் புத்தகம் ஒன்று இருந்தது. அதன்பின் 'நிலவு தேயாத தேசம்' என்ற சாரு நிவேதிதா புத்தகம் ஒன்றும் இருந்தது.
இந்த இரண்டு புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதில் ஜனவரி மாதம் வாங்கிய பாரதி விஜயம் என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 1000 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை நான் நிச்சயம் படித்து முடிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் கட்டிலில் இருக்கும் இப் புத்தகத்தை கொஞ்சமாவது தொட்டாவது பார்க்கலாம் என்று எடுத்துக்கொண்டேன்.
அடுத்தப் புத்தகம் பிரமிளின் 'வெயிலும் நிழலும்' என்ற புத்தகம். பிரமிள் இறந்து 21 ஆண்டுகள் போய்விட்டன. சமீபத்தில் பிரமிளைப் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்ற இப் புத்தகத்தைப் படிக்கலாமென்று எடுத்துக்கொண்டு போனேன்.
இரண்டு தமிழ் புத்தகங்களை எடுத்துக்கொண்டாயிற்று, ஒரு ஆங்கிலப் புத்தகம் எடுத்துக்கொள்ளலாமென்று, மலிவு விலையில் நான் வாங்கிக் குவித்திருக்கும் புத்தகத்தின் ஒன்றான சிட்னி ஷெல்டனின் மிஸ்டரஸ் ஆப் த கேம் என்ற புத்தகம் எடுத்துக்கொண்டேன். இப் புத்தகத்தை எழுதியவர் தில்லி பேக்ஷ்வா.
ரயிலில் கூட்டமான கூட்டம். நான் பெரிய புத்தகமான பாரதி விஜயத்தை எடுத்துக்கொண்டேன்.
ஸி சுப்பிரமணிய பாரதி சில சின்னஞ்சிறு கதைகள் என்ற தலைப்பில் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (இது மாதிரியான நீளமான பெயரை ஒருவர் உச்சரிக்க ஆரம்பித்தால் மூச்சிறைக்க ஆரம்பித்துவிடும்) எழுதிய 14 ஆம் பக்கங்களிலிருந்து 87ஆம் பக்கம் வரை படித்துக்கொண்டே போனேன். இந்த ஒரு நீளமான கட்டுரையை ஒருவர் எழுதுவதற்கே அசாத்தியமான திறமை வேண்டும். இதில் கடற்கரை எழுதிய எழுத்தை மாதிரிக்கு நாம் படிக்க வேண்டும்.
'காந்தியைச் சந்தித்து திருவல்லிக்கேணி கூட்டத்திற்குப் பாரதி அழைப்புக்கொடுத்த ருசிகர சம்பவம் எந்த நாள் நடந்தது? நீர்குமிழி போல் வரலாற்றில் நுரைக்கும் இக்கேள்வியை யாரும் ஊன்றிப் போகவில்லை.'
'சீனி விஸ்வநாதன் பதிப்பித்த கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதி ஒன்றில் ஜி சுப்பிரமணிய அய்யர் தரப்பு விளக்கம் மட்டுமே இடம் பெற்றுள்ளது..'
கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தாம்பரத்தில் உள்ள கிருத்துவக் கல்லூரியிலிருந்து மின்சார வண்டியில் வந்துகொண்டிருக்கிறேன். என் கையில் பாரதியார் கட்டுரைகள். தொகுத்தவர் பெ தூரன். ஆவேசமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். கடற்கரை புத்தகம் எடுத்துப் படிக்கும் இத் தருணத்தில் 40 வருடக் கதை ஞாபகத்திற்கு வருகிறது.
நான் அதிகமாக சேர்த்து வைத்திருப்பது பாரதியார் சம்பந்தமான புத்தகங்கள். பல கட்டுரைத் தொகுதிகள். பல விதமான அளவில் அவருடைய கவிதைத் தொகுதிகள்.
தனித்தனியாக பல கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொன்றாகப் படிக்கும்போது பாரதியார் என் கண் முன்னால் நடமாடுவதுபோல் தோன்றுகிறது.
பாரதியைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதி இருக்கிற கட்டுரைகளைப் படிக்க படிக்க ஏதோ ஒருவித சோக உணர்வு உருவாகிறது. ஏன் என்ற காரணம் புரியாத சோக உணர்வு.
பாரதியார் வந்தார் என்ற தலைப்பில் என் நாகஸôமி எழுதியிருக்கிறார். மடுவில் விபத்து என்ற தலைப்பில் இக் கட்டுரை போய்க்கொண்டிருக்கிறது. பாரதியாரும் நாகஸôமியும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க மடுவிற்குச் செல்கிறார்கள். அங்கு அல்லிக்கொடி இருக்கும் இடத்திற்குப் போய் பாரதியார் தண்ணீரில் மாட்டிக்கொள்கிறார். நாகஸôமி அவரைக் காப்பாற்றி விடுகிறார். அதற்கு பாரதி இப்படி கூறுகிறார். தண்ணீருக்குள்ளே வளர்ந்து வந்த அல்லிக்கொடிகள் என்னைச் சாப்பிடப் பார்த்தனவே நானும் இரையாகி விடப் பார்த்தேனே என்கிறார். கூடவே,üஇந்தப் புண்ணிய பூமிக்குச் செய்ய வேண்டிய சேவை செய்யமுடியாமல் போகப்பார்த்ததே, நீ அல்லவா என்னைக் காப்பாற்றினாய் என்கிறார் நாகஸôமியைப் பார்த்து பாரதி. புத்தகத்தில் இந்தப் பகுதியைப் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
கட்டுரை வெளியான குறிப்புகள் என்ற பெயரில் 61 குறிப்புகளைக் கொடுத்துள்ளார். இவை எல்லாவற்றையும் எடுத்துப் படித்து தேர்ந்தெடுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். 1000 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 179 பக்கங்களே படித்துள்ளேன். இன்னும் படிக்க வேண்டிய பக்கங்கள் அதிகமாக உள்ளன. இன்னும் படித்து முடித்தபின் என் கருத்துக்களை ஆழப்படுத்துவேன்.
(இன்னும் வரும்)
(07.05.2018)
ü
ü
Comments