Skip to main content

பாவண்ணனைப் பாராட்டுவோம்



அழகியசிங்கர்




வரும் சனிக்கிழமை (26.05.2018)  பாவண்ணனைக் குறித்து ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.  காலை பத்து மணியிலிருந்து இரவு 8 மணிரை.   இடம் கவிக்கோ அரங்கத்தில்.  பாவண்ணன் சிறுகதைகள், நாவல்கள், அவருடைய மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு தலைப்புகளில் பலர் பேச உள்ளார்கள்.
நான் பாவண்ணன் என்ற உடன் அவருடைய புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன்.  என்னிடம் 3 புத்தகங்கள் இருக்க வேண்டும். இரண்டு புத்தகங்கள்தான் இருந்தன.  பாய்மரக்கப்பல் என்ற நாவல் எங்கே என்று தெரியவில்லை.  'அடுக்கு மாளிகை' என்ற சிறுகதைத்  தொகுதியும், ஒரு கவிதைத் தொகுதியும் தான் இருந்தன.
டிஸ்கவரி புத்தக பேலஸ் இடத்திற்குச் சென்றபோது பாவண்ணனின் இரண்டு நாவல்கள் கண்ணில் தென்பட்டன.  வாங்கி வைத்துக்கொண்டேன். 
அப்போதுதான் தெரிந்தது பாவண்ணன் நாவல்கள் மூன்று எழுதியிருக்கிறாரென்றும், சிறுகதைத் தொகுப்பு பத்து பதினைந்து கொண்டு வந்திருக்கிறாரென்றும்,  இதைத் தவிர கட்டுரைத் தொகுதிகளும் கவிதைத் தொகுதியும் வந்திருக்கின்றன.  
புத்தகங்கள் வைத்திருந்தாலும் நான் பாவண்ணனை பத்திரிகைகளில் வரும் கதைகள் மூலமாகத்தான் படித்திருக்கிறேன். அதேபோல் அவர் எழுதுகிற புத்தக விமர்சனங்களையும், கட்டுரைகளையும். 
தன்னைப்பற்றி சுய விளம்பரம் செய்துகொள்ளாதவர்.   எழுதுவது படிப்பது என்று போய்க்கொண்டிருப்பவர்.  அவர்  எழுத்துக்களை வாசிக்கிற வாசகர்களும் அவருக்கு உண்டு.
நான் பங்களுர் சென்றால் பாவண்ணனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன்.  அவரைச் சந்திக்கவும் முயற்சி செய்வேன்.   இதெல்லாம் பாவண்ணனைப் பற்றி, இனி அவர் எழுதிய கதைகளைப் பற்றி எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.  
üஅடுக்கு மாளிகைý என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பு 1998ல் வெளிவந்தது.   மொத்தம் 12 கதைகள் கொண்ட தொகுப்பு இது.  
கதைகள் மூலம் பாவண்ணன் காட்டுகிற உலகம் என்ன? ஒரு எளிமையான நடைமுறை சிக்கலை விரும்பாத மனிதனின் உலகம்தான் அது.  
முதலில் பாவண்ணனின் இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது ஒன்று தெரிந்துகொண்டேன்.   அவர் கதைகளை எல்லாம்   நிதானமாகத்தான் வாசிக்க வேண்டும். 
இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை அவர் 1995 அல்லது 1996 ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கிறார்.  சரி கதைகள் மூலம் அவரிடம் தென்படுவது என்ன?  விபரங்கள்.  அவரைப் போல் விபரமாகக் கதையைக் கொண்டு போகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற சந்தேகம் கூட எனக்கு ஏற்படுகிறது.
'அடுக்கு மாளிகை'  என்ற முதல் கதையை எடுத்துக்கொள்வோம். குப்புசாமி என்ற பையனின் மனோநிலையில் கதையை எடுத்துக்கொண்டு போகிறார்.  இறுதியில் அம்மாவை நினைத்துக்கொண்டே அந்தப் பையன் ஒரு விபரீத முடிவுக்குப் போகிறான்.  இக் கதையின் முடிவு முன்னதாகவே ஊகிக்க முடிகிறது.  பம்பரம் தேடும் பையன் அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியில் மாடிப் படிக்கட்டுகள் வழியாக ஏறிப்போகிறான்.  அங்கே அவன் காண்கிற காட்சிகளையும் பாவண்ணன் பதிவு செய்கிறார். 
'வேகமெடுத்து விளிம்பின் பக்கம் ஓடி அம்மா என்று கூவியபடி வானத்தை நோக்கி எகிறினான்,' என்று முடிக்கிறார். ஒரு சிறுவன் இப்படியெல்லாம் ஒரு விபரீதமான முடிவு எடுப்பானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படாமல் இல்லை.
'ராஜண்ணா' என்ற இரண்டாவது கதை சடுகுடு விளையாட்டில் ஆரம்பிக்கிறது.  ராஜண்ணா என்பவன் எப்படி தன் வசத்தில் ஒரு குழுவைக் கட்டுப்படுத்துகிறான் என்பதுதான் கதை.  அவர்களுடைய குழுவிற்கு தலைவனாகவே மாறி விடுகிறான்.  ராஜண்ணா இருக்கும்வரை கபடி ஆட்டத்தில் அந்தக் குழு வெற்றி அடைந்துகொண்டிருக்கிறது.  கபடியில் வெற்றி அடைவது மட்டுமல்ல அவனிடம் படிந்துள்ள கெட்ட சகவாசமும் குழுவிற்குள் உள்ள ஒவ்வொரிடமும் பழக்கமாகிறது.  இறுதியில் ராஜண்ணா ஒரு பெண்ணின் கொலையில் மாட்டிக்கொண்டு விடுகிறான்.   ராஜண்ணாவை விட்டு அந்தக் குழு வெளியே வரமுடியவில்லை.  எல்லோரும் ராஜண்ணாவாக மாறி விடுவதாக பாவண்ணன் கதையை முடிக்கிறார்.  இப்படியெல்லாம் நடக்கும் என்று பாவண்ணன் கதை உணர்த்துகிறது.
'இதயம்'  என்ற கதையில் இதய நோயால் அவதிப்படும் இருவர் நிலையைக் குறித்து கதை விரிகிறது.  பெரியவர் ராமசாமி தான் சேமித்ததை எல்லாம் செலவு செய்து தன் இதயத்தில் உள்ள ஓட்டையைச் சரி செய்துகொள்கிறார்.  ஆள் அரவமற்ற மலைக்கோயில் உள்ள ஒரு இடத்திற்கு தினமும் நடைபயிற்சி  செய்கிறார்.  அங்குதான் அவர் இன்னொரு முதியவரையும் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிற சிறுவனையும் சந்திக்கிறார்.  அந்தச் சிறுவனும் அவரைப் போல இருதய ஓட்டையைச் சரிசெய்து கொண்டவன் என்பதும், அவனுடைய அப்பா அம்மாவை விபத்தில் இழந்து விடுவதையும் அறிந்தபோது அந்த சிறுவனின் மீது அளவுகடந்த பாசம் ஏற்படுகிறது ராமசாமிக்கு.  தினமும் அவனை சந்தித்துக்கொண்டு வரும் ராமசாமிக்கு சில தினங்களாக அவனைப் பார்க்க முடியவில்லை.  சிறுவனுக்கு உடல்நிலை மோசமாகி அப்போலோவிற்குக் கொண்டு போகிறார் கிழவர்.  இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டு துவண்டு விடுகிறார் ராமசாமி.  இக் கதையில் பரமபத ஆட்டம் சிறுவனோடு விளையாடுவதுபோல் ஒரு நிகழ்ச்சி வரும்.   திரும்பவும் இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று யூகிக்க முடிகிறது,   ஆனால் நேர்த்தியான முறையில் கதையை நகரத்த்திக்கொண்டு போகிறார்.
'பழி' என்ற கதையில் ஒரு பொம்மைக்காரரை வைத்து வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.  பொம்மைக்காரனின் மனைவி அவனை விட்டு வேற ஒரு இளைஞனுடன் ஓடிப் போய்விடுகிறாள்.  சாமி சிலைகளை செய்யும் பொம்மைக்காரருக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுகிறது.  கவுண்டர் ஒருவரின் தொந்தரவு தாங்காமல் சாமி சிலைகளை உருவாக்குகிறார்.  அவர் உருவாக்குகிற சிலைகளுக்கு கண்கள் மட்டும் உருவாக்காமல் அப்படியே விட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறார். அவரைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.  அந்தச் சிலைகளுக்கு வேற யாரும் தெய்வக்குத்தம் என்று கண் வைக்க வரவில்லை.  பாழாகி இருக்கும் சிலைகளுடன் அந்தக் கோயில் இருக்கிறது.  
'ஆறு', 'மூர்க்கம்' என்ற கதைகள் மொழியால் ஏற்படும் கலவரத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவை.  கதைகளைப் படிக்கும்போது படிப்பவருக்கும் பதட்ட உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.  
üவாகனம்ý என்ற கதை ஆட்டோவின் உறுமல் தாங்க முடியாமல் அவதிப்படுகிறது ஒரு சக குடுத்தனம்.  எப்படி அதை வேற வழியில்லாமல் ஏற்றுக்கொள்கிறது அந்தச் சகக் குடுத்தனக்காரர்கள் என்பதுதான் கதை.
அதேபோல் üவக்கிரம்ý  என்ற அலிகளைப் பற்றியும் ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறது.   ஒரு சாதாரண சம்பவம்,  அல்லது கேள்விப்பட்ட நிகழ்ச்சி எல்லாம் பாவண்ணன் கதைகளாக மாற்றிக்கொண்டு போகிறார்.
பொதுவாக பாவண்ணன் ஒவ்வொரு கதையையும் விவரித்துக்கொண்டே போகிறார்.  இதுதான் அவர் கதைகளில் நான் கண்ட ஆச்சரியம்.  மேலும் அவர் சிறிய சிறிய பாராக்களாக கதைகளை அமைப்பதில்லை.  
எல்லாக் கதைகளையும் பாவண்ணனே முன்னின்று சொல்கிறாரா?   பெரும்பாலும் சிறுவர்கள் இல்லாத கதைகளை அவர் எழுதுவதில்லையோ?  பெண்களை மையமாக வைத்து ஒரு பெண்ணே கதையைச் சொல்வதுபோல் அவர் கதைகள் எழுதியிருக்கிறாரா என்ற கேள்விகள் எல்லாம் இந்தப் புத்தகம் மட்டும் படித்துவிட்டு எனக்குத் தோன்றுகிறது..  இதைப் படித்துவிட்டு அதுமாதிரியான முடிவுக்கு வருவதும் தவறு என்றும் நினைக்கத் தோன்றுகிறது.   200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை பாவண்ணன் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது.  எஸ் எஸ் பைரப்பாவின் 'பருவம்' என்ற மெகா நாவலை பாவண்ணன் கன்னடத்திலிருந்து தமிழுக்குத்  தந்துள்ளார்.  
மேலும் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், நிதானமான வாசிப்பு மூலம்தான் அவருடைய கதைகளைப் புரிந்துகொள்ள   முடியும்.  
 
 

Comments