அழகியசிங்கர்
என் அலுவலக நண்பரின் பெண்ணிற்குத் திருமணம். பத்திரிகை அனுப்பியிருந்தார். பின், போனில் கூப்பிட்டார். நானும் அவரும் சீர்காழி என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் ஒன்றாகப் பணிவுரிந்து கொண்டிருந்தோம். அங்கே அதிக நேரம் பேசிக்கொண்டிருப்போம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது ஒன்றாக கிளம்பிப் போவோம். இதோ நான் அலுவலகத்தை விட்டு 4 ஆண்டுகள் முடியப் போகிறது.
அவர் இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு எனக்குப் பத்திரிகை அனுப்பியிருந்தார். நான் இருக்குமிடம் மாம்பலம். திருமணம் நடக்குமிடம் புழுதிவாக்கத்தில் உள்ள மூவரசம் பேட்டை கூட்டு ரோடில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்.7.30க்கு ரிசப்ஷன். நான் மாலை 5.30 மணிக்கே கிளம்பி மடிப்பாக்கத்தில் உள்ள என் பெண் வீட்டிற்குச் சென்றேன். அங்கே ஒரு அரை மணி நேரம் இருந்தேன். "மழை பெய்யப் போகிறது..சீக்கிரம் போ," என்றாள் பெண்.
நான் அங்கிருந்து கிளம்பி கல்யாண மண்டபத்தை அடைந்தேன். சரியாக 7.15 மணி ஆகிவிட்டது. அலுவலக நண்பர் வாசலில் நின்று என்னை உபசரித்தார். இந்த நான்கு வருடங்களில் அவர் உருவம் முழுவதும் மாறி விட்டது. முதல் மாடி. ஏசி ஹால். ஒரே இரைச்சல். கும்பகோணத்தைச் சேர்ந்த பல அலுவலக நண்பர்களைப் பார்த்தேன். பலர் பெயர்கள் மறந்து விட்டன. பக்கிரி என்பவரை ரொம்ப நன்றாகத் தெரியும். அவருக்கு என் பெயர் மறந்து போய்விட்டது. "உங்கள் பெயர் என்ன?" என்று அவர் கேட்க, என் பெயர் பக்கிரி. உங்கள் பெயர் மௌலி என்றேன்.
நான் சொன்னது அவருக்குப் புரிந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து எல்லோரும் மேடைக்குச் சென்றோம். யாரும் ரொம்ப பேசிக்கொள்ளவில்லை. பின் மணமகளைப் பார்த்து நான் ஒரு புத்தகமும், ஒரு கவரும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் முதலில் பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் புத்தகம்தான் கொடுக்க நினைத்தேன். ஆனால் அவசரத்தில் அந்தப் புத்தகம் கிடைக்காததால் ராம் காலனி என்ற என் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்துவிட்டேன். கொடுத்தப் பிறகு எதோ பாதகமான செயலை செய்து விட்டேனோ என்று கூடத் தோன்றியது. மணமகளுக்கும், மணமகனுக்கும் தமிழ் தெரியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அல்லது சிறுகதைகள் படிப்பார்களா என்ற சந்தேகமும் கூடவே இருந்தது.
என் அலுவலக நண்பர் அந்தப் புத்தகத்தைப் படிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அலுவலக நண்பருடன் ஒரு நிமிடமதான் பேச முடிந்தது. நிறையாப் பேர்கள் அவரைச் சுற்றி இருந்தார்கள்.
கல்யாணத்தில் முக்கிய விஷயம் சாப்பாடு. முன்பெல்லாம் எனக்கு அதில் அதிக ஆர்வம் இருக்கும். இப்போதெல்லாம் முடிவதில்லை. இப்போது எல்லாவற்றிலும் ஒரு கவளம் சாப்பிடுகிறேன். இன்னும் சில ஆண்டுகள் போனால் ஸ்பூனில்தான் சாப்பிடுவேன். இரண்டு ஸ்பூன் சாம்பர் சாதம். மூன்று ஸ்பூன் ரசம் சாதம். ஒரு அரை சப்பாத்தி. கொஞ்சம் பாயாசம். பின் நாலு ஸ்பூன் தயிர்சாதம். ஆனால் கட்டாயம் பீடா சாப்பிடாமல் வர மாட்டேன்.
கல்யாண மண்டபத்தை விட்டு தெருவில் கூட்டு ரோடில் வண்டியைச் செலுத்தினேன். ஜே ஜே என்று கூட்டம். தாங்க முடியாத கூட்டம். மழை வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது.
வீடு வந்து சேர்ந்தபோது மழையில் நனைந்து விட்டேன். உதயம் தியேட்டர் முதல் வீடு வரை மழை. ஆனால் நனைந்து வருவது உற்சாகமாக இருந்தது.
என் அலுவலக நண்பரிடம் ஒரு நிமிடம்தான் பேசினேன். அவருடைய அடுத்தப் பெண் திருமணத்திற்கு என்னைக் கூப்பிடுவார8ô என்று தெரியவில்லை. கூப்பிட்டால் இன்னொரு ஒரு நிமிடம் அவருடன் பேசலாம். நாளை காலையில் இன்னொரு கல்யாணத்திற்குப் போகப் போகிறேன். அங்கேயும் ஒரு நிமிடம்தான் பேசும்படி இருக்கும்.
Comments