Skip to main content

புத்தகங்களைப் படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன்...



அழகியசிங்கர்
                                                                               


தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள்.  பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.  தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள்.  இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள்.  என் குடும்பத்தில் நான் ஒருவன்தான் தமிழ் புத்தகம் படிக்கிறவன்.  என் மனைவி எப்பவாவது லக்ஷ்மி புத்தகங்களைப் படிப்பார்.  யாரும் தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க மாட்டார்கள்.
நான் அந்தக் காலத்திலிருந்து தமிழ் புத்தகங்களைப் படிக்கிறவன். ஆங்கிலம் படித்தாலும், தமிழ் புத்தகம் படிக்கிற அளவிற்கு ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கிற ஆர்வம் இல்லாதவன்.  ஆனால் புத்தகங்களை வாங்கி வாங்கி வைத்துக்கொள்வேன்.
ஒருநாள் நான் வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்து பயந்து விட்டேன். நமக்கோ வயது கூடிக்கொண்டே போகிறது, எப்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கப் போகிறோம் என்ற பயம் என்னை பற்றிக்கொண்டது.  வாரம் ஒருநாள் புத்தகங்களைப் பார்த்தபடி கற்பூரம் காட்டி நமஸ்காரம் செய்யலாம், படிக்க வேண்டாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.  அல்லது ஒரு புத்தகத்தை எடுத்து வெறுமனே புரட்டிப் பார்த்து வைத்துவிடலாமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் ஆவேசமாக புத்தகங்களைப் படிப்பது என்று தீர்மானித்தேன். என்னிடம் அதிகமாக உள்ள பத்மா காப்பி பைகளை எடுத்து வைத்துக்கொண்டேன்.  மூன்று பைகளை எடுத்து வைத்தக்கொண்டேன். முதல் பையில் ஒரு முப்பது புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டேன். இரண்டாவது பையில் இன்னும் முப்பது புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டேன்.  மூன்றாவது பையை எடுத்தேன்.  அதில் முப்பதைந்து புத்தகங்களைச் சேர்த்தேன்.  இதில் தடித்தடியான புத்தகங்களும் அடங்கும்.  
முதல்நாள் ஒரு பையை எடுத்தேன்.  அதில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்தேன்.  அது ஒரு தமிழ் புத்தகம்.  தி ஜானகிராமன் எழுதிய மோகமுள்.   சில பக்கங்களைப் படித்தேன்.  பின் ஒரு கோடு போட்டேன்.  தேதி, கிழமையைக் குறிப்பிட்டு, இதுவரை படித்துள்ளேன் என்று எழுதினேன்.  அடுத்தது அலைஸ் முன்றோவின் தேர்ந்தெடுத்தக் கதைகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தை எடுத்தேன்.  ஆங்கிலப் புத்தகம்.  ஒரு பக்கம்தான் படித்தேன். பின் கோடு போட்டேன்.  தேதியை இட்டேன். இதுவரை படித்துள்ளேன் என்று குறிப்பு எழுதினேன்.  இப்படியே 30 புத்தகங்களையும் மூன்றிலிருந்து நான்கு மணிவரைப் படித்தேன்.  பின் அந்தப் பையை ஓரமாக வைத்தேன். 
இரண்டாவது நாள் இன்னொரு பையை எடுத்தேன்.  அதே மாதிரி வேறு வேறு முப்பது புத்தகங்கள்.  ஒவ்வொன்றாக எடுத்துப் படித்தேன்.  தமிழ்புத்தகங்கள் என்றால் மூன்றிலிருந்து நான்கு பக்கங்கள் படித்துவிட்டு கோடு போடுவேன்.  ஆனால் ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் இரண்டு பக்கங்கள் மேல் படிக்க முடியவில்லை. முப்பது புத்தகங்களையும் படித்து முடிக்குமுன் 3 அல்லது 4 மணி நேரம் ஆனது. 
இதேபோல் மூன்றாவது நாள் மூன்றாவது பை.  திரும்பவும் நாலாவது நாள் அன்று முதல்பையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒன்று கண்டுபிடித்தேன்.  என்ன படித்தேன் என்று ஞாபகம் வரவில்லை. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் படிக்குமுன் நான் படித்து முடித்த இடத்திலிருந்து தொடங்கினாலும் என்ன படித்தோம் என்று ஞாபகத்தில் வரவில்லை. திரும்பவும் முதலிலிருந்து படிக்க வேண்டுமென்று தோன்றியது.  பெரிய கொடுமையாக இருந்தது.  
நான் ஆரம்பித்த இந்தத் திட்டம் சரியாக வரவில்லை என்று தோன்றியது. அதோடு அல்லாமல் நான் படிக்கிற புத்தகங்களைப் பற்றி நடைபயிற்சி செல்ல நேரிடும்போது நண்பர் ஒருவரிடம் பெருமையாகச் சொல்வேன்.  அவர் திடீரென்று நான் படித்தப் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி கேட்பார்.  எனக்கு எரிச்சலாக இருக்கும்.  சரியாக சொல்ல வராது.  பின் அவர் என்னை கிண்டல் அடிப்பார். இப்படி பகுதி பகுதியாகப் படிக்கும் முறை சரியா என்று எனக்கு யோசனையாக இருந்தது.  மூன்று நாட்கள் 95 புத்தகங்களைப் படிப்பதை விட இன்னும் கொஞ்சம் புத்தகங்களைக் குறைத்துக்கொண்டு படிக்கலாமா என்ற யோசனை எனக்குத் தோன்றியது. 
எல்லாப் பைகளிலும் உள்ள புத்தககங்களை எல்லாம் ஒன்று சேர்த்தேன்.  பின் நான் எப்போது படிக்கப் போகிறேனென்று ஏக்கமாக இருந்துகொண்டிருக்கிற புத்தகக் குவியலில் சேர்த்துவிட்டேன்.  வெறும் பத்துப் புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு படித்தால் என்ன என்று தோன்றியது.  யோசிக்கும்போது அதுவும் சரியாக வரவில்லை என்றும் தோன்றியது.  நான் ரிட்டையர்டு ஆன புதியதில் உற்சாகத்தில் தடித்தடி புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.  புத்தருக்கு போதி மரத்தில் ஞானதிருஷ்டி ஏற்பட்டதுபோல எனக்கு தடித்தடி புத்தகங்கள் ஞானத்தைக் கொடுத்தது.   வாங்காதே என்பதுதான் அந்த ஞானம்.  அன்றிலிருந்து என் தடிப் புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை அளவில் என்னிடமிருந்து  குறைந்து போய் விட்டது. 
பத்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிப்பதும் என் எண்ணத்திலிருந்து கழன்று போய்விட்டது.  இப்போது கவலையே படுவதில்லை ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொள்கிறேன். தமிழோ ஆங்கிலமோ? அதைப் படித்துக்கொண்டே இருக்கிறேன். முடிக்கும்வரை படித்துக்கொண்டு இருக்கிறேன்.  
சமீபத்தில் என் பெண் வீட்டிற்குச் சென்றேன்.  ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  அது ஒரு நாவல். படித்துக்கொண்டே இருந்தேன். பல மணி நேரங்கள் படித்துக்கொண்டேன் இருந்தேன்.  383 பக்கங்கள் கொண்ட அந்த நாவலில் 230 பக்கங்கள் வரை படித்து விட்டேன். இரவு ஆகிவிட்டது. நான் திரும்பவும் என் வீட்டிற்குக் கிளம்பினேன்.  என் பெண் வீட்டில் உள்ள அனைவரும் என்னை விரோதியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.  நான் புத்தகம் படிக்கிற கவனத்தில் அவர்களிடம் பேசவே இல்லை.     
"எதுக்கப்பா இங்கே வந்தே?"  என்று பெண் கோபமாகக் கேட்டாள்.

"வெற்றி. 232 பக்கங்கள் படித்துவிட்டேன், " என்றேன் நான்.



Comments