Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 76

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 76

அழகியசிங்கர்  

அந்நியன்

சிற்பி


எப்போதும்
என் பின்னால்
யாரோ வருகிறார்கள்

அவன் முகத்தை
நான் அறியேன்
ஆயினும் அவன் இருக்கிறான்

கண்ணுக்குத் தெரி0யாத
மாயாவி அவன்
என் அசைவு ஒவ்வொன்றும்
அவனுக்குள் பதிவாகி விடுகிறது

உண்ண அமர்ந்தால்
உடன் அவனும்
அமர்வதுபோல் தெரிகிறது

தெருவில் நடந்தால்
உரசிக் கொண்டே
நடப்பதாய் உணர்கிறேன்

பத்திரிகை வாங்கினால்
எனக்கு முன்
அவன் அதைப் படித்து விடுவதாய்
பிரமை

யாரையேனும் சந்தித்தால்
அவர்கள் அடையாளங்களும்
குறிக்கப் படுவதாய்த் தெரிகிறது

மேடையில் போனிôல்
üஜாக்கிரதைý என
எச்சரிக்கப்படுவதாய்
உள்ளூணர்வு

படுக்கை அறையில்
மனைவியின் முகம் பார்க்க
எத்தனிக்கையில்
சுற்றியது இனம்புரியா
மூச்சுக் காற்றின்
வெப்பம்

எப்போதும் என் பின்னால்
யாரோ வருகிறார்கள்


நன்றி : கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை - சிற்பி - கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123,  8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி நகர், சென்னை 600 017 - தொலைபேசி எண் : 2436423 - வெளியான ஆண்டு : மே 2016 - விலை : ரூ.80





Comments