Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 75


அழகியசிங்கர்  

இருளில் நகரும் யானை

மனுஷ்ய புத்திரன்


வனப்பாதையின் 
இரவுப் பயணத்தில்
திடீரென காரோட்டி
'யானை யானை'
என்று கிசுகிசுத்தபடி
விளக்குகளை அணைத்தான்.

சாலைக்கு வெகு அருகாமையில்
மூங்கில் வனம் நடுவே
யானைக் கூட்டம்
இருளில் மேகக் கூட்டங்கள்போல
நகர்ந்து கொண்டிருந்தன
எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
இரவெல்லாம் இதுபோல
யானைகள்
இருளிலேயே நடந்துகொண்டிருக்கின்றன

வேறொரு இடத்தில்
காரோட்டி 
ஒரு புதருக்குள் ஹெட் லைட்டைத்
திருப்பிக்காட்டினான்
ஒரு பெரிய ஒற்றை யானை
தனியாக நின்றுகொண்டிருந்தது
அதன் கண்களில் நீர்
'இருளில் அழும் யானைகள்'
ஒரு வாக்கியம் மனதை அழுத்தியது
'நாம் நம் குடிலுக்குத் திரும்பிவிடலாம்' 
என்றேன். 
இப்போதெல்லாம்
நான் என் அறையில்
விளக்கைப் போடாமல்
இருளிலேயே குளிக்கிறேன்
இருளிலேயே தொலைபேசியில் பேசுகிறேன்
இருளிலேயே துணி துவைக்கிறேன்
இருளிலேயே மேசையை ஒழுங்குபடுத்துகிறேன்
இருளிலேயே தரையை பெருக்குகிறேன்
இருளில் ரேடியத்தில் ஒளிரும்
கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இருளில் புழங்குவதில்
ஒரு எடையற்ற தன்மை இருப்பதை
நான் வெகு அண்மையில்தான் கண்டுபிடித்தேன்

வனத்தின் இருளில் நகரும்
ஒரு யானை
எப்படியோ 
என் அறைக்குள் வந்துவிட்டது


நன்றி : இருளில் நகரும் யானை - மனுஷ்ய புத்திரன் - கவிதைகள் - உயிர்மை பதிப்பகம் - 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 016 - பக்கங்கள் : 232 - விலை : ரூ.275 - தொலைபேசி எண் : 044 24993448

பின் குறிப்பு :

80களில் சிறுபத்திரிகைகளில் பிரம்மராஜனும், விக்கிரமாதித்யனும்தான் அதிகமாகக் கவிதைகள் எழுதுவார்கள். பிரம்மராஜனின் கவிதைகள் ஒருவிதம் என்றால், விக்கிரமாதித்யன் கவிதைகள் வேறு விதம்.  இறுக்கமான நடையில் பிரம்மராஜன் கவிதைகளை எழுதி விடுவார். விக்கிரமாதித்யனோ வெகுசுலபமாய் கவிதைகளை எழுதித் தள்ளிவிடுவார்.  படிப்பவர்கள் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பார்த்து நாமும் எழுதலாமா என்று நினைப்பார்கள். ஆனால் பிரம்மராஜன் கவிதைகளை நெருங்கவே மாட்டார்கள். இவர்கள் இருவரில் இன்று பிரம்மராஜன் கவிதைகள் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.  ஆனால் விக்கிரமாதித்யன் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
மேலே சொன்ன இருவர்களைப் போல் இன்று அதிகமாக கவிதைகள் எழுதும் மனுஷ்யப்புத்திரன் பிரம்மராஜனைப் போல் இறுக்கமான நடையில் எழுதவில்லை.   விக்கிரமாதித்யனைப் போல் தாராள நடையிலும் எழுதவில்லை. இந்த இரண்டு கவிதை முறைக்கும் நடுவில் உள்ள ஒரு போக்கு இவர் கவிதைகளில் தென்படுகின்றன. கவிதையை ஒரு முறை படித்தப் பின்பும் இன்னொரு முறை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது. 

Comments