ஸ்டால் எண் 12...
அழகியசிங்கர்
இரண்டு
சென்னை புத்தக திருவிழாவிற்கு நான் கொண்டு வந்த புத்தகங்கள் இரண்டு இரும்பு அலமாரிகளில் அடங்கி விட்டன. மீதமுள்ள ஐந்து அலமாரிகளுக்கு வெளி இடத்திலிருந்து புத்தகங்கள் தேடி வரவேண்டும். எல்லாம் கிடைத்துவிட்டன. நாங்கள் மூவரும் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டோம். முதலில் காற்றோட்டம் இல்லாத இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். பின் இடத்தை மாற்றிக்கொண்டோம். நாங்கள் இருந்த பகுதிக்கு அடுத்து போகிற வழி. வெளியே போய் விடலாம். அந்தத் திறந்த வெளியிலிருந்து காற்று பிரமாதமாக வந்து கொண்டிருந்தது. நான் அதை பீச் என்று அழைத்தேன். கிருபா செல்போன் போனதுபோல் இன்னும் பலருடைய செல்போன் போய்விட்டன. அலுவலகத்திலிருந்து செல்போன்களை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி எச்சரிக்கை வந்து கொண்டிருந்தன. நாங்கள் மூவரும் ஒரே வயதுக்காரர்கள். வேற வேற வங்கியிலிருந்து ஒவ்வொருவரும் ரிட்டையர்டு ஆனவர்கள். நான் கொஞ்சம் வயதில் பெரியவன். என்றாலும் மதியம் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் அங்கு வந்து அமரும்போது ஒரு மாதிரியாகத்தான் எனக்கு இருந்தது. வந்த வேகத்தில் பல ஸ்டால்களில் உள்ளவர்களைப் பார்க்கும்போது தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். சாதாரண நாட்களில் புத்தகங்கள் வாங்க கூட்டம் அலைமோதவில்லை. வீட்டில் சும்மா இருக்கப் போகிறோம். அதற்குப் பதில் இங்கே வந்து சும்மா இருக்கலாமென்றுதான்.
இந்தத் தருணத்தில்தான் நான் நான்கு புத்தகங்கள் கொண்டு வந்தேன். எல்லாம் குறைவான பிரதிகள். யாராவது வாங்குவார்களா என்பது உறுதியானவுடன்தான் இன்னும் கொஞ்சம் அடிக்க முடியும். இல்லாவிட்டால் முதல் முறை அடித்த பிரதிகளுடன் நின்று விட வேண்டியதுதான்.
இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். இரண்டாவது வரிசையில் ஒரு ஆங்கிலப் பதிப்பாளர். டெல்லியிருந்து மூன்று பேர்களாக வந்திருக்கிறார்கள். இந்திதான் பேச வருகிறது. அவர்களுடைய பெரிய பெரிய புத்தகங்கள் எல்லாம் ரூ.225 ஐத் தாண்டவில்லை ஆனால் எல்லாம் காப்கா, தால்ஸ்தாய், தாஸ்தோவஸ்கி, சாமர்சட் மாம், தாகூர், என்று பெரிய பெரிய எழுத்தாளர்களின் முழுத் தொகுப்புகள். எல்லாம் 225 ரூபாய்க்கள்தான். கடையில் டெல்லியில் வந்தவர்கள் மூன்று பேர்களும் தலையில் கை வைத்தபடியே உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள முகங்களில் சிரிப்பே இல்லை. என்ன இவ்வளவு மோசமாக இருக்கிறது இங்கே, போய்விடலாம் என்று பார்க்கிறோம் என்றார்கள். ஆனால் கடைசி வரை இருந்தார்கள். நடுவில் போகவில்லை. இப்படி தடுமாறிக் கொண்டிருந்த அவர்களைப் பார்க்கும்போது நாம் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது.
டேனியல் ஸ்டீல் என்ற எழுத்தாளரின் சம்மர்ஸ் என்ட் என்ற புத்தகத்தில் 70 மில்லியன் பிரதிகள் கொண்ட அவருடைய நாவல்கள் அச்சாகிக் கொண்டிருப்பதாக ஒரு தகவலை புத்தக அட்டையில் படித்துப் பிரமித்து விட்டேன்.
என் ஸ்டால் எதிரில் ஜஸ்ட் கெட் புக்ஸ் என்ற கடை இருந்தது. அதில் ஒரு ஆங்கில நாவல் ரூ.50. அல்லது மூன்று நாவல்கள் எடுத்தால் ரூ.250. ஒரே கூட்டம். ஏகப்பட்ட யூவதிகள், யூவன்கள் கட்டுக் கட்டாய் புத்தகங்களைத் தூக்கிச் சென்றார்கள்.
நான் நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்தேன். 50 பிரதிகளுக்குக் குறைவாக. மூன்று புத்தக வெளியீட்டுக் கூட்டங்கள் நடத்தினேன். ஞானக்கூத்தன் மறைந்த ஓராண்டு நினைவாக அவர் கவிதைகளை எல்லோரையும் வாசிக்க வைத்தேன். பரிசல் செந்தில்குமார் பாடகர் என்பதை இந்த புத்தகச் சந்தையில்தான் அறிந்து கொண்டேன். அவர் பழைய தமிழ்ப் பாடல்களைப் பாடினார்.
என்ஸ்டாலில் நான், என்னுடன் மற்ற இரண்டு நண்பர்கள், புத்தகம் வாங்க வந்தவர்கள், எங்களுடன் வெறும் அரட்டை அடித்துச் செல்பவர்கள், சாய்ந்திர நேரத்தில் நல்ல காற்று என்று எங்கள் பொழுது போயிற்று.
இந்தப் புத்தகக் காட்சியில் எனக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தேன்.
புத்தகக் காட்சியில் புத்தகம் விற்பவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. அதிகமான தலைப்புகளில் புத்தகம் தயாரித்து விற்பவர்கள் 2. எல்லோரிடமும் புத்தகங்கள் வாங்கி விற்பவர்கள். 3. அரைகுறையாக மிகக் குறைவான புத்தகங்களை தயாரித்து மேலும் மற்றவர்களிடம் புத்தகங்களை வாங்கி விற்பவர்கள். விருட்சம் முன்றாவது ரகத்தைச் சேர்ந்தது.
சனி ஞாயிறுகளில் கூட்டம் வந்த அளவிற்கு மற்ற நாட்களில் கூட்டம் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. மூன்று காரணங்களை எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். 1. விளம்பரம் சரியாகக் கொடுக்கப்படவில்லை. 2. மாசக் கடைசி 3. ஜனவரியில்தான் வந்ததால் புதிய புத்தகங்கள் இல்லை. ஆனால் இடம் பிரமாதமாக இருந்தது. வெகு சீக்கிரத்தில் இடத்தை அடைந்து விடலாம். வண்டியெல்லாம் எளிதாக வைத்துவிட முடிந்தது. கழிவறை அடிக்கடி தண்ணீரால் கழுவப்பட்டு நீட்டாக இருந்தது.
31ஆம் தேதி திரும்பவும் அதே டெம்போகாரரைக் கூப்பிட்டடு புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகச் சொன்úன்.
Comments