Skip to main content

டிவி பார்க்காமல் ஓடுவது எப்படி?.......



அழகியசிங்கர்




நான் டிவி பார்ப்பதற்கு எதிரி இல்லை.  ஆனால் ஒருவர் டிவியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை நான் வெறுக்கிறேன்.  டிவி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது.  அது பெரிதும் நம்முடைய வாழ்க்கை முறையைக் கெடுக்கிறது.  
நான் டிவியில் காட்டப்படுகிற சீரியல்களைப் பார்ப்பதில்லை.  செய்திகளைக் கூட கொஞ்சம் நிமிடங்கள்தான் பார்ப்பேன்.  டிவியில் காட்டப்படும் தமிழ்ச் சினிமாக்களை முழுவதும் பார்ப்பதைத் தவிர்ப்பேன்.  எதாவது ஒரு காட்சி பார்ப்பேன்.  விளையாட்டும் பார்ப்பேன்.  
இன்றைய நவீன கடவுள் டிவிதான் என்று சிலர் நினைக்கிறார்கள்.   ஒருவர் டிவி பார்க்காமல் இருக்க முடியுமா?  என் வீட்டில் என்னுடன் வசித்து வருபவர் ஒருவர் சதா சர்வ காலமும் டிவியைப் பார்த்தபடி இருக்கிறார்.  காலையில் எழுந்தவுடன் டிவியை ஆன் செய்து திரும்பவும் அணைப்பது என்பது இரவு 11 மணி ஆகிவிடுகிறது.  இது எனக்கு அச்சத்தைத் தருகிறது.  
நான் என்னைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  சரி டிவி பார்க்காமல் இருந்தால் பொழுதை எப்படிக் கழிப்பது?  இந்தக் கேள்வியை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.  புத்தகம் படிக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம்.  ஆனால் அப்படி ஒரு புத்தகத்தை ஒருவர் காலையிலிருந்து இரவு வரை படிக்கிறார் என்றால் ஒரு நாளைக்கு 200 அல்லது 300 பக்கங்கள் வரை படிக்கலாம்.  ஆனால் அப்படியெல்லாம் படித்து விட முடியுமா?  என்னால் ஒரு நாளைக்கு நான் பெரிய முயற்சி செய்தால் 10 அல்லது 20 பக்கங்களுக்குள்தான் முடியும்.  அதுவும் நான் படிக்க வேண்டுமென்று முயற்சி செய்தால்தான் முடியும்.  அப்படியென்றால் வேற வழியே இல்லை.  நீங்கள் டிவிக்குத்தான் வர வேண்டும் என்று நீங்கள் கிண்டல் செய்வது என் காதில் விழாமல் இல்லை.  
ஆனால் என்னால் டிவி முன் அமர்ந்திருக்க முடியவில்லை.  கொஞ்சநேரம் உட்கார்ந்து பார்த்தாலே என்னை டிவி ஓட ஓட விரட்டுகிறது.  பால்கனியில் ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்து கொள்ளலாமென்று தோன்றுகிறது. ஆனால் அப்படியெல்லாம் சொல்வது தவறா?  ஆனால் பொழுது போவதற்காக நான் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்கிறேன்.  சினிமா செல்கிறேன். எதாவது கோயிலுக்குப் போக வேண்டுமென்றாலும் போகிறேன்.  
என்னால் புத்தகம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் பொழுது போக்க முடியும்.  ஆனால் டிவி முன்னால் அப்படியெல்லாம் கூட உட்கார முடியவில்லை.  ஏன் இப்படிப்பட்ட உணர்வு எனக்குள் ஏற்படுகிறது?  டிவியில் காட்டப்படும் காட்சிகள்தான் என்னை விரட்டுகின்றன.  அழுகை நிரம்பிய அபத்தமான டிவி சீரியல்களை என்னால் ரசிக்க முடியவில்லை.  அதற்குப் பதில் பாக்கெட் நாவல்களை  படித்து ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது..   ஆனால் வேண்டுமென்றே டிவி இல்லாமல் இருக்கவும் முடியாது.  அதனால் டிவியை ஆன் செய்துவிட்டு அதைப் பார்க்காமல் இன்னொரு இடத்தில் உட்கார்ந்து கொள்வேன்.  டிவி மட்டும் தனியாக ஏதோ கத்திக்கொண்டு இருக்கும்.  காதில் வாங்கிக்கொள்ள மாட்டேன்.  ஒருவர் இசையைக் கேட்டுக்கொண்டே பொழுதை ரம்மியமாகக் கழிப்பதாக சொல்வார்கள்.  என்னால் இசையையும் ரொம்ப நேரம் ரசிக்க முடியாது.  
ஆனால் அதே சமயத்தில் புத்தகங்கள் என்னை வசீகரிக்காமல் இல்லை.  ஒரு புத்தகத்தை முழுவதும் எடுத்துப் படிக்க வேண்டுமென்று என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும், முழுவதும் என்னால் முடிவதில்லை.   ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையை எடுத்துப் படிப்பேன்.  அல்லது ஒரு கவிதைப்புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை எடுத்துப் படிப்பேன்.  ஒரு நாவலிலிருந்து சில பகுதிகள் படிப்பேன்.  அல்லது ஒரு கட்டுரைப் புத்தகத்ததை எடுத்து வைத்துக்கொண்டு தீவிரமாகப் படிப்பேன்.
சதா சர்வக்காலமாக டிவியைப் பார்த்தபடி இருக்கும் இன்னொரு நபரை இலக்கியக் கூட்டங்களுக்கு, சினிமாவுக்கு, கோயிலுக்கு, புத்தகம் படிப்பதற்கு என்று மாற்ற முயற்சி செய்கிறேன்.  என் முயற்சி ஓரளவு வெற்றிப் பெறும் என்று நினைக்கிறேன்.
(Photo taken by Clik Ravi)

Comments