இன்று ஞானக்கூத்தன் நினைவு நாள்.......
அழகியசிங்கர்
27ஆம் தேதி போன ஆண்டு (2016) ஞானக்கூத்தன் இறந்து விட்டார். ஒருவர் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் அவர் பிழைத்து வருவாரா என்பது சந்தேகம்தான். ஞானக்கூத்தன் விஷயத்தில் அப்படி ஆகிவிட்டது. ஆனால் திருவல்லிக்கேணி போனால் எனக்கு அவருடன் ஞாபகம் இல்லாமல் இருக்காது. தெற்கு மாட தெருவாகட்டும், பாரதியார் இல்லம் ஆகட்டும், பாரத்தசாரதி கோயில் குளம் ஆகட்டும், வெங்கடாசலம் தெரு முனை ஆகட்டும், அங்கே உள்ள குட்டி குட்டி ஹோட்டல்கள் ஆகட்டும், திருவள்ளூர் சிலை அருகில் உள்ள கடற்கரை ஆகட்டும் எல்லா இடங்களிலும் ஞானக்கூத்தன் இருந்துகொண்டிருக்கிறார் என்னைப் பொருத்தவரை.
ஓராண்டுக்குள் ஞானக்கூத்தன் நினைவு மலர் கொண்டு வர நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முடியாமல் போய்விட்டது. பொதுவாக அவருக்கு நினைவுநாளை விட பிறந்தநாளைக் கொண்டாடுவதுதான் பிடிக்கும். பாரதியாரின் நினைவுநாளை விட பிறந்தநாளைத்தான் அவர் விரும்பி வரவேற்பார். அதேபோல் ஞானக்கூத்தன் பிறந்த நாளன்று (அக்டோபர் 7) நினைவு மலரை கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஆனால் என்னை அறியாமலேயே ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கவனம் இதழைக் கொண்டு வந்துவிட்டேன். இதை அவருக்கு செய்த மரியாதையாகக் கருதுகிறேன்.
ஒரு சாகித்திய அக்காதெமி விருதோ ஞானப்பீட பரிசோ கிடைத்திருக்க வேண்டியவர் ஞானக்கூத்தன். ஏனோ அவருக்குக் கிடைக்கவில்லை. அந்தக் குறையை விஷ்ணுபுர விருது கொடுத்துப் போக்கியவர் ஜெயமோகனும் விஷ்ணுபுர நண்பர்களும். ஞானக்கூத்தன் குறித்து ஒரு ஆவணப்படமும் எடுத்துள்ளார்கள்.
வாழ்நாள் முழுவதும் கவிதை ஞாபகமாகவே வாழ்ந்தவர் அவர். கவிதை எழுதுவதோடல்லாமல், கவிதை எழுதுபவரையும் ஊக்கப்படுத்துவர். இன்று இல்லை என்றாலும், அவருடைய கவிதைகள் நம்மிடம் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அவர் கவிதைகளைப் படித்து மகிழலாம். இதோ இம்பர் உலகம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
எனது கனவுகள்
குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்ட
கனாக்களை நான் கண்டேன் என்பது
முற்றிலும் மறந்துவிட்டது.
எனது குழந்தை நண்பர்கள் என்னிடம்
எந்தக் கனவையும் சொன்னதில்லை
ஏதோ ஒரு முறை ஒரு கனவை
விளக்கு வைக்கும் நேரம்
அம்மாவிடம் சொன்னேன். என் வாயை
ஒற்றை விரலால் அம்மா மூடினாள்
பல கனவுகள் நைந்து கிழிசலாகி
மறதிக் காற்றில் பறந்து விட்டன.
அப்புறம் நான் எனது கனவுகளில்
ரெயில் நிலையங்களில் நின்று கொண்டிருந்தேன்
சில சமயம் பேருந்து நிலையங்களில் இருப்பேன்
ஒரு கனவில் கையில் ஒரு தாளுடன்
யாரிடமோ விபரம் கேட்பேன். எனது
தாளைப் பறிக்க முயல்வார். நான் பயந்து
வீதியில் ஓட்டம் பிடிப்பேன். அவர் துரத்துவார்
விழித்துக் கொள்வேன்
எனது கனவுகள் அப்படி ஆகிவிட்டன
கனவை விட்டு வெளியே வருகிறேன்
நிம்மதி கொள்கிறேன். அவரால்
விழித்தபின் துரத்த முடியாதல்லவா?
இன்று ஞானக்கூத்தன் நினைவாக கவிதைகள், கட்டுரைகள், ஒரே ஒரு கதை என்று நண்பர்களுடன் சென்னை புல்த்தகக் காட்சியில் சேர்ந்து படிக்கலாம் என்று நினைக்கிறேன். மதியம் 2 மணிக்கே ஆரம்பித்து விடலாமென்று நினைக்கிறேன்.
இன்று ஒருநாள் மட்டும் ஞானக்கூத்தனின் எந்தப் புத்தகம் வாங்கினாலும் பாதி விலைதான்.
(புகைப்படம் - க்ளிக் ரவி)
Comments