Skip to main content

அற்றம் காக்கும் கருவி



      மயிலாடுதுறையில் இருக்கும் நண்பர் பிரபு இலக்கியத்தில் ரொம்ப ஆர்வம் உள்ளவர்.  புத்தகங்களைப் படிப்பது அவற்றைப் பற்றி பேசுவது அவர் பொழுதுபோக்கு.  டூவீலரில் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கும் துணிச்சல் மிக்கவர்.  அப்படி சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை கட்டுரைகளாக எழுதி உள்ளார்.  சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கு அவர் செல்லும்போது, காமெரா, வாய்ஸ் ரெக்கார்டர் எடுத்துக்கொண்டு போக மாட்டார்.  பின் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வந்து பல நாட்கள் கழித்து ஞாபகத்திலிருந்து ஊரைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார்.  அசாத்தியமான ஞாபகசக்தி உள்ளவர்.
சமீபத்தில் கட்டுரைகள் எழுதி வந்தவர், கவிதைகளையும் எழுதுகிறார்.  அவர் முயற்சியை நான் எப்போதும் ஊக்கப்படுத்துவேன். பலருடைய எழுத்துக்களை வியந்து பாராட்டுவார் (இன்றெல்லாம் ஒரு எழுத்தாளரை யாராவது பாராட்டுகிறார் என்றால், அப்படிப்பட்ட நபர் எங்கே எங்கே என்று தேட வேண்டி உள்ளது.) கவிதைகளை எழுதிக்கொண்டு வருபவர், நாவல்கள், சிறுதைகளை எழுதவும் தயாராகி விடுவார் என்று நினைக்கிறேன்.

அவர் 'நான் மலாலா' என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதிய கட்டுரையை இங்கு தருகிறேன்.

அழகியசிங்கர்



பிரபு மயிலாடுதுறை


பாகிஸ்தானில் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்து தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த மலாலா யூசுஃப்ஸை-யின் சுயசரிதையான ‘’நான் மலாலா’’ நூலை சமீபத்தில் வாசித்தேன். அந்நூல் பல கேள்விகளை எழுப்பியது. பலவிதமான உணர்வுகளால் அலைக்கழிக்க வைத்தது. சாரமற்று நிகழும் பல சம்பவங்களுக்கு இடையேயும் வாழ்க்கையின் உயிர்மை மேல் தீரா ஆர்வம் கொண்டு முளைத்து வரும் அபூர்வமான மனிதர்களைப் பற்றி யோசிக்க வைத்தது. இனிமையின் அமிர்தத்தை புறந்தள்ளி வன்முறையின் கசடுகளைப் பூசித் திரியும் அறியாமையின் வெவ்வேறு வகை மாதிரிகள் பற்றி திகைக்க வைத்தது. கனவுகள் நிறையும் குழந்தைப் பருவத்தின் தீரா அழகு குறித்து வியக்க வைத்தது.

பள்ளிப் பேருந்தில் தாலிபான் தீவிரவாதியால் கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காக சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதக்கும் மலாலா அன்றைய தினத்திலிருந்து தன் வாழ்க்கைக் கதையை கூறுவது போல் நூல் அமைந்துள்ளது. மலாலா தன்னுடைய கதையைக் கூறும் போது அவருடைய பார்வைக் கோணத்தில் ஸ்வாட் பிராந்தியத்தின் வரலாறு, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் வரலாறு, தெற்காசிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் பல முக்கியமான உலக அரசியல் நிகழ்வுகள் ஆகியவை அதில் இடம்பெறுகின்றன. சிக்கலான ஒரு அரசியல் சூழலே இளம் வயதில் அப்பெண்ணும் அப்பெண்ணின் குடும்பமும் எதிர்கொண்ட எல்லா துயர்களுக்குமான காரணமாக அமைந்துள்ளது.

தீவிரமான சித்தரிப்பு முறையினால் வேகமான வாசிப்புக்கான சாத்தியத்துடன் இந்நூல் விளங்குகிறது. அரசியல் நிகழ்வுகள் தொடர்பான மலாலாவின் பார்வைகளைத் தாண்டி ஒரு சிறு குழந்தையின் மனதில் விரியும் ஓர் அழகான சின்னஞ்சிறு குழந்தை உலகம் தீட்டும் வண்ணங்கள் மறக்க இயலாததாக இருக்கிறது. மலாலாவின் தந்தைக்கும் மலாலாவுக்குமான தந்தை-மகள் உறவு கவித்துவமாக இருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் மலாலாவை காலையில் எழுப்பும் போது அவரது அப்பா ‘’ஜானி மன்’’ என எழுப்புகிறார். அதன் அர்த்தம் ‘’ஆத்ம தோழமையே’’ என்பது. கதைகள்,கவிதைகள்,வரலாறு மற்றும் சமகால அரசியல் நிகழ்வுகளை தனது தந்தையிடமிருந்து கேட்டறிந்து தந்தையிடம் விவாதித்து தனது சொந்த அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்கிறார் மலாலா. சிறு குழந்தையிலிருந்து இந்நிகழ்வு தொடர்ந்து நடப்பதால் மலாலாவிற்கு எல்லாவற்றைப் பற்றியுமான சுயசிந்தனையும் கற்பனைத் திறனும் இயல்பாக அமையப் பெறுகிறது. கல்வி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து துவங்குவது எவ்வளவு திறனுடன் வேலை செய்யக் கூடியது என்பதற்கு மலாலா கல்வி பயிலும் முறை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எத்தகைய எதிர்மறைச் சூழல் இருப்பினும் ஒரு பள்ளி நடத்தியே தீருவது என்ற முடிவுடன் பள்ளிக்கூடத்தை நடத்தும் மலாலாவின் தந்தை ஒரு வியப்பூட்டும் ஆளுமையாக விளங்குகிறார்.

பதினைந்து வயதுக்குள் மலாலாவின் வாழ்வில் என்னென்னவோ நடக்கிறது. தாலிபான்கள் அவர்கள் மாநிலத்தைக் கைப்பற்றுகின்றனர். ஒரு லைசன்ஸ் இல்லாத பண்பலை வானொலி அம்மாநில மக்களுக்கு கட்டளைகள் இடுகிறது. அவர்கள் தேசத்தின் அரசாங்கம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டு அவர்கள் வேறு மாநிலத்துக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். நாடு ராணுவ ஆட்சிக்கு கீழே வருகிறது. பர்தா கட்டாயமாக்கப்படுகிறது. அந்நாட்டின் ஒரு பெண் ஆட்சியாளர் அரசியல் காரணங்களால் கொல்லப்படுகிறார். அந்நாட்டின் தலைநகருக்கு மிக அருகாமையில் உலகின் மிகப் பெரிய தீவிரவாத அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒசாமா பின் லாடன் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தால் அழிக்கப்படுகிறார். உள்ளூர் தீவிரவாதிகள், வெளிநாட்டுத் தீவிரவாதிகள்,உள்ளூர் ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவம் ஆகியவை புழங்கும் தளமாகவும் மோதிக் கொள்ளும் இடமாகவும் பாகிஸ்தான் இருப்பதன் சித்திரத்தை நூல் முழுதும் காண முடிகிறது. நூலில் ஒரு இடத்தில் இந்தியப் பிரிவினை நிகழாமல் இருந்திருக்கலாமோ என மலாலா யோசிக்கும் இடம் ஒன்று வருகிறது.

ஒரு இந்திய வாசகனுக்கு ‘’நான் மலாலா’’ நூலை வாசிக்கும் போது இந்தியச் சூழலுடனான ஒப்பீடு இயல்பாகவே நிகழும். மக்களாட்சிக்கும் ராணுவ ஆட்சிக்குமான வேறுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். தெற்காசியாவில் அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதிலிருந்து தொடர்ந்து மக்களாட்சியாகவே நீடிக்கக் கூடியதாய் இந்தியா இருந்திருக்கிறது. மக்களாட்சி அதிகாரப் பரவலாக்கலில் குறியீட்டு ரீதியில் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் இந்தியாவில் செய்யப்பட்டிருக்கிறது. ஊழல் ஒரு பெரிய தடையாக இருந்தாலும் குடிகளுக்கு கல்வியையும் மருத்துவத்தையும்  வழங்குவதற்கான முயற்சியை அரசாங்கம் விடாமல் மேற்கொள்கிறது. மக்கள் நல அரசாக விளங்கவே இந்திய அரசாங்கம் விரும்புகிறது.
இஸ்லாம் கல்வியின் மேன்மையைப் போற்றும் ஒரு சமயம் என்பதை நூல் நெடுக மலாலா பதிவு செய்கிறார். மனிதர்களின் அறியாமையும் அதிகார வெறியுமே மதத்தின் பெயரால் கல்வியைத் தடை செய்ய முயற்சி செய்கிறது. அத்தகைய சக்திகள் அடையாளம் காணப்பட்டு நாகரிக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவதே மானுடத்துக்கான நன்மையாக இருக்கும்.

அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

என்கிறார் திருவள்ளுவர்.

நூலின் உள்ளடக்கத்தில் கூறுமுறையில் நூலின் இணை ஆசிரியரான கிறிஸ்டினா லாம்ப்-பின் வழிகாட்டுதல் வெளிப்படுகிறது. பலவிதமாக விரிவுபடுத்தி யோசிக்க சாத்தியம் உள்ள நுணுக்கமான பல விபரங்கள் நூல் முழுதும் விரவியுள்ளன. கல்வி, பெண் கல்வி, மனித உரிமைகள் மற்றும் மக்களாட்சி குறித்து ஆர்வம் மிக்க எவரும் வாசிக்க வேண்டிய நூல் ‘’நான் மலாலா’’. மொழிபெயர்ப்பாளர் பத்மஜா நாராயணன் அவர்கள் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.


(நான் மலாலா- மலாலா யூசுஃப்ஸை & கிறிஸ்டினா லாம்ப். மொழிபெயர்ப்பு: பத்மஜா நாராயணன். வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629001. விலை: ரூ.350)

Comments