Skip to main content

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 3


அழகியசிங்கர்


    ஆரம்பத்தில் உள்ள ஞானக்கூத்தனின் கவிதைகளில் இசையின் நுட்பத்துடன் கூடிய செய்யுள் வடிவம் தென்படும். படிப்பவரை கவர்ந்திழுப்பதோடு அல்லாமல், ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியான வரி அமைப்பைக் கொண்ட கவிதை வரிகள்.  இப்படி எழுதுவது ஞானக்கூத்தன் ஒருவருக்கே சாத்தியமானது. 
ஞானக்கூத்தன் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த ஞானம் உடையவர்.   நாள் முழுவதும் கவிதைக்காகவே வாழ்ந்தவர்.   கவிதைகள் எழுதுவதோடல்லாமல் மற்றவர்கள் கவிதைகளையும் விமர்சிப்பவர்.  கவிதைக்காக என்ற நூலில் கவிதைகள் குறித்து சர்ச்சை செய்துள்ளார்.  
திராவிட ஆட்சி வந்த புதியதில் அவர் எழுதிய காலவழுவமைதி  என்ற கவிதை பலத்த விமர்சனத்திற்கு உட்பட்டது.  தமிழ் என்ற கவிதை பலத்த சர்ச்சைக்கு உள்ளான ஒன்று.
சரி, ஞானக்கூத்தன் கவிதைகள் எப்படி உள்ளன என்பதைப் பார்க்கப் போனால், அவர் சொன்ன ஒரு விஷயத்தை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தில் அவர் இப்படி எழுதி உள்ளார்.  
'புதுக்கவிதைகளில் இரண்டு போக்குகள் உண்டு.  ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந பிச்சமுர்த்தியினுடையது.  இரண்டாவது மயன் என்ற பெயரில் எழுதிய கநாசுப்ரமண்யம் அவர்களுடையது.  இவ்விருவரையும் நான் அறிந்திருக்கிறேன்., இருவருமே என் கவிதைகளில் ஈடுபாடுடையவர்களாக இருந்தனர் 'என்று ஞானக்கூத்தன் குறிப்பிடுகிறார். ந பிச்சமூர்த்தியினுடைய வழி செய்யுள் வடிவில் உள்ள மரபார்ந்த  வழி.  க நாசுவின் வழியோ உரைநடை வழி. இருவரும் தமிழ்க் கவிதைக்கு முக்கியப் பங்காற்றியவர்கள்.
நாட்டுப்புற பாடலின் தன்மை அவருடைய சில கவிதைகளில் தென்படும்.  அதை அப்படியே கொண்டு வர முயற்சி செய்வார்.
தேரோட்டம் என்ற கவிதையை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.  இரண்டு பக்கங்கள் கொண்ட அக் கவிதையில் சில பகுதிகள் மட்டும் இங்கு தர விரும்புகிறேன்.
காடெ கோழி வெச்சுக்
கணக்காக கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு
                சூரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரங்களா

இப்படிப் போகும் இந்தக் கவிதை. இக் கவிதையைப் படிக்கும்போது நமக்கு நாட்டுப்புற பாடலை படிக்கும் எண்ணம் ஏற்படும். மருதம் என்ற கவிதையை வாசிக்கும்போதும் நமக்கு அந்த எண்ணம் ஏற்படும்.
ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே

உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே
என்றெல்லாம் தாளம் போடுகிற மாதிரி இக் கவிதை வரும்  ஆரம்பத்தில் ஞானக்கூத்தன் நாட்டுப்புற பண்ணில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன் கவிதைகளிலும் அது மாதிரியான தன்மையைக் கொண்டு வந்துள்ளார்.

(அகில இந்தியா ஆகாசவாணியில் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

Photo taken by Click Ravi.  

Comments