அழகியசிங்கர்
இந்த முறை முதன் முதலாக சென்னை புத்தகத் திருவிழாவில் விருட்சமும் கலந்து கொள்கிறது. ஸ்டால் எண் 12. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகக் கலந்து கொள்கிறேன். ஒரு முறை கலந்து கொண்டு வந்தாலே போதும் போதுமென்று ஆகிவிடும். 11 நாட்கள்தான் என்ன ஆகிவிடப் போகிறது என்று கலந்து கொள்கிறேன். புத்தகக் காட்சிக்காக 4 புத்தகங்கள் தயாரித்து விட்டேன். அதில் 1 புத்தகம் அச்சாகி வந்து விட்டது. மற்ற 3 புத்தகங்கள் கட்டாயம் அச்சாகி வருமென்று நம்பிக்கை இருக்கிறது.
ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு விட்டது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா. அவர் என் ஒன்றுவிட்ட சகோதரர். கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டு வந்தவருக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டது. அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்ச்சி அவரைப் பின் தள்ளி விட்டது. அவர் வாசிப்பதெல்லாம் ஆன்மிகப் புத்தகங்களாகப் போய்விட்டது.
ஆன்மிக விஷயங்களில் ரொம்பவும் ஈடுபட்டால் அதுவும் குறிப்பாக எழுதுபவர்கள் ஈடுபட்டால் எழுத வேண்டுமென்ற எண்ணத்தை ஸ்வாஹா செய்துவிடும். எனக்குத் தெரிந்து ஒரு கவிஞர் இதிலிருந்து ரொம்பவும் விலகிப் போய்விட்டார். அதனால்தான் எழுதுபவர்கள் தொடரந்து கவிதைகள், கதைகள், நாவல்கள் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவற்றைக் குறித்து தம் கருத்துக்களை பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அதேபோல் வாசிப்பவர்கள் ஆன்மிக விஷயங்களில் ஈடுபட்டால் இப்ப வருகிற ஒரு நாவலை ரசிக்க மாட்டார், ஒரு கவிதையை ரசிக்க மாட்டார், ஒரு சிறுகதையை ரசிக்க மாட்டார்.
என் சகோதரரை சற்று திசைத் திருப்பி ரமணரைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதத் தூண்டினேன். உண்மையில் ரமணரைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் சொன்னதைத்தான் திரும்பவும் சொல்ல முடியும். ஆனால் அதை ஒருவிதமாக தொகுப்பது என்பது, சுலபமாய் நடக்கக் கூடிய காரியமல்ல. ஏனென்றால் பெரும்பாலோர் ஆன்மிகம் என்றால் ஏதோ அதிசயம் என்று எழுதி விடுவார்கள். அது மாதிரி இல்லாமல் ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற தலைப்பில் வித்தியாசமாக தொகுத்துள்ளார் ஸ்ரீதர்-சாமா. 100 பக்கங்கள் கொண்ட இப்புத்தம் விலை ரூ.70தான். விருட்சம் வெளியீடாக முதல் புத்தகமாக இது வந்துள்ளது. இன்னும் 3 புத்தகங்கள் வர உள்ளன.
அதேபோல் ஸ்ரீதர்-சாமாவின் ஏற்கனவே எழுதிய சிறுகதைகளையும், நீண்ட குறுநாவலையும் தொகுக்க உள்ளேன். அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதற்காக இதைக் கொண்டு வர உத்தேசித்துள்ளேன். இப்போது எழுதுபுவர்களை திரும்பவும் படித்து அவர் எழுதுவதற்குள் நுழைய வேண்டுமென்பது என் விருப்பம்.
Comments