Skip to main content

ஞானக்கூத்தனின் படைப்புலகம் -2


அழகியசிங்கர்




ஞானக்கூத்தன் கவிதைகளில் அப்படி என்ன விசேஷம்.  கவிதையில் அவர் கையாளும் மொழியின் திறன்.  வாசகனைப் பிடித்து இழுக்கும் வித்தியாசமான அம்சம்.  இதுதான் அவர் கவிதைகளை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்துகிறது.  உதாரணமாக :

சைக்கிள் கமலம் என்ற கவிதையைப் பார்ப்போம்.

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பினைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிரப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிரப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என் மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்.

சைக்கிள் கமலம் என்ற கவிதையில் வண்டி ஓட்டுவது பற்றி கூறிகொண்டு வந்தவர், ஒரு வரியில் என் மேல் ஒருமுறை விட்டாள் என்று வரும்.

ஞானக்கூத்தனைப் பற்றி யாராவது பேச வந்தால் ஞானக்கூத்தனின் சில கவிதைகளை யாராலும் சொல்லாமல் இருக்க முடியாது.  நான் அப்படி குறிப்பிடப் பட வேண்டிய அவருடைய கவிதைகளின் பட்டியலை இங்கு தர விரும்புகிறேன்.  பிரச்னை, பரிசல் வாழ்க்கை, கீழ்வெண்மணி, விட்டுப்போன நரி, நாய், காலவழுவமைதி, யோஜனை, தோழர் மோசிகீரனார், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், கொள்ளிடத்து முதலைகள், வெங்காயம், வகுப்புக்கு வரும் எலும்புக் கூடு.  இப்படி ஞானக்கூத்தனின் பல கவிதைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் என்னுடைய பல நண்பர்கள் ஞானக்கூத்தன் கவிதைகளை ஒப்பிப்பார்கள்.

(அகில இந்திய ஆகாசவாணியில் நான் வாசித்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்)

Comments