அசோகமித்திரன்
இக்கட்டுரையின் நோக்கம் இந்திய அரசியல் சாஸனத்தை விவாதிப்பது அல்ல. மொழிபெயர்ப்பில் எப்படி நீண்ட கால விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன என்பதைக் குறிப்பிடும் சிறு கட்டுரை. அறுபத்தைந்து ஆண்டுகளாக நாம் ‘செகுலர்’ என்ற சொல்லுக்கு மதச்சார்பின்மை என்ற எதிர்மறைச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். சமீப காலத்தில் இது சரியில்லையோ என்று தோன்றும் வகையில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் மதம் என்பது நிதரிசனம். அதாவது அது உண்டா இல்லையா என்று கேட்கவே இடமில்லை. மிக எளியலிருந்து மகா செல்வந்தர்கள் வரை ஏதோ ஒரு மதத்தின் சார்பு இருக்கிறது. திருப்பதியில் ஒரு மணி நேரச் சிறப்பு தரிசனம் ஒரு சீட்டுக்கு இலட்சம் எளியவர்கள் 30 அல்லது 35 மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்கிறார்கள். டிசம்பர் மாதம் கிருத்தவர்கள் மாதம். ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்றவை பண்டிகைகள். மொஹர்ரம், ஈஸ்டெர் தவமிருக்கும் நாட்கள். இந்துக்கள் பண்டிகைகள் இரு கை விரல்களில் எண்ணமுடியாது. இப்படி இருக்கும்போது மதச்சார்பின்மை என்ற சொல் எதைக் குறிக்கிறது? மத சம்பந்தமில்லாத உலகாயத விஷயங்கள் என்று அகராதிகள் விவரிக்கின்றன. ஆனால் நடைமுறையில் மதசார்பின்மையை நாம் ‘செகுலர் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். நானறிந்து 1950களில் எந்த ஜெர்மானியனுக்கும் (பெண்கள் உட்பட)மதம், கடவுள் இவற்றுக்கு எந்த சம்பந்தமும் தேவையும் இல்லை என்றுதான் கூறினார்கள். இரண்டாம் உலகப் போரின் அழிவுகளையும் அவமதிப்பையும் முழுக்கப் பெற்ற அவர்களுக்குக் கடவுள், மதம் ஆகியவை வெறும் சொற்களாகப் போய்விட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கிய படைப்புகளில் ‘மை காட்!’ ’ஓ காட்’ ’காட் பெ தான்க்ட்’ ’காட் பி வித் யூ என்றெல்லாம் சர்வ சகஜமாக வருபவை.. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில் இவற்றைக் காண்பது அபூர்வம்.
ஹைதராபாத் நகரில் வருடம் ஒரு முறையாவது ஒரு மதக் கலவரம் வரும். இங்கே சென்னையிலேயே திடீரென்று விநாயக சதுர்த்தி ஒரு பதட்டமான காலமாயிற்று. ஆனால் இங்கொன்று அங்கொன்று நடப்பதாலேயே திடீரென்று இந்தியர்களின் சகிப்புத்தன்மை மறைந்து விட்டது என்று நினைக்கக்கூடாது. நமக்கே ஓரொரு தருணங்களில் தெருவில் வேறு யாருமே இல்லை என்றறியும்போது உள்ளூர ஒரு பயம் தோன்றுகிறது. இன்றும் சென்னையில் பல பறக்கும் இரயில் நிலையங்களில் இப்படித் தோன்றுவதுண்டு.
ஆனால் இவற்றைக் கொண்டு இந்த நாடு என்றென்றும் இப்படித்தான் என்று எண்ணுவது மிகை. என்னுடைய ஒரு சாமியார் நண்பர் கூறினார்: எவ்வளவு நிதான சுபாவம் கொண்ட மனிதனும் (அல்லது பெண்ணும்) வாழ்க்கையில் ஒரு முறையாவது தற்கொலை பற்றி நினைக்காமல் இருந்ததில்லை. உடனே அவர்கள் தங்களை மாய்த்துக் கொள்வார்கள் என்றாகாது. சாதாரணப் பேச்சிலேயே யாரோ ஒருவரைக் குறிப்பிட்டு ‘இவன் செத்தால்தான் விடிவு வரும்’ என்று சொல்வதைக் கேட்கிறோம்.
வரலாற்றில் இப்படிச் சொல்லி விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தலைமுறையினர் இதை அதிகம் தெரிந்திருக்க வழியில்லை. ஆனால் 1964அளவில் இந்தியாவே ஒரு திரைபடத்துக்கு ஆட்பட்டிருந்தது. பெயர் ‘பெக்கட்.’ ஒர் அரசனும் ஒரு சாமானியனும் நண்பர்கள். ஒரு நெருக்கடியான தருணத்தில் அவனை விமரிப்பவர்களைப் பழி வாங்க அரசன் தன் நண்பனை நாட்டு மத குருவாக நியமித்து விடுகிறான். நண்பன் உண்மையாகவே மதகுருவாக உணருகிறான்.இதனால் அரசன் “ஐயோ, அந்தப் புது சாமியாரை யாராவது ஒழித்து விடக்கூடாதா?” என்கிறான்.நான்கு பேர் உடனே அந்த மாதாகோயிலுக்குப் போய் அந்த மத குருவைக் கொன்று விடுகிறார்கள். அதற்காக அந்த அரசன் வாழ்நாளெல்லாம் வருந்துகிறான், தன்னைச் சாட்டையால் அடித்துக் கொண்டு வருத்திக் கொள்கிறான். இது வரலாற்றில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை இருவர் இலக்கியப் படைப்புகளாக இருபதாம் நூற்றாண்டில் பதிவு செய்திருக்கிறார்கள். இருவரும் நாடகமாக எழுதியிருக்கிறார்கள்.ஜான் அன்வி என்ற ஃபிரென்ச்காரர் ‘பெக்கெட்’ என்று எழுதியிருக்கிறார். இதன் ஆங்கில வடிவத் திரைப்படத்தில் பீடர் ஓ’டூல் மற்றும் ரிசர்ட் பர்டன் நடித்திருக்கிறார்கள். டீ.எஸ். எலியட் எழுதிய நாடகம் ‘மர்டர் இன் தெ காதிட்ரல்’ அரசனின் பெயர் இரண்டாம் ஹென்ரி. மதகுருவாக்கப்பட்டவ நண்பன் பெயர் தாமஸ் பெக்கட். இது 12ஆம் நூற்றாண்டில் நடந்த கதை.
பின் குறிப்பு :
நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்த கட்டுரை. இதழ் பிரதிகள் சிலவே உள்ளன.
Comments