Skip to main content

அசோகமித்திரன் கதை....


அழகியசிங்கர்

99வது இதழில் வெளிவந்த அசோகமித்திரன் கதை இது.ஏற்கனவே ரேடியோவில் இக் கதை ஒலிபரப்பாகி உள்ளது.  தினமும் ஒரு கதை ஒரு கவிதை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி வாசித்தால் 30 நாட்களில் 30 கதைகள் வாசிக்கலாம்.  அதேபோல் 30 கவிதைகள் வாசிக்கலாம.  ஓராண்டில் 365 கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கலாம்.  அசோகமித்திரன் கதையைப் படித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

பிரிவுபசாரம்
                                                                                                      அசோகமித்திரன்


“துரை கூப்பிட்றாரு,” என்று பங்கா ஆட்டும் ஹமால் காந்திமதி சொன்னான். சங்கரலிங்கம் அவன் மேஜையிலிருந்து எழுந்து ஜில்லா கலெக்டர் மால்கம் ஸ்காட் அறைக்குச் சென்றான்.
“சங்கர்லிங்கம், எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. தி டைம் ஹாஸ் கம் டு பார்ட்,” என்றான்.
“என்ன மாஸ்டர்?”
“என்னை மாஸ்டர்னு கூப்பிடாதேன்னு எவ்வளவு தரம் சொல்லிவிட்டேன்? இனிமேல் நான் சொல்லத் தேவை இருக்காது.”
“ஏன்?”
“என்னை ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜுக்கு மாற்றி விட்டார்கள்.”
“ரொம்ப சந்தோஷம், மா...சார்.”
“உனக்கு இதில் சந்தோஷத்திற்கு என்ன இருக்கிறது?”
“உங்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். நிறைய உங்கள் நாட்டு நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல உதவியாளர்கள் கிடைப்பார்கள்.”
“அப்பாடா, என்னை இன்றைக்கே அனுப்பிவிடுவாய் போலிருக்கிறதே?”
“அப்படி இல்லை, சார்.. இது என்னதான் ஜில்லா தலைநகரம் என்றாலும் பட்டிக்காடுதானே?”
“நான் வந்த போது அப்படித்தான் நினைத்தேன். இங்கிலாந்திலிருந்து என் கப்பல் மூன்று வாரங்கள் தாமதமாக வந்தது. என்னை இப்படி டின்னவேலிக்கு அனுப்பியதை நான் முதலில்  தண்டிக்கப்படுவதாக நினைத்தேன். இல்லை. எங்கும் கிடைக்க முடியாதஅறிவாளி எனக்கு உதவியாளனாகக் கிடைத்தான். நான்உன்னை எப்படியெல்லாம் விரட்டினேன்...”
“அதெல்லாம் இப்போது எதற்கு,சார்?”
இதெல்லாம் எனக்கு முதலில் தெரியவில்லை. எதைப்பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வந்தது. உண்மையில் நாங்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்து திரிந்த காலத்திலேயே இந்த நாடும் ஊரும் சட்ட திட்டங்கள் கொண்ட முறையான சமூகமாக இருந்தது. இதெல்லாம் எங்கள் பாட புத்தகங்களிலேயே இருந்தது நான் மனதில் ஏற்றுக் கொள்ளவே இல்லை. சங்கரலிங்கம், நான் உனக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன்.
“நான்தான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு சாதாரண ஹமாலாக இருந்த என்னை குமஸ்தா ஆக்கினிர்கள்.”
“சங்கரலிங்கம், நீ எப்படியும் முன்னுக்கு வந்து விடுவாய். சர்க்கார் வேலை இல்லாது போனால்கூட நீ எப்போதும் ஓர் அறிவாளியாக, ஒரு தலைவனாக இருப்பாய். எனக்கு அதில் சந்தேகம் இல்லை. நான் வெறும் பரிட்சை எழுதி இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன்.”
“எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.”
“ஏதாவது சொல்லவேண்டும் என்றால் இப்போதே சொல்லிவிடு. நாளைக்கே எனக்குப் பதில் வேறு ஒருவன் வரப் போகிறான். அவனுக்கு இருபத்துமூன்று வயதுதானாம்.”
“அவரும் ஐ.சி.எஸ்.தானே?”
“சங்கரலிங்கம், பிரிட்டிஷ்காரன் இந்தப் பரிட்சையில் தேற நிறையச் சலுகைகள் உண்டு. ஓர் இந்தியன் அவ்வளவு எளிதில் தேற முடியாது.”
“ஏன், சார்?”
“பிரிட்டிஷ்காரனுக்குத் தேர்வு நடப்பது அவன் சொந்த நாடு.. இந்தியனுக்கு இங்கிலாந்து வேறிடம். அதைத் தவிர மதிப்பெண் தருவதிலும் வேறுபாடு இருக்கிறது. வெள்ளைக்காரன் ஐம்பது சத வீதம் பெற்றால் போதும். இந்தியன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்.”
“அப்போது சுபாஷ் போஸ், ஆர்.சி.தத், அரவிந்த கோஷ் போன்றவர்கள் இவ்வளவு கடுமையான விதிகளையும் தாண்டியா தேர்வு பெற்றார்கள்?”
“எனக்கே இதெல்லாம் தெரியாது. நான் ஒரு முறை கல்கத்தா சென்றிருந்தேன். அப்போது நீ சொன்ன ரொமேஷ் தத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் சொன்னார். எனக்கு ஐ.சி.எஸ். என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாயிருந்தது.”
“சார், நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். ஆனால் இது அவர்களுடைய உரிமை என்றபடி இருந்த பலரை நான்  பார்த்திருக்கிறேன். உங்களுக்கு முன்பு இருந்த சலெக்டர்தான் நாங்கள் எல்லோரும் குதிரை பின்னால் ஓடி வர வேண்டும் என்று உத்தரவு போட்டார்.”
“என்ன அநியாயம்! நானும் அப்படித்தான் ஆரம்ப நாட்களில் இருந்தேன். என்னைப் போன்று இரு மடங்கு வயதானவர்களை ஓடி வர வைத்திருக்கிறேன். சங்கரலிங்கம். உன்னைக் கூட நான் அப்படி ஓட வைத்திருக்கிறேன்..”
“மாடமுக்கு விவரம் தெரியுமா?
“எது?”
“உங்களை மெட்ராஸ§க்கு மாற்றியிருப்பது.”
“நான் இன்னும் அவளிடம் சொல்லவில்லை. இந்த ஊரை விட்டுப் போக என்னை விட அவள்தான் வருத்தப்படுவாள்.”
“இல்லை, சார். அவளுக்குப் புது இடம் போவது மகிழ்ச்சியாக இருக்கும்.”
“தெரியாது. உண்மையில் இந்த ஊரில் என்னை விட அவளுக்குத்தான் நிறைய நண்பர்கள்.  நான் முதலில் ஒரு வருடத்திற்காகத்தான் டின்னவேலிக்கு வந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகள் இருந்து விட்டேன். முதல் வருடம் நான் யாரிடமும் பேசாமல், யாரிடமும் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். ஆனால் உலகம் என்பது இங்கிலாந்து மட்டும் அல்ல என்று தெரிவதற்கு அந்த ஓராண்டு தேவைப்பட்டது.”
“நீங்கள் தேவை இல்லாமல் நிந்தித்துக் கொள்கிறீர்கள்.”
“இதெல்லாம் நான் சொல்ல இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. வருகிறவன் சரியான வெள்ளைக்காரன். எங்கள் ஊரில் ஸ்காட்லண்டுக்காரர்கள் என்றால் கொஞ்சம் இளப்பம்.”
“பாஸ்வெல்லே சொல்லியிருக்கிறார்.”
’அப்படியா? எங்கே?”
“ஜான்ஸன் வாழ்க்கை வரலாற்றில்.”
ஸ்காட் சங்கரலிங்கம் கையைப் பிடித்துக் கொண்டான். “நீ படித்திருக்கிறாயா? சங்கர்லிங்கம், நீயும் என்னோடு மெட்ராஸ் வந்து விடு.”
சங்கரலிங்கம் பதில் பேசாமல் இருந்தான்.
“இல்லை, சங்கரலிங்கம். எங்கள் கவர்னர் முன் நாங்கள் அடிமைகள் போலத்தான் இருக்க வேண்டும். உண்மையில் இதை ஒரு வெள்ளைக்காரன் எதிர்க்கவில்லை. ஆனால் நிறைய இந்தியர்கள் எதிர்த்திருக்கிறார்கள். நீயும் வேண்டாம், உன் வேலையும் வேண்டாம் என்று உதறி எறிந்திருக்கிறார்கள். எனக்குப் பாண்டிச்சேரி சென்று அரவிந்த கோஷைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியாது.”
“சார், உங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன். நீங்கள் இவ்வாறெல்லாம் ஒரு குமஸ்தாவிடம் பேசக் கூடாது.”
“நான் உன்னை என் நண்பனாக, ஒரு வழிகாட்டியாக நினைத்துப் பேசுகிறேன். இன்று விட்டால் அப்புறம் சந்தர்ப்பமே கிடைக்காது.”
”நீங்கள் சென்னை சென்றால் அரவிந்தரை விட ரமணரைப் பார்ப்பது நல்லது. அரவிந்த கோஷ் ஐ.சி.எஸ். ஞாபகத்தில் உங்களோடு பழைய ஐ.சி.எஸ்.காரர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் அபாயம் இருக்கிறது. ரமணர் பழைய ஞாபகமே இல்லாமல் உங்களோடு பேசக் கூடும். இல்லை, உங்களுடன் அவர் பேசாமலேயே  போனாலும் போய் விடலாம். மலையைச் சுற்றிக் கொண்டிருப்பார்.”
“எங்கே அது?”
“திருவண்ணாமலை. ஒன்றுமே வேண்டாம். நீங்கள் உங்கள் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.”  
”சங்கரலிங்கம், நான் உன் வீட்டுக்கு வர ஆசைப்படுகிறேன். அழைத்துப்போக முடியுமா?”
“சார், கலெக்டர் குமஸ்தா வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது. மேலும் என் வீடு இருபது மைல் தள்ளி இருக்கிறது.”
“ஊர் பெயர் என்ன?”
     சங்கரலிங்கம் சொன்னான்.
     ஸ்காட் முகம் கறுத்தது “அங்குதான் நானும் என் மனைவியும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டோம்.”
”நீங்கள் எங்கள் கிராமத்துப் பெண்ணிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. மாட்டுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்ன செய்வது? கிராமத்தார்கள் கொதித்துப் போய் விட்டர்கள்.”
“தவறுதான். பெரிய தவறுதான்.”
”அன்று அவர்கள் உங்களையும் மாடமையும் உயிரோடு கொளுத்த இருந்தார்கள்.”
“அந்த நாளை நினைத்து நான் பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன். நீ அன்று அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தாமல் இருந்தால் நாங்கள் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டோம்.”
“நானும் பயந்து விட்டேன்.  விஷயம் இவ்வளவு தீவிரமாகப் போய் விடும் என்று நான் நினைக்கவில்லை.”
“அந்த நாளில்தான் சுயகௌரவம் என்பது வெள்ளைக்காரனின் ஏகபோகம் அல்ல என்று நான் தெரிந்து கொண்டேன்.”
”சார், இப்போது நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும்.”
“என்ன?”
“நானும் பயந்து விட்டேன். இருநூறு பேர் கூடி விட்டார்கள். கொளுத்த வருவார்கள் என்று தெரியாது. நானும் அந்த நாளை நினைத்துப் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து அவதிப் பட்டிருக்கிறேன்.”
“வட இந்தியாவில் வெள்ளைக்காரர்களைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். குண்டு எறிந்திருக்கிறார்கள். ஆனால் உயிரோடு கொளுத்தியதில்லை.”
“இங்கேயும் ஒரு துரையை ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்.”
“இங்கேதான்--மணியாச்சியில்.”
”உங்கள் விஷயத்தில் இவ்வளவு தீவிரமாக இருப்பார்கள் என்று நான் நினக்கவில்லை. நான் தவித்துப் போய்விட்டேன். தெய்வத்தை வேண்டினேன்”
“நீ எதற்கு அவ்வளவு தவிக்க வேண்டும்?”
     “ அன்று அந்தக் கிராமத்தாரைக் கூட்டியது யார் தெரியுமா?”
“தெரியாது,”
சங்கரலிங்கம் ஒரு கணம் ஸ்காட் முகத்தையே உற்றுப் பார்த்தான். பிறகு சொன்னான்..”நானும் விஷயம் இவ்வளவு மோசமாகப் போகும் என்று நினைக்கவில்லை. குளத்தில் துணி தோய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம்  ஆறுதல் கூறினேன். அவள் சமாதானமாகி விட்டாள். நீங்கள் உங்களை தொடர்ந்து வரச் சொல்லிவிட்டுக் குதிரையில் போய் விட்டீர்கள்.”
இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
சங்காலிங்கம் சொன்னான். “ நான் உங்களைப் பின்தொடரவில்லை.”
ஸ்காட் கண்களை விரித்துப் பார்த்தான்.
“கிராமம் சென்று விஷயத்தைச் சொன்னது நான்தான்.”     
  

Comments