Skip to main content

நானும் நடேசன் பூங்காவும்

அழகியசிங்கர்



நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன்.  எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.  
இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் வந்து  சும்மா பேசிக்கொண்டிருப்பேன்.  அப்போதே பலர் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் நான் பூங்கா போவதையே நிறுத்தி விட்டேன்.  நடேசன் பூங்கா ஒரு அற்புதமான பூங்கா.  எனக்கு பனகல் பூங்காவை விட நடேசன் பூங்காதான் ரொம்பப் பிடிக்கும்.
அதன் பின் பல ஆண்டுகளுக்குப் பின் என் வலது கையை தூக்க முடியவில்லை.  தோள் பட்டையில் வலி. வலி என்றால் அப்படியொரு வலி.  ஆர்த்தோ மருத்துவரைப் போய்ப் பார்த்தேன்.  அதனால் எந்தப் பிரயோஜனமும் எனக்கு ஏற்படவில்லை.  அந்த சமயத்தில் Laughter Club  என்பதைப் பற்றி கேள்விப்பட்டேன்.  அதன் தலைமை இடம் திருவல்லிக்கேணி.  அங்கிருந்த சிலர் நடேசன் பூங்காவிலும் அதைத் தொடங்கி வைத்தார்கள்.
ஆரம்பத்தில் நானும் கலந்துகொண்டேன்.  தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விடுவேன். Laughter Club ல் பலவிதமான உடலுக்கான பயிற்சிகள் கொடுப்பார்கள்.  எல்லோரும் சுற்றி நிற்பார்கள்.  ஒரே மாதிரி கைத் தட்டுவார்கள்.  ஒவ்வொரு பயிற்சிக்கும் சிரிப்பார்கள். பின் ஒருவரைப் பற்றி தினமும் விஜாரிப்பார்கள்.
ஒரு மாதம் கூட ஆகியிருக்காது   தாங்க முடியாத என் வலது தோள் பகுதி வலி முற்றிலும் குணமாகி விட்டது.  என்னால் இதை நம்ப முடியவில்லை. ஆனால் எப்போதும் நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது. மேலும் பல மாதங்களாக சுற்றி சுற்றி நடந்தும் இருந்திருக்கிறேன்.  Laughter Club   மாதிரி கூட்டம் நடத்தினால் என்ன என்று நினைத்துக்கொள்வேன்.  அது சாத்தியமே இல்லை என்றும் தோன்றும். ஏன் எனில் எழுதுபவர்கள், படிப்பவர்களை ஒன்று சேர்ப்பது ரொம்ப கஷ்டம்.  Laughter Club மிகக் கொஞ்சம் பேர்கள்தான் கலந்து கொள்வார்கள்.  ஆனால் அவர்களுடைய உறுதி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுமாதிரியான முயற்சியை கதை கவிதை வாசிக்க ஏற்பாடு செய்யலாம்.  அது முடியாத காரியம் என்று நன்றாகவே தெரியும்.  இப்படித்தான் இதை ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று கொள்கை எதுவும் எழுதுபவர்களிடமும் படிப்பவர்களிடம் செல்லுபடி ஆகாது.
பூங்கா மாதிரி ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினால் படிப்பவர்கள் எழுதுபவர்கள் எல்லாம் ஒரே அணியில் சேர்ந்து கருத்துகளைச் சொல்வார்கள்.  ஆனால் Laughter Club   மாதிரி இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்கிற மாதிரி ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தில் வராது.
தஞ்சாவூரில் பிரகாஷ் கதை சொல்கிற கூட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தியதாக நான் அறிந்திருக்கிறேன்.  தஞ்சாவூர் கவிராயர் கூட இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.  ஆனால் அதை எப்படி நடத்தினார் என்பது தெரியாது.  ஒரு பத்திரிகையிலிருந்து புத்தகத்திலிருந்து கதையைப் படித்தார்களா அல்லது மனசிலிருந்து என்னன்ன கதைகள் தோன்றுகிறதோ அதைச் சொன்னார்களா என்பது தெரியாது.  உலகம் முழுவதும் கதை சொல்லும் கூட்டம் இருக்கிறதாக நண்பர்கள்  சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் இங்கும ஆரம்பிக்க வேண்டும்.  குறிப்பாக கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும்  தமிழில்தான் கதைகள் கவிதைகள் வாசிக்க வேண்டும்.  இதில் உறுதியாக இருக்க வேண்டும்.
          இந்தக் கதை அல்லது கவிதைப் படிப்பதற்கே ஒரு டிமான்ட் வேண்டும். அந்த டிமான்ட் கிடையாது.  மேலும் வருபவர்கள் எதைஎதையோ படிப்பார்கள்.. கேட்பவர்கள் தலை எழுத்தா இதையெல்லாம் கேட்பதற்கு என்பார்கள்.  
ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.  படிப்பதை கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.  எதாவது நல்லது யாராவது படிப்பார்கள்.  இதனால் யாருக்காவது பயன் இருக்கும்.  ஒரு கதையை எழுதுபவர் சத்தமாக கதையைப் படிக்கும்போது என்னன்ன தவறுகளை செய்திருக்கிறோம் என்று  நினைக்கத் தோன்றும்.  ஆனால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால்தான் இந்தக் கூட்டமே தொடர்ந்து நடைபெறும்.
ஒருமுறை வைதீஸ்வரன் பிறந்த நாளை இந்த நடேசன் பூங்காவில் பல எழுத்தாள நண்பர்களைக் கூப்பிட்டு நடத்தினேன்.  அந்தக் கூட்டம் கூட நன்றாகவே இருந்தது.  இன்னொரு முறை திரிசூலம் என்ற ரயில்வே ஸ்டேஷனலில் சில நண்பர்களைக் கூப்பிட்டு கவிதை வாசிக்க வைத்தேன்.  அந்தக் கூட்டமும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்காமல் இல்லை. 
ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை.  நானே இதெல்லாம் எதற்கு என்று ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் நிறுத்தி விடுவேன்.  நான் கல்லூரியில் படிக்கும்போது கடற்கரையில் முல்லைச்சரம் என்ற பெயரில் கவிஞர் பொன்னடியான் என்பவர் மாதம் ஒரு முறை கூடி பல கவிஞர்கள் கவிதை வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.  அதெல்லாம் மரபு கவிதைகளாக இருக்கும்.  கம்யூனிசத் தலைவர் ஜீவா அவர்களின் புதல்வர் கவிதைகள் எழுதி அங்கு வருவார்.  நானும் அவருடன் அதில் கலந்து கொண்டிருக்கிறேன்.  அந்தக் கூட்டம் கூட நாளடைவில் குறைந்து கொண்டே போயிற்று.  என்றாவது டிவிக்காரர்கள் கவிதை வாசிப்பவர்களைப் படம் பிடிக்க வந்தால், அன்று மட்டும் ஏகப்பட்ட கூட்டம் வரும்.  முண்டி அடித்துக்கொண்டு கவிதைகள் வாசிப்பார்கள்.
நேற்று நான் நடேசன் பூங்காவிற்கு நாலு மணிக்கே வந்து விட்டேன்.  முதலில் ஒன்றை கவனித்தேன்.  பூங்காவின் உற்சாகமான தோற்றம்.  அங்கு யாரும் வந்து கவிதையோ கதையோ வாசிக்காவிட்டாலும் பூங்காவின் அமைப்பே புத்துணர்ச்சியைத் தருவதுபோல் இருக்கிறது.  அது போதும்.
நான் என்னுடைய புத்தகமான வினோதமான பறவையிலிருந்து ஒரு கவிதையை வாசித்தேன்.  அதை இங்கே தருகிறேன்.
    

வினோதமான பறவை

ஒன்று
வினோதமான பறவை
சப்தம் இட்டபடி
இங்கும் அங்கும்
சென்று கொண்டிருந்தது
மண்ணில் எதைத்
தேடிக்கொண்டிருக்கிறது
கோட்டான் பூனை
மதிற்சுவரில் சோம்பலாய்
சயனித்துக்கொண்டிருக்கிறது

கீழே
குடியிருப்பவர்
துருப்பிடித்த சைக்கிளை
எங்கே எடுத்துச் செல்கிறார்

வெயில் கொளுத்துகிறது
மரங்கள் அசையவில்லை
கதவைச் சாற்றிவிட்டு
வெளியில் அமர்ந்திருந்தேன்

ஆமாம்..
என் நேரமும்
உங்கள் நேரமும் ஒன்றல்ல....

                                                                                         27.05.2011



Comments