Skip to main content

புத்தக விமர்சனம் 19

'உலோக ருசி' -  பெருந்தேவி

அழகியசிங்கர்



சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் 'உலோக ருசி' என்ற பெருந்தேவியின் கவிதைப் புத்தகம்.  பொதுவாக நான் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது ஒரே அமர்வில் எல்லாவற்றையும் படித்து விடுவேன்.  ஆனால் சில புத்தகங்களை மட்டும் யோசித்து யோசித்து திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டு படிப்பேன்.  
உண்மையைச் சொல்லப் போனால் ஒரு நாவல் படிப்பது, ஒரு சிறுகதையைப் படிப்பது, ஒரு கட்டுரையைப் படிப்பது போல் சுலபமானதல்ல கவிதையைப் படிப்பது.  நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் நம்முடன் உடனடியாக அதன் அடுத்த அடுத்த நிகழ்ச்சிகள் உரையாடிக் கொண்டிருக்கும்.  ஆனால் 1000 பக்கங்கள் உள்ள மெகா நாவலைப் படிக்க ஞாபக சக்தி அவசியம் தேவை.  
கவிதையைப் படிப்பதில் வேறு பிரச்சினை வருகிறது.  அதாவது ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போது ஒரே மாதிரியான தோற்றத்தைத் தருகிறது போல எண்ணம் ஏற்படும்.  திரும்ப திரும்ப ஒரே விஷயம் போர் என்று கூட தோன்றும். மேலும் நாம் விரும்பும் விஷயத்தை கவிதை எப்போதும் சொல்வதில்லை.  நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் ஒரு ஓட்டம் இருக்கும்.  கவிதையில் அதுமாதரியான ஓட்டத்தைப் பார்க்க முடியாது.  ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும்.   இந்த விதி எல்லாக் கவிதைப் புத்தகத்திற்கும் பொருந்தாது.  உதாரணமாக நகுலன், ஆத்மாநாம் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது கவிதை நிறுத்தி நிறுத்தி படிக்க நம்மைத் தூண்டும்.  அதே க நா சு, ஞானக் கூத்தன் கவிதைகளில் அப்படியெல்லாம் தோன்றாது.  கவிதை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறிக் கொண்டே இருக்கும்.  அதாவது திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தையே படித்கிறோமா என்று தோன்றாது.
பெருந்தேவியின் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு கவிதையைப் படிக்கும்போது இன்னும் ஒரு கவிதையைப் படிக்க மனம் நகர்வதில்லை.   2010ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இக் கவிதைகள் அந்தத் தருணத்தில் அவர் மனதில் ஏற்பட்ட ஆவேசமா அல்லது உற்சாகக் கொண்டாட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளா என்று தெரியவில்லை. வாழ்க்கையின் யதார்த்தம், ஒன்று படாத ஆண் பெண் உறவு, இன்றைய வாழ்வியல் முறையில் அதிகம் பங்கு பெறும் கணினி உறவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு  கவிதைகள் எழுதி உள்ளார்.  திரும்ப திரும்ப பெண்ணிற்கு திருப்தியைத் தராத ஆணின் உருவம் வந்து கொண்டிருக்கிறது.
முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக்  கொடுங்கள் என்ற கவிதையில் ஆத்மாநாம் கவிதையுடன் பெருந்தேவியும் கவிதை எழுதி உள்ளார்.  இதைத் தனித்தனியாகப் படிக்கும்போது, இரண்டு வேறு கவிதைகளாக இவை படிக்கக் கிடைக்கின்றன. ஆத்மாநாம் கவிதைக்கு பதில் சொல்வதுபோல் பெருந்தேவி கவிதை உள்ளது.  
அதே சமயத்தில் நாலு வரிகளிலும் கவிதை எழுதி உள்ளார்.  உதாரணமாக ஞாபகம் சிலபல என்ற கவிதை.  
வாயில் மேலண்ணத்தில்
ஒட்டிக்கிடக்கும்
சாரமற்ற சுயிங்கம்
எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது நாக்கு.
இங்கே சாரமற்ற சுயிங்கம் என்கிறார்.  சாரமற்ற விஷயங்கள் சுயிங்கம் மாதிரி நம்மிடம் ஒட்டிக்கொண்டிருப்பதாக சொல்ல வருகிறார்.நாக்கிலிருந்து விழுந்து விட்டதாக சொல்ல வருகிறார். இவர் கவிதைகளில் பல சோதனை முயற்சிகளைக் கொண்டு வருகிறார்.  கவிதையில் தென்படும் வரிகளில் இன்னொரு அர்த்தத்தைப் புதைக்கிறார்.  
இதில் இருத்தல் நிமித்தம் என்ற கவிதை உள்ளது.  அதை இதுவரை பலமுறை படித்து விட்டேன்.  கவிதை மூலம் என்ன அர்த்தப் படுத்துகிறார் என்று யோசிக்கிறேன்.   அந்தக் கவிதையிலிருந்து சில வரிகளை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.  
உணவுக்குப் பின் உண்ண
நறுக்க மறந்துவிட்டேன் ஆப்பிளை
அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்
இதோ
சிறுகத்திதான் என்றாலும் கூர்மை
அறுக்கிறேன்
என் ஒரு முலை துடிக்க இன்னொன்று
அதற்குச் சாட்சியாகிறது  
ஏன் என்று கத்துகிறான்
கிறுக்கா என்று கத்துகிறான்
முலைகளுக்குக்  கேட்கிறது ஆனால்
அவைகளுக்குக் கேள்விகள் பிடிக்காது
குளியலறையில் முனையற்ற
முலையைக் கழுவுகிறேன்
பாத்திரங்களைக் கழுவிப்போட வேண்டும்
இப்படிப் போகிறது இந்தக் கவிதை.  ஒவ்வொரு கவிதைப் புத்தகத்திற்கும் வாசகப் பிரதி என்ற ஒன்று உண்டு.  இதில் வாசகப் பிரதி இதை எப்படி உள் வாங்கிக் கொள்ளும்.ஏற்கனவே சிலபதிகாரத்தில் கண்ணகியைப் பற்றி கூறும்போது அவள் ஒரு முலையை அறுத்து மதுரை மாநகரத்தையை எரித்துவிட்டாள் என்று வரும்.  முலையை சிம்பாளிக்காக ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை. அல்லது மித்தா.  என்ன மித் என்று அடியேனுக்குத் தெரியவில்லை. யாராவது விளக்கினால் புரிந்து கொள்வேன்.
கேசவா என்ற கவிதையில் அடிக்கடி கேசவா என்று உச்சரித்தால் விபத்தைத் தவிர்க்கலாம் என்கிறார் அத்தை.  தெரியாமல் தூக்கத்தில் கனவில் யாரோ ஒருவன் என்னுடன் இயக்கத்தில் இருக்கும்போது கேசவா என்று சொல்லி விடுகிறேன்  என்று கவிதை வரிகள் வருகின்றன.அப்போது கோபித்துக்கொண்டு போனவன் திரும்பி வரவில்லை என்று முடிக்கிறார். விசித்திரமான சிந்தனையாக இருக்கிறது.   
சில கவிதைகளை சற்று நீளமாக எழுதி உள்ளார்.  üநேற்று வெப்காமின் நீலச்சுடர் முதுன்னிலையில் என்ற கவிதை.  முகப் புத்தகம், மைஸ்பெஸ், ஆர்குட் தொடர்பு உள்ளவன்.  நண்பர்கள் முன் தற்கொலை செய்து கொள்கிறான்.  அதை வேடிக்கையான நிகழ்ச்சியாக முகப் புத்தகம் பதிவு செய்கிறது.  கொடூரமான நிகழ்ச்சி கூட முகநூலில் வேடிக்கையாகப் போகக் கூடிய அபாயம் உள்ளது.
68வது பிரிவு என்ற கவிதை கந்தசாமிக்கும் லதாவுக்கும் ஏற்படுகிற 68வது பிரிவு.  இவர்கள் இருவருக்கும்ல் ஏற்படுகிற முரண்பாடுகள் சாதாரண தொனியில் இருந்தாலும் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  90ல் உண்மையாக நிகழப் போகும் மரணம் முன்னதாகவே முந்திக் கொண்டு போகப் போகிறது என்ற கவலையைத் தூண்டுகிறது கவிதை. 
சில யோசனைகள் என்ற நீண்ட கவிதை ஒரு பெண்ணிய கவிதை.  எப்படி ஒரு ஆணை கவர்வதற்கு ஆணை ஏமாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது.  
இத் தொகுதியில் எனக்குப் பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று.  படிப்பவர்கள் இதையும் ரசிக்க வேண்டும்.

    புஷ்பா சேலையணிந்த முதல் நாள்

புஷ்பாவின் அண்ணன்
குளியலறைக்குப் போய்
நேரங்கழித்து வந்தான்
புஷ்பாவின் அக்கா
அத்தானை 
அன்று அழைத்துவந்ததுதான்
புஷ்பாவின் அப்பா
அவள் மேல் கண்ணடிபடுமென்றார்
புஷ்பாவின் காதலன்
அவன் எங்கே சேலையைப் பார்த்தான்
புஷ்பாவின் சிநேகிதி
அவள் மட்டும் தொட்டுப் பார்த்தாள்

புஷ்பா
புஷ்பாவின் அம்மாவாக இருந்தபோது
சேலையணிந்த முதல் நாள்
இப்படித்தான் 
சிடுசிடுத்தாள்
தடுக்கி விழாமலே
தடுக்கி விழுந்ததாக நினைத்துக்கொண்டாள்
கற்பனையில்கூட அன்று 
அவள் சேலை விலகவில்லை

ஜமாலன் இத் தொகுப்பிற்கு பின்னுரை எழுதி உள்ளார்.  ஆனால் பெருந்தேவி கவிதைத் தொகுதியை இனி கொண்டு வரும்போது முன்னுரையோ பின்னுரையோ தேவையில்லை என்று படுகிறது.  புதிதாக எழுதுபவர்களுக்குத்தான் அதெல்லாம் தேவைபடும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
எல்லோரும் வாசிக்க வேண்டிய தொகுப்பு,

உலோகருசி - கவிதைகள் - ஆசிரியர் : பெருந்தேவி - முதல் பதிப்பு : டிசம்பர் 2010 - வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629 001 - பக்கம் : 102 - விலை ரூ.75

  

Comments