அழகியசிங்கர்
தமிழில் படிப்பது என்பது மிகவும் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் முன்புபோல் கதைகள் பிரசுரமாவதில்லை என்று சொல்பவர்கள், பிரசுரமாகிக் கொண்டிருக்கும் கதைகளை எத்தனைப் பேர்கள் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதே போல் கதைகள் எழுதப்பட்டு பிரசுரம் ஆவதின் வழி தெரியாமல் இருப்பவர்கள் அதிகம் பேர்கள் உள்ளனர்.
கதை படிப்பதில், கவிதை வாசிப்பதில் ஆர்வம் உள்ள எழுத்தாளர்கள் நண்பர்கள் பலர் உண்டு. அவர்கள் ஒன்று சேர்ந்து எதாவது செய்ய முடியுமா? அதேபோல் கதையை கவிதையை நேசிக்கும் வாசகர்களும் உண்டு. எல்லோரும் ஒன்று சேர்ந்தால் என்ன? கதையைப் படிப்பது கவிதையைச் சொல்வது என்ற பழக்கத்தை நாம் நமக்குள் உருவாக்கிக் கொள்ள என்ன வழி?
அப்படி யோசித்துப் பார்த்தேன். பெரிய அளவில் கூட்டம் இல்லாமல், நம் இருக்கும் இடத்தில் பக்கத்தில் உள்ள பொது இடத்தில் வாரம் ஒரு முறை, அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை கூடி ஆளுக்கு ஒரு கதை அல்லது ஒரு கவிதை வாசித்தால் என்ன?
நாம் எழுதுகிற கதைத்தான் கவிதையைத்தான் வாசிக்க வேண்டுமென்பதில்லை. நமக்குப் பிடித்த கதை அல்லது கவிதையை வாசிக்கலாம்.
இதுமாதிரியான கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வரவேண்டும்? எத்தனைப் பேர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் குறைந்தபட்சம் இரண்டு பேர்களாவது இருக்க வேண்டும்.
நான் முதல் கூட்டத்தை வரும் ஞாயிறு (27.03.2016) நடேசன் பூங்காவில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் நடத்த உத்தேசம். பல நண்பர்கள் வர சம்மதம் தெரிவித்து உள்ளார்கள். முடிந்தால் நீங்களும் வாருங்களேன்.
Comments