Skip to main content

99வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை

அழகியசிங்கர்


நவீன விருட்சம் இதழ் வந்தவுடன் அதை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று உடனே பரபரப்பாக செயல்பட்டேன்.  முதலில் நான் நடை பயிற்சி செய்யும் இடத்திற்கு சில இதழ் பிரதிகளை எடுத்துக் கொண்டு போனேன். அங்கு எனக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து ஒவ்வொன்றாய் கொடுத்தேன்.  அதில் ஒருவர் சீனாவிலிருந்து பொருள்களை வாங்கி விற்பவர். நவீன விருட்சத்தை நீட்டியவுடன், 

"சார்...எனக்கு வேண்டாம்...நான் தமிழ் பத்திரிகை புத்தகம் படிப்பதில்லை," என்றார்.  

எனக்கு அதிர்ச்சி.  முதன் முதலாக ஒருவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் இப்படி சொலகிறாரே என்று தோன்றியது. நான் கேட்டேன். 

"தமிழ்ல பேப்பர் புத்தகம் படிப்பதில்லையா?". 

"இப்போ இல்லை...முன்பு படித்ததுதான், எனக்கு நேரமில்லை,"

"என்ன நேரம்...நீங்க மனசு வைச்சா நேரம் இருக்கும் சார்," என்றேன். 

"என்னால முடியாது, சார்."என்றார்.

"இதன் விலை ரூ 15 அதற்கா யோஜனை செய்யிறீங்க...அதைத் தர வேண்டாம்...ஆனா பத்திரிகை வாங்கிப் படிங்க...எனக்கு அது முக்கியம்.."

"இல்ல சார்...அதுக்காக இல்லை..என் கவனமெல்லாம் பிஸினஸில் இருக்கு...படிக்கவே முடியாது," என்றார்.

அவரிடமிருந்து நகர்ந்து விட்டேன்.  என்னிடமிருந்து பத்திரிகையை வாங்கிக் கொண்டவர்கள் எல்லாம் ஒரு மூச்சு விடுவதில்லை.  படித்தேன்..புரட்டிப் பார்த்தேன் என்று கூட சொல்வதில்லை.  உண்மையில் நான் பொறுமைசாலி.  இதுமாதிரி நிகழ்ச்சியை நான் 28 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன்.  இதோ இது 99வது இதழ்...அடுத்தது 100வது இதழ்.

என் வீட்டில் பக்கத்தில் குடியிருக்கும் ராமன் என்பவரிடம் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.  ஆனால் ராமனைப் பார்த்தாலும் இதழைக் கொண்டுபோய் கொடுக்க கொஞ்சம் அலுப்பு. ஏன்எனில் பத்திரிகையைக் கொடுத்தாலும், பத்திரிகை நன்றாக இருக்கிறது, அல்லது நன்றாக இல்லை என்று எந்த விமர்சனமும் இருக்காது.  அவரைப் பார்க்கும்போது என்னிடம் விருட்சம் மாதிரி இதழை வாங்கியதற்கான அறிகுறியே தெரியாது. அப்படித்தான் சில தினங்களுக்கு முன் ஒரு போன் வந்தது.  போன் ஜே கிருஷ்ணமூர்த்தி நூல் நிலையத்திலிருந்து வந்தது.  நான் ரொம்பவும் மதிக்கக் கூடிய இடம்.  அங்கு பல பத்திரிகைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
முன்பு நூலகராக இருந்தவர் என் நண்பர்.  இப்போது யார் என்று தெரியவில்லை.  போனில், "ஏன் இந்தப் பத்திரிகையை அனுப்புகிறீர்கள்?" என்று கேட்டார்.  
"ஏன்?"  என்று கேட்டேன். 
"அனுப்பாதீர்கள்...நாங்கள் பேப்பர் கடையில்தான் போடுவோம்...வேண்டாம்.." "எனக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பிடிக்கும்.  அவருடைய பேச்சைதான் நாங்கள் மொழி பெயர்த்து எங்கள் பத்திரிகையில் கொண்டு வர முயற்சி செய்வோம்.  லைப்ரரிக்குத்தானே அனுப்புகிறேன்," என்றேன்.
"இங்கு இதுமாதிரியான பத்திரிகையெல்லாம் யாரும் படிப்பதில்லை,"என்றார்.
உண்மையில் ஜே கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரிந்தால், விருட்சம் அவர் விரும்புகிற பத்திரிகையாக தோன்றியிருக்கும்.
அவரிடம் சொன்னேன் : "இனிமேல் அனுப்ப மாட்டேன்.".
அவர் போனை வைத்துவிட்டார்.  எனக்கு ஒன்று தோன்றியது.  அவரிடம், அனுப்பிய 99வது இதழை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று சொல்லலாமா என்று.  எனக்கு அப்படியெல்லாம் டக்கென்று பேச வரவில்லை.  
இந்தத் தருணத்தில்தான் தினமணி ஆசிரியர் நவீன விருட்சம் இதழைப் புகழ்ந்து எழுதியதைப் படித்து மகிழ்ந்தேன்.  
இதோ இப்போது 99வது இதழின் பிரதி கைவசம் இல்லை.  அதில் வெளியிட்ட ஞானக்கூத்தன் கவிதையை இங்கு தருகிறேன்.

ஞானக்கூத்தன் கவிதை

பசு மாட்டின் 
தலை
கால்
மடி
வால்
ஆசனம்
முதலான இடங்களைத்
தேவதைகள் தங்கள்
இருப்பிடங்களாகக் கொண்டுள்ளார்களாம்
இன்று நானொரு
யானையைப் பார்த்தேன்
தென்கலை நாமம் திகழ
பெரிய புல்லுக்கட்டு
தென்னை மட்டை
தேங்காய்களை நிதானமாகத்
தின்று கொண்டிருந்தது
யானையைக் கேட்டேன்
பசுவைப் போல் உன் உடம்பில்
தேவதைகள் இடம் பிடித்திருக்கிறார்களா என்று
எனக்கே போதாத என் உடம்பின் 
எல்லா இடங்களிலும்
நானே வாழ்கிறேன்
என்றது யானை.

Comments