Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.........72

அழகியசிங்கர்





நான் இன்னும் சீர்காழியிலிருந்து சென்னைக்கு வரவே இல்லை என்றே நினைக்கிறேன்.  நான் முன்பு பார்த்த சென்னை மாதிரி இது தெரியவில்லை.  மிகச் சாதாரணமாக நடக்கும் சாலையில் கூட கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. வண்டியை அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் கொண்டு வர முடியவில்லை.

போன மாதம் முழுவதும் என் புதல்வனின் திருமணத்தில் மூழ்கியிருந்தேன்.  முதலில் நான் என் பையனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறேனென்பதை நம்பவில்லை.

8 ஆண்டுகளுக்குமுன் என் பெண்ணிற்குத் திருமணம் செய்து முடித்திருந்தேன்.  வயது கூடிக்கொண்டே போகிறது.  என்னால் என்னை நம்பமுடியவில்லை.  காரணம் நான் வயதானவன் மாதிரி தோன்றவில்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன். என்னுடைய பல நண்பர்கள் தளர்ந்து போயிருந்தார்கள்.  திருமணத்திற்கு நான் பலரைக் கூப்பிடவே இல்லை.  காரணம் முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.  கிட்டத்தட்ட 55 பேர்களுக்குமேல் பல எழுத்தாள நண்பர்களைப் கூப்பிட்டேன். இப்போது அப்படி இல்லை.  8 ஆண்டுகளுக்கு முன், நான் தலையை டை அடித்திருந்தேன்.  முதன் முறையாக அப்போது டை அடித்திருந்ததால் வினோதமாகக் காட்சி அளித்தேன்.

பெண் திருமணத்தின்போது தெரிந்த என் வினோதமான புகைப்படங்கள் என்னை நகைப்புடன் பார்த்து  சிரித்துக்கொண்டிருந்தன.  முன்பு பலரை நேரில் போய்ப் கூப்பிட்டேன்.  இப்போது முடியவில்லை

என் வயது 58.  59 வயதை முடிக்க உள்ளேன். ஆனால், 60 மாதிரி தெரிந்தேன். கழுத்தில் தெரிந்த சுருக்கங்களை மறைக்க முடியவில்லை.  இந்த முறை டை அடிக்கவில்லை  என் பல நண்பர்கள் வந்தார்கள்.  எல்லோரிடமும் போட்டோ  எடுத்துக்கொண்டேன்.  ஒவ்வொருவரும் அவரவர் பெண் அல்லது புதல்வன் திருமணம் செய்து கொடுத்ததைப் பற்றி சொன்னார்கள்.  ஒரு நண்பர் சொன்னார்.  உன் கடமை முடிந்துவிட்டது.  இனி நீ சுதந்திரமானவன்.  நான் சிரித்தேன்.  சுதந்திரமானவன் என்று எப்படி சொல்லமுடியும்? 

இன்னொரு நண்பர் அவர் பையனை அழைத்துக்கொண்டு வந்தார்.  எனக்கு அடையாளமே தெரியவில்லை.  வேகமாக வந்த அவர் போட்டோ வில் நின்று போட்டோ  எடுத்துக்கொண்டார்.  அப்போது யார் என்று யோசித்துக்கொண்டேன்.  பின் அவர்  விருந்து சாப்பிட்டு வந்து நான் யாரென்று தெரியவில்லையா என்று கேட்டார்.  எனக்கு அவர் நீலகண்டன் என்று அப்போதுதான் புரிந்தது. 

உறவினர் ஒருவர் மேடையில் வந்து, நான் கிருஷ்ணன் என்றார்.  யார் இவர் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் என் உறவினர் என்று மெதுவாகத்தான் புரிந்தது.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், ஒரு பெண் புதிதாக எங்கள் வீட்டிற்குள் நுழைந்ததுபோல் தெரிந்தது. எனக்கு என் திருமணம் ஞாபகம் வந்தது.  அதனுடைய ரிகர்சல்தான் இந்தத் திருமணம் என்று தோன்றியது.

Comments

மகிழ்ச்சி. தம்பதியருக்குத் திருமண வாழ்த்துகள்!

Popular posts from this blog