Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.........62



சமீபத்தில் நான் ஒரு நண்பருக்கு போன் செய்தேன்.  அவர் பெயர் ரவி.  என் சிறிய நோட் புத்தகத்தில் ரவி என்று பெயரிட்டு எழுதியிருந்த தொலைபேசி எண்ணைத் தேர்ந்தெடுத்து போன் செய்தேன்.  ரவிதான் எடுத்தார்.  ஆனால் நான் எதிர்பார்த்த ரவி அல்ல அவர். 

உண்மையில் நான் பேசவே நினைக்காத ரவிதான் அவர். 

''நான் ரவி பேசுகிறேன்,'' என்றவுடன்.  ஐய்யயோ தவறு செய்துவிட்டோ மே என்று தோன்றியது.  பின் சமாளித்தேன். 

''எப்படிம்மா இருக்கே?'' என்றேன். 
''நல்லாயிருக்கேன்..''

''பெண்ணெல்லாம் செளக்கியமா?''

''ம்..ம்--''

''பூனா போவதுண்டா?''

''ம்...ம்.. சரி, நான் அப்புறம் பேசறேன்...'' என்று கூறி போனை துண்டித்துவிட்டார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது.  உண்மையிலேயே நான் பேச விரும்பாத ரவிதான் அவர்.  தெரியாமல் பேச்சைத் துவங்கினாலும், பின் ஏன் அவர் துண்டித்துவிட்டார்.  அவருக்கும் என்னுடன் பேசுவதில் ஒருவித சலிப்பு உண்டாயிருக்கும். 

வேடிக்கை என்னவென்றால் ஒருகாலத்தில் நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஒரே வங்கியில் இருவரும் குமாஸ்தாவாகச் சேர்ந்தவர்கள்.  அவர் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வார்.  பின் அதைப் பற்றி பிரமாதப்படுத்திப் பேசுவார்.  எனக்கு அதுமாதிரி பேச வராது.  நான் அவரிடம் ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகம் ஒன்றைப் படிக்கக் கொடுத்தேன்.  அதைப் படித்தப்பிறகு ஐயப்பன் கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார்.  அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.  நான் படிப்பதோ வேறு.  என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருப்பேன். அந்த ரவி காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு தில்லியில் போய் இருந்தார்.  பின் வேலையை விட்டுப் போய்விட்டார்.  லீகல் தொழிலிக்குப் போய்விட்டார்.  ஒருமுறை அவர் எனக்குப் போன் செய்து அவர் பெண் திருமணத்திற்கு என்னை அழைத்தார்.  அந்தத் திருமணத்திற்கு சுவாமி மலைக்குச் சென்றேன்.  அத்துடன் நின்றுவிட்டது எங்கள் நட்பு.  நாங்கள் பார்ப்பதே இல்லை.  பேசுவது என்பது இல்லவே இல்லை.  ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய நட்பு ஏன் நின்றுவிட்டது.  வயது ஒரு காரணமா?

வயதாக ஆக நம்முடன் பேசுபவர்களுக்கும் வயதாகிக்கொண்டே போகும்.  பின் பார்ப்பது, பேசுவது எல்லாம் குறைந்து போய்விடும்.  யாரும் நட்புடன் தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.  ஒருமுறை Driveinல் பிரமிளைச் சந்தித்தேன்.  அவர் யாரோ சிலருடன் டீ அருந்தி கொண்டிருந்தார்.  பின் என்னைப் பார்த்தவுடன் என்னைக் கூப்பிட்டார். 

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபிறகு அவர் சொன்னார் : ''அமெரிக்காவிலெல்லாம் இப்பப் பேச்சுத் துணைக்குக்கூட பைசா கொடுத்தா ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் என்று பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்கள்,'' என்றார்.

அவர் சொன்னது எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.  ஒரு காலத்தில் Intensive ஆக இருந்த நட்பு என்பது நீர்த்துப் போய்விட்டது. யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில்லை.  பேசுவதில்லை.  அப்படியே பார்த்தாலும் பேசினாலும் ஏதாவது சில வார்த்தைகள்தான் தேறும்.  உண்மையில் உறவினர் வட்டம் காணாமல் போய்விட்டது.  நட்பு வட்டம்கூட நீர்த்துப் போய்விட்டது. 

அலுவலகத்தில் பழகியவர்களெல்லாம் அலுவலகத்தோடு நின்று விடுவார்கள்.  அப்புறம் என்ன?  நாம் யார்?  நாம் தனி ஆளா? அல்லது ஆள்கூட இல்லையா?

Comments

உலகமயமாக்கலில் அன்பும் நட்பும் கூட அதிக விலையாகி விட்டது...
naam pesa virumbuvathe ethavathu velaiyaagathane....nam manam verumaiyay viruppindri unarvathu ethirtharapukkum varalame...naam kondirupathu natpu alla.pazhakkam
avvalavuthan.