Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 27


ஒரு வழியாக நவீன விருட்சம் 87/88வது இதழை அனுப்பி வைத்தேன். கடந்த 15 நாட்களாக அவஸ்தை. ஆனாலும் முழுத் திருப்தியாக இதைச் செய்தேன் என்று சொல்ல முடியாது. இன்னும் சிலபேருக்கு அனுப்புவது நின்று போயிருக்கும். எப்போதோ சந்தா கட்டியவர்க்கு அனுப்பியிருப்பேன். சமீபத்தில் சந்தாவைப் புதுப்பித்தவர்களுக்கு அனுப்பியிருக்க மாட்டேன். இனிமேல்தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும்.

அது போகட்டும். நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது கவிதை இதழாகவே ஆரம்பம் ஆனது. 16பக்கங்கள்தான் முதல் இதழ். எல்லாப் பக்கங்களும் கவிதைகள். கவிதையைக் குறித்து சில சந்தேகங்களை போன எ.சொ.21ல் எழுப்பியிருந்தேன். பலருக்கு நான் அதிருப்தியுடன் எழுதியிருப்பதாகத் தோன்றியது. உண்மை அப்படி அல்ல.

கவிதை ஒரு அற்புதமான விஷயம். மிக எளிதில் கவிதை படிப்பவர் மனதைப் பிடித்துவிடும். ஆனால் கவிதையை ரசிக்க தனிப்பட்ட மனோ நிலை தேவை. எதைக் கவிதை என்று தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. கவிதை என்று எதாவது எழுதிவிட வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு கவிதை எளிதில் வசமாகாது. கவிதை பலரை ஏமாற்றி விடும்.

70களில் வானம்பாடி என்ற கூட்டம் கவிதைகளைக் குறித்து உரக்கச் சிந்தித்து எழுதினார்கள். ஆனால் அவர்களுடைய கவிதைகள் பலவும் வெறும் சத்தம்தான். அவர்கள் எழுதும் பாணியிலே அவர்களுக்குத் திருப்தி இல்லை. அப்படியே ஓய்ந்து போய்விட்டார்கள். இனிமேல் அந்த முயற்சி தொடர்ந்தால் கேலிக்கு இடமாகிவிடும்.

அதேபோல் இடதுசாரிகள். அவர்களுடைய கவிதைகள் எல்லாம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுபோல் இருக்கும். உண்மையில் அவர்கள் என்றுமே பிரச்சினையைத் தீர்க்க விட மாட்டார்கள். ஏனென்றால் பிரச்சினை தீர்ந்துவிட்டால் அவர்கள் கட்சி இருக்க முடியாது. இடது சாரிகளுக்குக் கூட்டம் அதிகம். மாதம் ஒருமுறை சந்திப்பார்கள். அவர்களுடைய பத்திரிகைகள், புத்தகங்களை வாங்குவார்கள். தப்பான கருத்துகளை பேசிக்கொண்டிருப்பார்கள்.

இதை எதையும் எதிர்பார்க்காத கூட்டம் ஒன்று உள்ளது. அவர்களுடைய கவிதைப் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக அச்சுக்கு வராது. வந்தாலும் யார் கவனத்திற்கும் போகாது. ஆனால் அவர்கள்தான் உண்மையான கவிதைகளை மெளனமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று கவிதை பலரால் எழுதப்படுகிறது. கவிதை எழுதுபவர்கள் முதல்வராகவோ பிரதமராகவோ கூட இருக்கலாம். கும்பகோணத்தில் ஒரு பள்ளி தீ பற்றி எரிந்த சம்பவத்தின்போது அதை எப்படி கவிதையாகக் கொண்டு வருவது என்ற யோசனை பலமாக எனக்கு இருந்தது. அந்தத் தருணத்தில் நாட்டின் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அற்புதமாக அந்தக் கவிதை இருந்தது. தினமணியில் வெளிவந்த அந்தக் கவிதையை திரும்பவும் நவீன விருட்சத்தில் நான் வெளியிட்டிருந்தேன். துயரத்தை அந்த அளவிற்கு யாராலும் வரிகள் மூலம் வெளியிட்டிருக்க முடியாது. ஆனால் அதன் பின் அவர் எழுதிய எந்தக் கவிதையும் என் மனதை கவரவில்லை.

அதேபோல் ஆன்மிக குருமார்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் அவருடைய கவிதை முயற்சியை ரசிக்க முடியாது. ஆனால் நாரானோ ஜெயராமன் என்ற கவிஞர். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு எழுதுவதையே நிறுத்திவிட்டார்.

அதேபோல் ஜக்கி வாசுதேவ் காட்டுப்பூ என்ற அவருடைய பத்திரிகையில் எழுதும் கவிதைகளை நம்மால் பெரிதும் ரசிக்க முடியாது. கவிதைகளை புரியாதபடி எழுதுவார்கள். நம்மால் கிட்ட நெருங்க முடியாது. தேவை இல்லை என்றும் தோன்றும். பெரும்பாலான மொழிபெயர்ப்பு கவிதைகளை ரசிக்க முடியாது. சிலர் ரொம்பவும் புரியும்படியும் கவிதை எழுதிவிடுவார்கள். சிலசமயம் ரசிக்க முடியும் சிலசமயம் முடியாது. இதன் மூலம் கவிதை என்றால் என்ன என்பதை நிச்சயம் சொல்ல முடியாது. பெரும்பாலான கவிதைத் தொகுதிகளை ரசிக்க முடியாது. எழுதுபவர்கள் அவர்கள் அறியாமலே திரும்ப திரும்ப சலிக்கும்படி எழுதியதையே எழுதிக் கொண்டிருப்பார்கள்.

சில தினங்களுக்கு முன் என் அலுவலகத்தில் இரவு எட்டுமணிக்கு லோன் கட்டாத மகளிர் குழுவுடன் கடுமையாக அதிகாரி போனில் பேசினார். வந்தது வம்பு. அந்த மகளிர் குழுவைச் சேர்ந்த ஆண்கள் கடுமையாக போனில் வங்கியில் உள்ள அனைவரையும் திட்ட ஆரம்பித்தார்கள். வழக்கமாக நான், வங்கி மேலாளர், இன்னொரு அதிகாரி மூவரும் சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்குக் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன், வங்கி மேலாளரும், இன்னொரு அதிகாரியும் தூங்கி விடுவார்கள். போனின் எதிரொலியால் வங்கி மேலாளர் வழக்கம்போல் தூங்காமல் விழித்துக்கொண்டே வந்தார்.

அடுத்தநாள் காலையில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, டிரைவர் சீட் பின்பக்கத்தில் ஒரு திருக்குறள் தென்பட்டது. மேலாளர் என்னிடம் அதைச் சுட்டிக் காட்டினார். கவிதைக்கும் அவருக்கும் ரொம்ப தூரம். ஆனால் அந்தக் குறள் படிக்க நன்றாகவே இருந்தது. ஏன் இதைச் சொல்ல வருகிறேனென்றால் எளிதாக மனதைப் பிடித்துக்கொள்ளும்படி கவிதை இருக்கிறது என்பதற்காக. இந்த இடத்தில் நகுலனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.


இருப்பதற்காகத்தான் வருகிறோம்

இல்லாமல் போகிறோம்.

Comments

மிகவும் மகிழ்ச்சி. இதழைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Chandran Rama said…
Yes...longing to read your latest issue...

Sir..I am so glad that you have mentioned about
Narano Jayaraman. I am so fond of his poems. I love his book " VEELI MEERIA KILAI ".

Can you please let me know more about him, like his present whereabouts,his other works,etc.

I have been wanting to know more about Narano Jayaraman for a long time now...

I would be really pleased if you could provide me with more details ..

Looking forward for your kind reply.

thanks and wish "Naveena Virutcham" all the success.

ramachandran
for a long time now...