ருசியுடன் கனிந்திருக்கும் கவிதைகள் - கல்யாண்ஜி (அறிமுக உரையின் ஒரு பகுதி) செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள், பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் பேசுகிற அன்றாடத்தின் தொனியுடன் அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது.
ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது. கிளையிலைத் தடுப்புக்களைத் தாண்டித் துளைத்து மீறும் வெளிச்ச ரகசியம், எங்கிருந்தோ கேட்கும் பரிச்சயமற்ற குரலில் முடிச்சவிழும் சொல்லின் புதிர், நாம் தாண்டிப் போகிற பேருந்து நிறுத்தத்தில் தலை கவிழ்ந்து உட்கார்ந்து அழும் நடுத்தர வயதுப் பெண், உடன் வாழ்ந்து மறைந்த ஒருவனின் உடலை ஆவேசமான தழலுடன் உள்ளிழுக்கும் மின் தகன மேடையின் கடைசி இரும்புத் தடதடப்பு என்று இப்படி சொல்லிக் கொண்டே போக முடிகிறதான அவசியங்களின் வெளிப்படையான மற்றும் மறைத்து வைக்கப்படும் அடுக்குகள் தேவைப் படுகின்றன.
நாம் புழங்குகிற மொழியை அனுபவங்களின் தலைகீழ் விதையாக அவை ஊன்றுகின்றன. நாமறியாச் சொல்லின் இலைகளுடன் அவை முளைத்து, நாமறியாப் பொருளின் வாசனையுடன் அவை பூத்து, நாமறியா எழுத்தின் ருசியுடன் அவை கனிகின்றன.
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகளையும்,கவிதை சார் கட்டுரைகளையும் பின் தொடர்ந்து வருகிறார் என்பதை, அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் தடயப்படுத்துகின்றன.
- கல்யாண்ஜி
ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - செல்வராஜ் ஜெகதீசன்(கவிதைகள்)பக்.64 விலை ரூ.50
வெளியீடு:
அகநாழிகை பதிப்பகம்33 மண்டபம் தெருமதுராந்தகம் - 603306.
பேச : 999 454 1010
கிடைக்கும் புத்தக கடைகள்:
1) நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. 2) டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,சென்னை. 3) மதுரை : பாரதி புக் ஹவுஸ் (பெரியார் பேருந்து நிலைய உட்புறம்) posted by செல்வராஜ் ஜெகதீசன்
Comments