Skip to main content

இம்மாலை ததும்பி வழிந்திருந்தது பொழுது -

யாருமற்ற ஆல மரத்தடியில்

இலைகளும் பறவை

யொலிகளும் உதிர

அறிவு உலகில் வாழ்ந்த நாட்கள்...

மேய்ச்சல் போகும் மந்தை மாடுகளின்

மணியொலிச் சத்தமும்

அவ்வப்போது வியந்து

நின்று அகலும்

செருப்போசைகளும்

ஆலம்பழத்தின் ஊடே ஆசுவாசித்திருந்த பறவையும்

வழி தவறி

நம்மிடையே வந்த சிறு வெள்ளாடும்

காற்றில் படபடத்தபுத்தகப் பக்கங்களும்

வியந்து ரசித்த

வண்ணச் சிறு பூக்களும்

நினைவுகளில்

நுண்ணெழிற் சித்திரங்கள் ஆக...

பார்க்கவோ பேசவோ

எண்ணவோ எழுதவோ

கூடாத இந்நாளில்

கடந்த பாதைகளின்

புத்தகங்களும் பேச்சுக்களும் வழித்தடங்களும் மரங்களும்

ஒலிகளும் இலைகளும்

மாடுகளும் மந்தைகளும்

பேரோசையோடு

கடந்து விரைய

உறைகிறது இம்மாலை

பிரிவின் துரு பூசிய அந்த

ஆலம் விழுதுகளில்.

Comments

ஆசிரியருக்கு வணக்கம்.கவிதையின் தலைப்பும் வரிகளின் அமைப்பும் வடிவம் மாறி வந்துள்ளது. திருத்துமாறு வேண்டுகிறேன்.