Skip to main content

குடையும் நானும்




அலுவலக பயணமாக

நான் சென்ற அந்த ஊர்

எனக்குப் புதிது.

வேலைகளில்

ஒடுங்கிப் போன

என் கண்களுக்கு

அந்த ஊரில்

எதுவுமே தெரியவில்லை.

ஊருக்கு திரும்பும் நேரம்

பெய்த மழையில்

குடையினை விரித்தேன்.

சிதறிய மணலில் நீரின்

சிருங்கார ஆட்டம்

என் கால்களை

கிளுகிளுக்க வைத்தது.

சுற்றிலும் பன்னீரைச்

சொரிந்தது போல்

குடையருவியின் குதூகலம்.

கார் மேக குடையில்

கண்ணாடி மாளிகைக்குள்

கனிந்த மழை ரசத்தில்

களித்த நான்

ரயில் நிலையத்தை

நெருங்கிய போது

கையில் குடை இல்லை.

மழை விட்ட போது

தேநீருக்காக ஒதுங்கிய

கடையில் குடையையும்

விட்டிருக்கிறேன்.

அவசர அவசரமாக

குடைக்காக அந்த

வழியில் திரும்பிய

என் நடையின்

வேகத்தை கண்கள்

கால்களில் கயிறுகளைக்

கட்டி இழுத்தன.

நான் வந்த பாதையில்

உண்மையில் களைந்தது

விரிந்த குடைக்கு அப்பால்

மிதந்த மஞ்சள் மலர்

கூட்டங்கள்.

சில்லென்ற மழையில்

சிலிர்த்துப் பறந்த

சிட்டுக் குருவிகள்..

பதமான மழையில்

மிதமாகப் பறந்த

பட்டாம் பூச்சிகள்.

முரட்டு மீசையுடன்

மயிர்கள் நிறைந்த

உடம்போடு

அரக்கன் போல்

காட்சி அளித்த

தொலைவில் இருக்கும்

அந்த அசுர மலையும்தான்.

களைந்த குடைக்குள்

விரிந்த உலகத்தில்

விளைந்தன கோடானு கோடி

குதூகலங்கள்.

Comments