சொடுக்கிய பொத்தானின் கணத்தில்
முகத்திலாடும் வண்ணத்துடிப்புகளுடன்
விருப்பப்பாடலினை இசைக்கிறது மின்குயிலி
கண்கள் மூடியதொரு மங்கியவெளியில்
சட்டெனப் பூக்கும் பெருவிருட்சம்
நளினக் கிளைகள் சுழற்றி ஓங்கியாடுகிறது
நாதங்கள் விளையும் ஆதிப்பிளவினின்று பெருகுமிசை
பிரவாகமெடுத்தோடுகிறது உள்வெளியெங்கிலும்
நெகிழ்ந்தோடிக் கரைகின்ற ஆன்மாவினை
கைகோதிப் பார்க்கிறேன்
காற்றினில் மெலிதாய் விரவுகிற
சிறுகுழந்தையின் சிரிப்பினை ஒத்திருக்கிறது
கரையொதுங்கித் தளும்பிக் கிடப்பது
தெய்வீகமெனப்படுவதான ஒன்று
திடமென ஏதுமில்லாப் பரவெளியிது
புறஞ்சூழ்ந்திருக்கும் யாவருக்கும்
நான் தூங்கிப்போய்விட்டாலும் பரவாயில்லாமல்
வேய்சரீரத்தை தொந்தரவிக்காது ஆடிக்கிடத்தலும்
Comments