Skip to main content

நான், பிரமிள், விசிறி சாமியார்........1




ஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம் இருக்குமென்று சிலசமயம் எனக்குத் தோன்றும். பிரமிளை என்னால் புரிந்துகொள்ளவே முடியாது. சிலசமயம் என்னுடன் நன்றாகப் பேசுபவராகத் தோன்றும். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் என்னை விட்டு விலகியும் போயிருக்கிறார். அவருடன் பழகிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக என்னை அடிக்கடி சந்திக்க வந்து கொண்டிருப்பார். சந்திக்காத நாட்களில் கார்டில் கடிதம் போடுவார். ஒருமுறை என் சட்டையைப் பார்த்து, 'சட்டை நன்றாக இருக்கிறது,' என்று குறிப்பிட்டார். அன்றே என் சட்டை ஒரு ஆணியில் மாட்டி கிழிந்து விட்டது. ஒரு முறை, 'என்ன நன்றாக சாப்பிட்டீர்களா?' என்று வயிற்றைத் தட்டினார். அன்று எனக்கு வயிற்று வலி. பிரமளுடன் நட்புடன் பழகுவது என்பது கடினம். இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் ஆதரவே இல்லாதவர். பலநாட்கள் அவர் எப்படி வாழ்க்கை நடத்துகிறார் என்பதை யோசித்துக்கொண்டிருப்பேன்.


மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டர் ராமர் கோயிலில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அவருடன் பேசிய பல விஷயங்களை நான் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். அவருக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டி விடுவார். ஆனால் பேசும்போது மரியாதையாகத்தான் பேசுவார். அவர் ராயப்பேட்டையில் இருந்தபோது பலமுறை அவர் அறைக்குச் சென்றிருக்கிறேன். க்ரியா இருந்த தெருவிற்கு எதிரில்தான் அவர் வசித்து வந்தார். இலங்கையில் வசிப்பது ஆபத்து என்பதை அவர் முன்பே உணர்ந்திருந்தார். அதனால் அவர் இலங்கையைவிட்டு 60 வாக்கில் சென்னைக்கே வந்துவிட்டார். ஏனோ அவர் திரும்பவும் இலங்கைக்குச் செல்லவில்லை.


ஜே கிருஷ்ணமூர்த்தி மீதும், விசிறி சாமியார் மீதும் அவருக்கு அலாதியான மரியாதை உண்டு. நான் சின்ன வயதில் மருந்துக்கடைகளில் ஒரு சாமியார் படம் பார்ப்பேன். அந்தச் சாமியார் படம் மீது எனக்கு என்னை அறியாமல் பக்தி ஏற்படும். நான் பிரமிளுடன் பழகியபிறகுதான் அந்த சாமியார்தான் ஷீரடி சாய்பாபா என்பதை அறிந்துகொண்டேன்.


ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் கடுமையாக சண்டைக்கு வந்து விடுவார். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் லேட்டஸ்ட் என்பார். புத்தரை விட முக்கியமானவர் ஜே கிருஷ்ணமூர்த்தி என்பார். கிருஷ்ணமூர்த்தியை அவர் நம்ப தொடங்கியபோது, அவர் ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். அவருக்குத் தெரிந்த நண்பர்கள இருவரில் ஒருவரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது காப்பாற்றியிருக்கிறார். ஒருவர் இறந்துவிட, இன்னொருவர் தப்பித்துவிட்டார். அதற்குக் காரணம் கிருஷ்ணமூர்த்தி என்பார் பிரமிள்.


அந்த நண்பர்கள் இருவரும் சகோதரர்கள். தீவிர கஞ்சா அடிப்பவர்கள். அவர்கள் உயிரையே குடிக்கும் அளவிற்கு கஞ்சா அவர்களை இழுத்துச் சென்றுவிட்டது. ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் தீவிர கஞ்சா அடித்துக்கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற முடிந்தது. அந்த நண்பர் அதன்பின் பிரமிளுடன் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு அடிக்கடி வருவார். பிரமிளுக்கு பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நண்பர்கள்தான் பிரமிளுக்கு பலதடவை உதவி செய்திருக்கிறார்கள். (இன்னும் தொடரும்..)

Comments

நல்ல பதிவு. பிரமிள் குறித்து நிறைய அறியத் தரப்போகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே!
தொடருங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறேன் !
விசிறிச் சாமியார்? இவரைத்தானே பாலகுமாரனின் குரு என்று எங்கோ படித்த நினைவு.

நானும் காத்திருக்கின்றேன்.