Skip to main content

ஐந்து கவிதைகள்



இன்று முத‌ல்


வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று

ஒலித்தது.

வேணுகோபால் இறந்துவிட்டான்

உடனே கிளம்பி வா.


உண்மையில் வேணுகோபால்

என்று எனக்கு யாரும் இல்லை.

இன்று முத‌ல்

அந்தக் கவலையும் தீர்ந்தது.



முத‌ல் நிலவு


இறுக மூடிக்கிடக்கும்

அந்தக் குழந்தையின்

கைகளை யாரோ

விடுவிக்கிறார்கள்.


அந்தக் குழந்தை

தன்னோடு கொண்டு வந்த

நட்சத்திரங்கள், நிலவுகள்

உ…ரு…ண்…டோடுகின்றன.


கனவில்

கடவுள் கோபிக்கிறார்.

குழந்தை சிரிக்கிறது.


இரண்டாம் முறையும்

நட்சத்திரங்கள், நிலவுகளை

தருகிறார்.

அது ஒருபோதும்

முதல் நிலவு

முதல் நட்சத்திரங்கள்

போல் இருந்ததில்லை.



யாரும் சொல்லாத கவிதை

இதுவரை யாரும் சொல்லாத

கவிதையை

எடுத்துக்கொண்டு

திரும்பினேன்.


அ‌ங்கே

நீ இல்லை.

நான் இல்லை.

யாரும் இல்லை.

எதுவும் இல்லை.

எதுவுமற்ற அதுவும் இல்லை.


நீட்சி


முன்பொருநாள்

எவனோ ஒருவன்

தன் சதைகளை அரிந்து

கழுகுக்கு போட்டானாம்.

அவனது நீட்சியென்று

அடுக்குமாடி குடியிருப்பின்

என் ஜான்னலூரம்

காத்துக்கிடக்கின்றன

அதே புறாக்கள்.


***********

பாரியின் காலத்திலிருந்து

கிளம்பி வந்த

கொடியென்று

இருசக்கரவாகனம் மீது

படர்ந்தெழுந்திருந்தது.

எடுக்கவா தொடுக்கவா

என்றது

என்னைப் பார்த்து.

Comments

அருமையான கவிதைகள்.
நன்றி...முத்துவேல்
மனுஷ்யபுத்திரன் வகை கவிதைகள் என்று கூறுவதைவிட மனுஷ்யபுத்திரன் ’நகல்’ கவிதைகள் என்பதே பொருந்தும்
தங்கள் விமர்சனத்துக்கு நன்றி சுதாகர்.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மாற்றிக்கொள்கிறேன்.