Skip to main content

இருபத்திமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (23.09.2019)அழகியசிங்கர்ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னால் முழுவதும் புத்தகம் படிக்க முடியவில்லை.  அவ்வளவு கெடுபிடி.  அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  ஒரு புத்தகத்தை முழுவதும் படிக்க முடியவில்லை.  நான் முதலில் ம பொ சியின் தமிழன் குரல் என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.  அதைப் படிக்க ஆரம்பித்தவுடன் என்னால் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை படிக்க முடியாது.  அதனால் வேற புத்தகம் எடுத்துக்கொண்டேன்.  80 பக்கங்கள் அடங்கிய புத்தகம்.

நேற்று பாதிப் பொழுது நம்மவீட்டுப் பிள்ளை என்ற பேத்தலான படம் பார்த்தோம்.  கூட்டமோ கூட்டம்.  அதுவும் உதயம் தியேட்டரில் அந்தப் படம் பார்த்தேன்.  இனிமேல் உதயம் தியேட்டரில் மட்டும் படம் பார்க்கக் கூடாது என்று தோன்றியது.  காரணம் குடித்து விட்டு சினிமாவிற்கு வருகிறார்கள்.  அப்படி வருகிறவர்கள், அமைதியாகப் படம் பார்த்துவிட்டுப் போகலாம், ஆனால் கெட்ட வார்த்தையால் எல்லோரையும் பார்த்து சத்தம் போடுகிறார்கள். உதயம் தியேட்டர் நிர்வாகம் இது குறித்து ஒன்றும் செய்யவில்லை.  அந்த 3 மணி நேரததிற்கு பல புத்தகங்களைப் படித்து விட்டிருக்கலாம்.  என் நேரமெல்லாம் வீண்.

என்ன புத்தகம் படிப்பதென்று நான் தேடிக்கொண்டிருந்தேன்.  என் கையில் நவகாளி யாத்திரை என்று சாவி எழுதிய புத்தகம் கிடைத்தது.  ஆனாலும் அந்தப் புத்தகத்தை நேற்றே படித்து முடிக்க வில்லை.

இன்று காலையில்தான் படித்து முடித்தேன்.  மொத்தமே 80 பக்கங்கள்தான்.  க்ரவுன் அளவில் அந்தப் புத்தகம் உள்ளது.  கொஞ்சம் பெரிய எழுத்தில்தான் அந்தப் புத்தகம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

சாவி எழுதிய இந்தப் புத்தகத்திற்கு கல்கி முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் காந்தியின் மரணத்தை கல்கி தன் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார்.  

'காந்தி மகான் காலமாகி நாள் இருபது ஆகியும் கலக்கம் சிறிதும் நீங்கவில்லை.    உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது; வாழ்க்கை நடந்து ஆறுதலும் கொண்டிருக்கிறது. 

எனினும், ஜனவரி 30க்கு முன்பு இருந்ததுபோல் இப்போது ஒன்றுமில்லைý என்கிறார் கல்கி உருக்கமாக.

கல்கி பத்திரிகை சார்பாக நவகாளிக்குப் போகிறீர்களா என்று கல்கி சாவியைக் கேட்கிறார். உடனே ஒப்புக்கொள்கிறார்.  கல்கி உடனே நவகாளிக்குப் போவது எவ்வளவு ஆபத்தானது என்று விவரிக்கிறார்.  

'காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான்.  நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று.  உள்ளம் பதைத்தது.  மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருக்கினறன.  பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.' என்கிறார் கல்கி.

ஆனால் சாவி அவர் கட்டுரையில் அப்படி பயந்தபடி எழுதவில்லை.  காந்தி நவகாளியைப் பற்றி குறிபிட்டுருப்பதைப் பற்றி கல்கி எழுதியிருக்கிறார்.

"என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது.  இதற்குமுன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை.  இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அஹிம்சா தர்மத்திற்குத் தோல்வியாகாது.  அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப்பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும்.  இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்," என்று கூறியுள்ளார். 

காந்திஜி எப்போதும் பாடும் பஜனை பாட்டில் üஈசுவர அல்லா தேரே நாம்ý இந்த வரியை ஹிந்துக்கள் விரும்பவில்லை.  

ஆனால் ஜனவரி 30ஆம் தேதி காந்தி மகான் உயிர்த் தியாகம் செய்த பிறகு, எத்தனை லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மனதில் சிறிதும் தயக்கமோ கல்மஷமோ இல்லாமல், ஈசுவர அல்லா தேரே நாம் என்னும் பஜனை வரியை விம்மிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் பாடியிருக்கிறார்கள்

ஒருநாள் மாலை தியாகராயநகர் பனகல் பார்க்கைச் சுற்றி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார் சாவி.  அவரைக் கவனித்த நண்பர்கள் சிலர், ஏன் இதுமாதிரி நடை போடுகிறீர்கள் என்று கேட்கிôர்கள்.  நவகாளிக்குப் போகிறேன் என்கிறார் சாவி.  அவர்கள் கேட்கிறார்கள்.  நவகாளிக்கு நடைப் பயணமாகப் போகிறார்களா என்று கேட்கிறார்கள்.  இல்லை இல்லை. 

காந்தியடிகளின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி நடக்கப் போவதாகவும். அவருடன் கூட நடக்கும்போது வேகமாக நடக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் சாவி.

நவகாளிக்குப் போவதற்கு முன் தென்னிந்தியப் பிரமுகரான திரு சாரியார் வீட்டிற்குப் போகிறார் சாவி.  இரண்டு நாட்களுக்கு நவகாளியைப் பற்றி விஜாரிக்கிறார்.  இரண்டாவது பிரயாணத்திட்டத்தில் காந்திஜியை ஸ்ரீநகர் என்னும் கிராமத்தில்தான் சந்திக்க முடியும் என்ற விபரம் கிடைக்கிறது. 

ஒரு வழியாக அரை குறை ஹிந்தி பாஷையை வைத்துக்கொண்டு, ரயில் ஏறி, கப்பல் ஏறி, மூங்கில் படகு ஏறி, மோட்டார் ஏறி, மாட்டு வண்டி ஏறிக் கடைசியில் ஒரு விதமாக úஸôணாய் மூரி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்கிறார் சாவி.  அங்கிருந்து மகாத்மாஜி இருக்குமிடத்துக்குப் பத்து மைல் தூரம்.  அந்த இடத்துக்கு வண்டிப் பாதை இல்லை.  நடைபாதைதான். தனியாய் ஏகாந்தமாகப் பிரயாணம் செய்கிறார்.

சிரமப்பட்டு காந்தி மகாத்மாவைக் காண்கிறார் சாவி.  அது குறித்து, 'என்னுடைய பிரயாண அலுப்பெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் அடியோடு மறைந்தன,' என்கிறார்.  

மகாத்மாஜி காலையில் தடியை ஊன்றிக்கொண்டு வெளியே புறப்பட்டு விட்டார்.  வாசலில் நின்ற நாய் அவரை அணுகியது.  'அச்சா குத்தா' என்று சொல்லி காந்திஜி அதை அன்புடன் தடவிக்கொடுத்தார்.  அந்த நாயைப் பற்றி  அங்கு சந்தித்த மாணிக்கவாசகம் என்ற சாவி நண்பர் விபரமாய் கூறினார். 

"நவகாளி ஜில்லாவிலுள்ள நோவாகாலா என்ற ஒரு கிராமத்தில் பெரிய ஹிந்துக் குடும்பம் இருந்தது.  அந்தக் குடும்பத்தில் ஆண் பெண்  அடங்கிய ஒன்பது பேர் இருந்தனர்.  அந்த ஒன்பது பேர்களும் வெறிகொண்ட காலிக் கூட்டத்தினரின் வாளுக்குப் பலியாகிக் கூண்டோடு போய்விட்டனர்.  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த நாய்.  மகாத்மாஜி மேற்படி கிராமத்துக்குப் போயிருந்த சமயம். இந்த நாய் அவரைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவரைச்சுற்றிச் சுற்றி வந்தது. பின், தன்னுடைய குடும்பத்தார் வெட்டிப் புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மகாத்மாஜியை அழைத்துச்சென்று புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டியது.  காந்திஜி நாயின் அபூர்வ அறிவைப் பார்த்து வியந்தார்.  அன்றிலிருந்து மகாத்மாஜி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து நாய் வருகிறது."

இப்படிப் பல சிறு சிறு சம்பவங்களைக் கொண்டதுதான் இந்தப் புத்தகம். மகாத்மாவின் மாசு மருவற்ற தூய வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒரு துராத்மா கடிதத்தின் மூலம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தான்.  

பிரார்த்தனைக் கூட்டத்தில் அதற்குப் பதில் அளிக்கிறார். 'கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன்.  நாவுக்கு ருசியாகப் பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது.  உயிர் வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பதுதான் உண்மை யோகியின் லட்சணம்.'

இந்தப் புத்தகம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது.  முதல் அத்தியாயம். நவகாளி யாத்திரை, இரண்டாவது அத்தியாயம். இந்துஸ்தானி விழா, மூன்றாவது அத்தியாயம் மதுரையில் மகாத்மா, நான்காவது அத்தியாயம் நவகாளி நினைவுகள்.

மகாத்மாவின் சென்னை மாம்பல விஜயத்தினால் மாம்பலம் சில தினங்களாகத் தேர்த் திருவிழா பட்ட பாடாயிருந்து கொண்டிருக்கிறது.   ஓட்டல்களில் கொடுக்கப்படும் காப்பியிலிருந்து மாம்பலத்தில் கூடும் அன்றாடக் கூட்டத்தின் கணக்கைச் சுலபமாக அறிந்துகொண்டு விடலாம் என்கிறார் சாவி.

காப்பி கறுப்பு வர்ணமா? சரி, ஐம்பதினாயிரம் பேர்.  கொஞ்சம் தண்ணீர் கலந்த வெண்மை நிறமா? எழுபத்தைந்தாயிரம் பேர்.  நீர் நிறைந்த வெறும் திரவ பதார்த்தமா? சரி, லட்சம் போர்.  இப்படியே கணக்கிட்டு விடலாம் என்கிறார் சாவி.

அடுத்தபடியாக காந்திஜி மதுரை, பழனி யாத்திரையின்போது 30 லட்சம் தமிழ் மக்கள் அவரைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்கள். ஹரிஜன் நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்தனர்.

நவகாளி நினைவுகள் என்ற பெயரில் எழுதியிருக்கும் பகுதியில் சாவிக்கு மகாத்மாவை நேரிடையாகப் பார்க்க ஒரு நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டிருந்தது.

சென்னையிலிருந்து இங்கு வர எவ்வளவு பணம் செலவாயிற்று? என்று கேட்கிறார். 

"300 ரூபாய்."

உடனே காந்தி, "வீண் தண்டம்.  அந்தப் பணத்தை ஹரிஜன நிதிக்குக் கொடுத்திருக்கலாமே, சரி நாளை மறுதினம் திரும்பிப் போய்விடவேண்டும், என்ன?" என்று கூறுகிறார்.

இரண்டே தினங்கள்தான் காந்தியுடன் தங்கும் வாய்ப்பு கிட்டியது.  இந்த இரண்டு தினங்களுக்குள் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என் வாழ்நாட்களில் வேறு எப்போது கிடைக்கும் என்கிறார்.  

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் சாவியைப் பற்றிக் குறிப்பு வருகிறது. அத்தனை தமிழர்களும் அறிந்த எழுத்தாளர் சாவி பேராசிரியர் கல்கி அவர்களிடம் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர். கல்கி, ஆனந்தவிகடன், பத்திரிகைகளில் நீண்ட நாள் பணியாற்றி அனுபவம் பெற்ற பின், தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியவர்.  

கலைஞர் மு கருணாநிதி குங்குமம் வார இதழைத் தொடங்குவது என்று முடிவு செய்தபோது அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி கலைஞர் அழைத்தது சாவியைத்தான்.
 Comments

Popular posts from this blog