Skip to main content

பத்தென்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (20..09.2019)



அழகியசிங்கர்





நான் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டுமென்று என் புத்தகக் குவியலில் தேடிக் கண்டு பிடித்தேன்.  அந்தப் புத்தகம் வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 1990ல் அப் புத்தகம் வெளிவந்துள்ளது.  இன்னும் கூட அப்புத்தகத்தின் பிரதிகள் விற்பனைக்கு வானதியில் கிடைக்கலாம்.  

உண்மையிலேயே கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டில் அவருடைய 3 புத்தகங்களை வைத்துக்கொண்டிருந்தேன்.  முதல் புத்தகம் அவருடைய நாவல் பசித்த மானிடம், இரண்டாவது புத்தகம் சுகவாசிகள் என்ற அவருடைய குறுநாவல்கள்.  மூன்றாவது புத்தகம்தான் முக்கியமான புத்தகம்.  கு ப ரா என்ற மகத்தான எழுத்தாளரைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைப் புத்தகம்.  

எப்படியும் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதி விடுவதென்று, அசராமல் நேற்றிலிருந்து இன்று முழுவதும் படித்து முடித்து விட்டேன். 282 பக்கங்கள் கொண்ட புத்தகம்.  

1996ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்பதால் புத்தகத்தைத் தொட்டுப் படிக்கும்போது தாள்கள் எல்லாம் ஒடிந்து ஒடிந்து விழுந்து கொண்டிருந்தது.  கு.ப.ராவைப்பற்றி கரிச்கான்குஞ்சுவின் இந்தப் புத்தகம் அவ்வளவு உருக்கமாக இருந்தது.

இதைப் பற்றி எழுதும்போது முதலில் கடைசியில் அவர் புத்தகத்தை முடித்திருக்கும் பகுதியிலிருந்து எழுதலாமென்று நினைக்கிறேன்.  

கரிச்சான் என்ற புனைபெயரில் கு ப ராஜகோபாலன் வழக்கமாகக் கட்டுரைகள் எழுதுவார்.  கு ப ராஜகோபாலன் இறந்தபோது அவரைக் குறித்து கலாமோகினியில் துயரக் குறிப்பை கரிச்சான் குஞ்சு என்று புனைபெயரைப் பூண்டு எழுதி உள்ளார்.  'என்றுமே நான் குஞ்சுதான்; கரிச்சான் ஆக மாட்டேன். அந்த மேதை எனக்கேது?' என்று முடித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தை கரிச்சான்குஞ்சு.

மொத்தம் 12 பகுதிகளாக இந்தப் புத்தகத்தைப் பிரித்திருக்கிறார்.  கரிச்சான் குஞ்சு என்கிற ஆர் நாராயணசுவாமி.  அவர் எழுதிய தலைப்புகள் பின்வருமாறு : 1. பாயிரம் 2. கூôழ்க்கைச் சுருக்கம் 3. கு ப ராவும் பழந்தமிழ் இல்கிகயமும் 4. சிறுகதைகள் 5. கு ப ராவின் வேரோட்டம். 6. நாடகங்கள் 7. கவிதை 8. கண்ணன் என் கவி 9. எதிர்கால உலகம் 10. டால்ஸ்டாய் - வாழ்க்கையும் உபதேசமும் 11. கு ப ரா  - சில நினைவுகள் 1 12. கு ப ரா - சில நினைவுகள் 2

கு ப ராவின் சிறுகதைகளைப் பற்றி 190 பக்கங்களுக்கு எழுதி உள்ளார்.  கிட்டத்தட்ட அவருடைய கதைகள் முழுவதையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 

திரு பெ சோ சுந்தரராஜன் üசிட்டிý அவர்கள் கூறுவது :
"கு ப ராஜகோபாலன் தனது கடைசி நாட்களில் எழுதிய சோதனை பூர்வமான கதைகள் பலத்த் சர்ச்சைக்கு உள்ளாயின.  ஆண் - பெண் உறவைப் பற்றி, ஆபாசமாகவோ, அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, நடப்பியல் ரீதியில் துணிச்சலாக எழுதிவிட்டோம் என்று நினைத்துக்கொள்ளும் சிலர் இன்று செய்யும் தவறுகள் கு ப ராவின் கதைகளில் காணப்படா."

கனகாம்பரம் என்ற கு ப ராவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி ஆனந்தவிகடன் விமர்சனம் வெளியிட்டிருந்தது.  அதற்கு கு ப ராவின் குறிப்பு இது. கவனிக்க வேண்டிய குறிப்பு;

"என் கதைப் புத்தகத்தை விமர்சனம் செய்த யாரோ ஒருவர், நான், üஉடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் - இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம்.  இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான், நான் கவனித்த வரையிலும் என் அநுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன.  கண்டதை எழுதுவதுதான் கதை? என்று கேட்கலாம்.  கதை உருவாகும்போது, கண்டது மட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செம்பும் சேருவது போலச் சேர்கின்றன. "

க நா சு கு.ப.ரா கதைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "நல்ல எழுத்து எல்லாமே இலக்கியம் ஆகும்போது, புரட்சிகரமாகவும் அமைகிறது என்பது, கு.ப.ராவின் எழுத்துக்களில் தெரிய வருகிறது.  புரட்சி என்கிற ஆசையில் எழுதவில்லை அவர், மனிதன் என்கிற நினைப்பில் எழுதினார்," என்கிறார்.

இதையெல்லாம் கு ப ரா தனது 43 ஆண்டுகளில் எழுதி உள்ளார் (1902 -1944).  இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கும்போது எங்கேயோ போய்விட்டது நமது சமுதாயம்.  ஆனால் கு ப ரா எழுத்துக்களை இன்றும் படிக்க முடிகிறது.  அதன் நுணுக்கங்களைக் கதை சொல்கிற விதத்தை நம்மால் ரசிக்க முடிகிறது.
கரிச்சான் குஞ்சு அவருடைய எழுத்துக்களை லிஸ்ட் போட்டுள்ளார்.  சிறுகதைகள் - அச்சில் புத்தகத்தில் கிடப்பவை -79 
நாவல் - 1. நாடகங்கள் - 8, கவிதை 21.  இதைத் தவிர துர்சேகந்தினி, தேவி சௌது ராணி என்ற இரண்டு வங்காளி நாவல்களை மொழி பெயர்த்திருக்கிறார்.
இரண்டாவது அத்தியாயத்தில் அவர் வாழ்க்கைச் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
1902 ஜனவரி மாதம் பிறந்தார் 1944 ஏப்ரல் 27ஆம் தேதி மறைந்தார்.  தந்தை பட்டாபிராமய்ய்ர், தாய் ஜானகி அம்மாள்.  1926ல் திருமணம்.  துணைவியார் அம்மணி அம்மாள்.  முதலில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா ஆபிஸில் வேலை பார்த்தார். பிறகு ரெவென்யூ இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றார்.அப்போது அவருக்குத் திடீரென்று கண் பார்வை மிக மிகக் குறைந்துவிட்டதால் வேலை போய்விட்டது.  சிட்டி இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'அந்த சமயம் ஒரு குறுகிய காலத்திற்காவது தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு லாபமாக அமைந்தது என்று துயர் கலந்த பெருமை  கொள்ளலாம்' என்கிறார்.

கும்பகோணத்தில் ஆர் மகாலிங்கம் என்ற கண் மருத்துவர் செய்த அரிய சிகிச்சையால் ஓரளவு கண் பார்வை மீண்டது.  ஆனால் எழுத்தாளராக இருந்து காலத்தை ஓட்டலாமென்று அசட்டு நம்பிக்கையில் காலம் ஓட்டினார். 

உடல் நலம் குன்றி அவர் மருத்துவ மனையில் இருக்கும்போது அவர் காலை எடுத்துவிட வேண்டுமென்று மருத்துவர்கள் கூறினார்கள்.  ஆனால் 'நான் அமைதியாகச் சாக விரும்புகிறேன்' என்று கூறியபடி காவேரி தீர்த்தம் ஒரு டம்ளர் வேண்டுமென்கிறார். உடனே ஓடிப்போய் பக்கத்திலிருந்த பக்தபுரித் தெருவிலிருந்து வாங்கி வந்த நீரை குடித்துவிட்டுத்தான் இறந்தார். 

மூன்றாவதாக கு ப ராவும் பழந்தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் கரிச்சான் குஞ்சு எழுதியிருக்கிறார்  அதில் அவருக்கு ஆர்வம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

நான்காவதாகச் சிறுகதைகள் என்ற தலைப்பில் 190 பக்கங்களில் கு ப ராவின் பல கதைகளைக் குறிப்பிட்டு எழுதி உள்ளார். 

கரிச்சான் குஞ்சு கு ப ராவின் கதைகளைப் பற்றி இப்படிக் கூறுகிறார் : எல்லோருக்கும் எழுதுகிறார்.  பழகு தமிழில், சாதாரணமான வார்த்தைகளே பழகிய தேய்ந்த சொற் பிரயோகங்களில். யாரும் முன்னம் கண்டிராத புதிய ஒரு உலகையே அவர் தீர்மானிக்க முடித்திருப்பது பேராச்சர்யம்.   இந்த ரசனைத் திறம் கு.ப.ராஜகோபாலன் ஒருவரிடத்தில் மட்டுமே காணப்படுகிறது.

"தமிழ் இலக்கியத்தில் இந்த சிறுகதை உருவப் பிரஞ்ஞையை மறவாது இன்னும் பத்து தலைமுறை மாறினாலும் மறவாத வண்ணம் தமது சிறுகதைகளினால் அழியாவண்ணம் நிலைபெறச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் கு ப ராஜகோபாலன்," என்கிறார் கரிச்சான் குஞ்சு.

ஐந்தாவது பகுதியில் கு ப ராவின் வேறோட்டம் என்ற தலைப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார் : 'கு.ப.ரா சுயமாக எழுதிய நாவல்கள் இரண்டு.  இரண்டும் முற்றுப் பெறவில்லை.  ஒன்று அச்சிடப்படவே இல்லை.  காண்டேகர் எழுதிய 'கருகிய மொட்டிற்கு' எதிர்வினைபோல் 'கருகாத மொட்டு' என்ற அவரது நாவல் கையெழுத்துப் பிரதியிலேயே பதினொரு பக்கங்களோடு நின்று போயிற்று,ý என்ற கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார்.  இந்த விபரம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

அதேபோல் வேரோட்டம் என்ற முற்றுபெறாத நாவலும் எழுதி உள்ளார். வாசகர் வட்டம் கொண்டு வந்த சிறிது வெளிச்சம் என்ற புத்தகத்தில் இந்த நாவல் உள்ளது.  

ஆறாவது பகுதியில் நாடகங்கள் என்ற தலைப்பில் 8 நாடகங்கள் எழுதி உள்ளாதாக கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார்.

ஏழாவது பகுதியில் கு ப ராவின் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  கு ப ரா 21 கவிதைகள் எழுதி உள்ளார்.  கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது, கு ப ரா இப்படிச் சொல்கிறார்:

"ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவம் உண்டு, அதற்கும் அணி உண்டு. அலங்காரம் உண்டு.  தளை உண்டு. மோனை உண்டு. இவை எல்லாவற்றிற்கும் மேலாத அதற்கும் ரிதம் உண்டு.  செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம்." என்கிறார்.

எட்டாவது பகுதியில் கண்ணன் என் கவி என்ற தலைப்பில் சிட்டியும், கு ப ராவும் எழுதிய புத்தகம்.  இது சிறிய நூல்.  இந்தப் புத்தகம் இரண்டாம் பதிப்பாக 44 ஆண்டுகளுக்குப் பிறகு பூங்கொடி பதிப்பாக வந்துள்ளது என்கிறார் கரிச்சான் குஞ்சு.  இதைக் குறிப்பிடும் ஆண்டு 1990.  இப்போது இந்தப் புத்தகம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ஒன்பதாவது பகுதியில் எதிர்கால உலகம் என்ற தலைப்பில் பல அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பத்தாவதாக டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும் அலையன்ஸ் வெளியீடாக முதற் பதிப்பு வந்திருக்கிறது. மிகவும் விரிவான ஆய்வு நூல்.

கு ப ரா- சில நினைவுகள் 1, 2 என்று 11அம் அத்தியாயமும் 12 அத்தியாயமும் கரிச்சான் குஞ்சு கு ப ராவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருக்கிறார்.  இந்தப் பகுதி சற்று உருக்கமாக எழுதப் பட்டிருக்கிறது.  இந்தப் பகுதிகளில் கரிச்சான் குஞ்சு அவரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இதில் தொண்டர் கடையில் கு ப ரா புத்தகக் கடை வைத்திருந்தார்.  பெரும்பாலும் வருபவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்.  புத்தகங்கள் வாங்க மாட்டார்கள்.  

கு ப ரா வறுமையில்தான் வாடி உயிர் இழந்தார்.  வறுமையை நினைத்து அவர் என்றுமே புலம்பியதில்லை.  இந்தப் புத்தகம் பற்றி இன்னும் சொல்லலாம்.  ஒவ்வொருவரும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இது.  வானதி பதிப்பகம் மூலம் வந்துள்ளது. விலை ரூ.24தான. 

Comments