Skip to main content

எட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (09.09.2019)


அழகியசிங்கர்





நான் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அதை அவ்வளவு சுலபமாக ஒரே நாளில் படித்துவிட முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாக அதைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.   இந்தப் பகுதியில் தினமும் எதாவது எழுத வேண்டுமென்றுதான் என் நோக்கம்.  கூடவே மிகக் குறைவான பக்கங்களைக் கொண்ட புத்தகத்தையும் படித்து எழுத விரும்புகிறேன்.
பெரிய புத்தகம் முடியும்போது அதைப் பற்றி எழுதுவேன்.  நான் எட்டாவது நாளான இன்று எழுதுவது.  சாகித்ய அகாடமி விருதுபெற்ற பி கேசவதேவ் எழுதிய இரண்டு குறுநாவல்கள்.
இனிய உதயம் என்ற புத்தகம் ஜøலை 2011ல் வாங்கியது.  எங்கே வாங்கியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.   பேப்பர் கடையில்தான் வாங்கியிருப்பேன்.  வாங்கியபின் படிக்காமல் தூக்கிப் போட்டிருப்பேன்.  எனக்கு ஒரு புத்தகம் வாங்கியவுடன் உடனே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றாது.  அப்படி வைத்துக்கொண்டிருக்கும் புத்தகம் என் கண்ணிலிருந்து மறைந்தும் விடும்.  திரும்பவும் நான் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது ஒரு புதிய புத்தகத்தைப் பார்ப்பதுபோல் பார்ப்பேன்.
இனிய உதயம் என்ற இப் புத்தகமும் அப்படித்தான்.  சுரா அவர்கள் மொழி பெயர்த்த பி கேசவதேவ்வின் இரண்டு கதைகள். ஒன்று தீனாம்மா இரண்டாவது கதை பேருந்து பயணம்.
இனிய உதயம் என்ற பத்திரிகை மாதப் பத்திரிகை.  தொடர்ந்து பிற இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறது.  
நான் வாங்கிய இதழ் பத்தாவது ஆண்டாக வெளிவருகிறது.  2011 ஆம் ஆண்டில் வாங்கிய இதழ் அது.  அப்போதே பத்தாண்டாக வருகிறது. நக்கீரன் வெளியீடு.   இப்போது இந்த இதழ் வெளிவருகிறதா என்பது தெரியவில்லை. தொடர்ந்து ஒரு இதழ் வெளிவருவதும் நின்று போவதும் நமக்குத் தெரிவதில்லை.  ஏன்னென்றால் ஒவ்வொரு மாதமும் தேடிக் கண்டுபிடித்து வாங்கும் வழக்கமில்லை.
இனிய உதயத்திற்காக மொழிபெயர்ப்பு செய்திருக்கும் சுரா அவர்கள், 96வது நூல் என்று இதைக் குறிப்பிட்டு உள்ளார். 
முதலில் தீனாம்மா என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.  தீனாம்மா அழகற்ற ஒரு பெண்.  அவளை அவள் தங்கை சாரம்மா பார்க்கிற போதெல்லாம் கிண்டல் செய்கிறாள்.
கொக்கைப் போன்ற கழுத்து ஒட்டிய
மூக்கு பாதி மூடிய கண்கள்
யானையில் உதடுகளைப் போன்ற அதரங்கள்
மான்மணி இவள் அல்லவா தீனாம்மா?
என்று பாடுகிறாள்.   தீனாம்மா மாணவியாக இருந்தபோது அவளைப் பற்றி ஒரு மாணவன் தமாஷாக எழுதிய கவிதை இது.
ஆனால் தீனாம்மா ரசனை மிக்கவள்.  அவள் சுற்றிலும் உள்ள இடங்களை ரசிப்பாள்.  தீனாம்மாவிற்கு எங்கும் எப்போதும் தனியாகப் போவதற்கு தடையெதும் இல்லை.  ஏன்என்றால் அவள் அழகற்ற தன்மை யாரும் அவளைப் பின் தொடர மாட்டார்கள் என்ற எண்ணம் அவள் பெற்றோர்களுக்கு இருந்தது.  ஆனால் அவள் எங்கும் தனியாகப் போவதில்லை.  ஞாயிற்றுக்கிழமை மட்டும் தேவாலயத்திற்குப் போவாள்.  அவள் தனிமையில் போகும்போது எல்லோராலும் அவள் வெறுக்கப்படுகிறாள்.  யாரும் அவளைப் பார்த்தால் கிண்டல் செய்கிறார்கள்.  அதனால் அவள் தனியாகப் போவதில்லை.  
மனிதர்களின் தோற்றத்திலும் செயலிலும் அழகு மிளிர வேண்டுமென்று அவள் விரும்புவாள். அழகு முழுமையாக நிறைத்திருக்கும் கலைத்தன்மை கொண்ட ஒரு உலகத்தை அவள் கற்பனை செய்வாள்.  அவளுடைய அறை அழகான ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.  
இப்படி எல்லாராலும் இழிவாக நினைக்கப்படுகிற தீனாம்மா, தன் ரசனைக்கேற்ப தனக்கென ஒருவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  தீனாம்மாவுக்கு சித்தப்பா பெண்ணான அன்னக்குட்டியும், பக்கத்து வீட்டுப் பெண் தங்கம்மாவும் நண்பர்கள்.  
அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.  தீனம்மாவுக்கு திருமணம் வயது கடந்தும் என்ன முயற்சி செய்தும் திருமணமாகவில்லை. 
தீனாம்மாவால் அவள் தங்கை சாரம்மாவிற்கு திருமணம் ஆவதற்குத் தடைப்படுகிறது.  உண்மையில் அவள் தங்கையை பெண் கேட்டு வருகிறார்கள்.  ஆனால் தீனாம்மாள்தான் ஒரு தடை.
üபுனித மரியத்தைப்போல என் மகளான நீ என்றும் புனிதமானவளாக இருக்க வேண்டும்.  கன்னிகளின் மடம்தான் என் குழந்தையான உனக்கு ஏற்ற இடம்,ý என்கிறார் அப்பா சோகத்துடன்.
கன்னிகள் மடத்தில் அல்ல.  அதற்கு வெளியே இருக்கும் விசாலமான அழகான உலகத்தில் நான் எப்போதும் கன்னியாக இருப்பேன் என்கிறாள் தீனாம்மா அப்பாவிடம்.
கர்த்தரின் படைப்பான பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நான் அழகை ஆராதிக்கக் கூடியவளாக, வாழக்கையை நேசிப்பவளாக, நித்யகன்னியாக வாழ்வேன் என்கிறாள் தீனாம்மா.
இதைக் கேட்டவுடன் சாராம்மாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்கிறார் அவர் அப்பா.
ஓரளவு பணம் வசதி கொண்டவனுடன் அவள் தங்கை சாரம்மாவின் திருமணம் நடந்து விடுகிறது.  
தீனாம்மாவின் திருமணத்தையும் அவள் அப்பா முடித்துவிடுகிறார்.  3000 ரூபாய் பணம் கொடுத்து.  உண்மையில் தீனாம்மாவிற்கு இதில் விருப்பமில்லை.  அவளைத் திருமணம் செய்து கொண்டவன் ஒரு ஓவியம்.  அவள் கணவன் தாமஸ் அவளை அலட்சியப்படுத்துகிறான்.  அவளை நேராகக் கூட பார்ப்பதில்லை.  திருமணத்திற்குப் பிறகு அவன் வீட்டிற்கே வருவதில்லை.  பல பெண்களின் சவகாசம் அவனுக்கு.
இந்தக் கதையின் திருப்பு முனையாக, தாமஸ் அவளை பொய்கையில் தன்னை மறந்து இருக்கும் தீனாம்மாவை ஒரு முறை நேருக்குநேர் சந்திக்கிறான்.  அவனை அறியாமலயே ஒரு புன்னகையைத் தவழ விடுகிறான்.  அதைக் கண்ட தீனாம்மா திகைத்துவிடுகிறாள்.
யாரும் உள்ளே விடாத அவன் வீட்டிற்குள் இருக்கும் ஸ்டுடியோவில் கதவை மூடிக்கொண்டு விடுகிறான்.  நாள் கணக்கில் வெளியே வரவில்லை.  ஒருநாள் கதவைத் திறந்துகொண்டு வருகிறான். தீனாம்மா உடனே அவனுடைய ஸ்டூடியோவிற்குப் போய் பார்க்கிறாள்.  முழுமை அடையாத ஒரு ஓவியம்.  அது அவள்தான்.  அவள் அவனைப் பார்க்கிறாள்.  அந்த ஓவியத்தை தூரிகையை எடுத்து அங்கும் இங்கும் தீட்டி அந்த ஓவியத்தை முடித்து விடுகிறான்.   அந்த ஓவியத்தைப் பார்த்து, üஅந்தப் பெண்ணின் அழகான இதயத்தை நான் பார்க்கிறேன்,ý என்கிறான். அன்று முதன்முறையாக தன் கணவன் மாரிபில் தலையை சாய்த்தாள் என்று கதையை முடிக்கிறார் பி கேசவதேவ்.   விறுவிறுவென்று படித்து முடித்து விடுகிற கதை.
இன்னொரு கதையான பேருந்து பயணம் என்ற கதை.  பத்மநாபன் கொல்லம் முன்சீப் நீதிமன்றத்தில் தலைமை க்ளார்க்காகக பணியாற்றுகிறார்.  மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததால் மனைவியின் வற்புறுத்தலால் மாமியார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி விடுகிறார். 
முந்தைய நாள் சாயங்காலம் கொல்லத்திற்கு திரும்பிப் போக வேண்டும் என்று நினைக்கிறார்.  மாமியாரின் வற்புறுத்தலுக்காக காலையில் கிளம்புகிறார்.  பஸ் கிடைக்காமல் இதனால் ஏற்படும் மனக்கிளற்சியை வெளிப்படுத்துகிறார் பத்மநாபன் மூலமாக.
இந்த இரண்டு கதைகளும் ஓரளவு சுலபமாகப் படிக்கக் கூடிய கதைகளாக எழுதியிருக்கிறார் கேசவதேவ். இரண்டாவது கதையில் ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்.  உண்மையில்  பிற மொழி இலக்கியங்களை தமிழாக்கிக்கொண்டு வருகிறது இனிய உதயம்.  இப்பபோதும் தொடர்ந்து வருகிறதா என்று தெரியவில்லை.  



Comments