Skip to main content

இரண்டாம் நாள் வாசிப்னுபவம் (03.09.2019)



அழகியசிங்கர்






என் பெண்  வீட்டிற்குப் போயிருந்தேன்.  காலையிலிருந்து அங்குதான் இருந்தேன்.  படிக்க வேண்டுமென்ற ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போக மறந்து விட்டேன்.  
பெண் வீட்டில் எதாவது புத்தகம் இருக்கிறதா படிக்க என்று தேட வேண்டும் போலிருந்தது.  அமேசான் பையர் வைத்திருந்தேன்.  அதில் சில ஆங்கிலப் புத்தகங்களை கின்டலில் படிக்க வைத்திருந்தேன்.  
ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துப் படிக்கலாமென்று தோன்றியது.  அந்தப் புத்தகம் பெயர் The Perfect Murder.
ரஸ்கின் பான்ட் தொகுத்தது.  7 கதைகள் அடங்கிய தொகுப்பு.  கின்டலில்  இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க 6 மணிநேரத்திற்கு மேல் ஆகுமென்று கின்டலில் குறிப்பிடப்பட்டிருந்தது. என் ஸ்பீடுக்கு எட்டு மணி நேரம் மேலே ஆகும்.  முதல் கதை 22 பக்கம்.  படித்து முடிக்க 90 நிமிடங்கள் ஆகிவிட்டன. 
நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று முடிவு எடுத்துவிட்டால் நேரமெல்லாம் பார்க்கக் கூடாது.  ஆனால் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவதைப் படிக்க வேண்டுமென்று ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரவேண்டும். 
என்னைச் சுற்றி பலர் புத்தகமே படிப்பதில்லை.  அவர்கள்  சொல்கிற காரணம் நேரம் கிடைப்பதில்லை.  ஆனால் நேரம் இருக்கிறது.  அவர்களுக்கு மனமில்லை என்பதுதான் காரணம்.
ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு புத்தகத்தைத் திறந்து வைத்துப் படிக்கத் தொடங்கினால் சில பக்கங்கள் படித்துவிடலாம். மனசு வேண்டும்.  சில நிமிடத்துளிகளில் நமக்குப் பிடித்தப் பாடலை கேட்டு விடலாம்.  எல்லாவற்றுக்கும் மனசு வேண்டும்.  இப்படி திட்டம் தீட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாம் அதிகமான புத்தகங்களைப் படித்துவிடலாம்.  ஏன் இதுவரை எனக்குத் தோன்றவில்லை என்பது தெரியவில்லை.
தி பர்வக்ட் மர்டர் என்ற கதையை ஸ்டேசி அமோனிர் என்பவர் எழுதியிருக்கிறார்.  இது குறுநாவல்.  இதுமாதிரி 7 பேர்கள் எழுதிய குறுநாவல்களை ரஸ்கின் பான்ட் தொகுத்திருக்கிறார்.  மர்ம குறுநாவல்களைப் படிப்பதில் ரஸ்கின் பான்ட்டிற்கு அலாதியான ஈடுபாடு என்று குறிப்பிடுகிறார்.  அவரே அது மாதிரி கதைகள் எழுதி உள்ளார்.
ரஸ்கின் பான்ட்  இதுவரை 120 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொகுப்பு நூல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று எழுதித் தள்ளியிருக்கிறார்.  தற்போது முசோரியில் வசித்து வருகிறார்.
பர்வக்ட் மர்டர் சாத்தியமா என்று இரண்டு சகோதரர்கள் பேசிக்கொள்கிறார்கள்.  அதாவது கொலை என்று தெரியாமல் மரணம் நிகழ்ந்ததுபோல் எல்லோருக்கும் தோன்ற வேண்டுமாம்.  பால் என்கிற இளைய சகோதரரும். ஹென்றி என்ற மூத்த சகோதரரும் ஒரு ஹோட்டல் அறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அப்போது ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.  நெருக்கமாக ஒருவருடன் வசித்து வந்தால்தான் இந்தக் கொலை சாத்தியம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.  கணவன் என்றால் மனைவியை யாரும் சந்தேகப்படாதவாறு கொல்வது எளிது.  அதேபோல் மனைவியும் கணவனைக் கொள்வது.  
இந்த இரு சகோதரர்களுக்கும் வருமானம் எதுவும் பெரிதாக  இல்லை.  ஹென்றி என்ற மூத்த சகோதரர் திருமணம் ஆனவர்.  4 குழந்தைகள்.  பால் என்பவருக்குத் திருமணம் செய்துகொள்ளாதவர்.
சொற்ப வருமானம் அவர்களுக்குப் போதவில்லை.  
தூரத்து சொந்தமாக அவருக்கு ஒரு மாமா இருக்கிறார்.  ஏகப்பட்ட பணம்.  அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.  மாமாவின் மனைவி கிறுக்குத்தனமாக நடந்துகொள்பவள்.  சகோதரர்கள் இருவரும். பணத்துக்காக மாமாவை அணுகுவதை விட மாமியை அணுகுவார்கள்.  கிறுக்குத்தனம் இருந்தாலும் மாமாவிற்குத் தெரியாமல் இருவருக்கும் பணம் கொடுத்து உதவுவார்.  வயது காரணமாக மாமா இறந்து விடுகிறார் அவருடைய சொத்து முழுவதும் பொதுவாக ஒரு அறக்கட்டளை  மூலம் எழுதி வைத்துவிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண்டில் 8000லிருந்து 10000யிரம் பிராங்க் பணம் கிடைக்குமென்றும் அதுவும் மாமி ரோஸலி இறந்தபிறகுதான் கிடைக்குமென்று எழுதி வைத்துவிடுகிறார்.  ரோஸலிக்கு 82 வயது.  ரொம்பவும் பலவீனமாக இருப்பவர்.
சகோதரர்கள் இருவரும் எப்போது ரோஸலி மண்டையைப் போடுவாள் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  மேலும் அவர்கள் இருவரும் மாமியைப் பார்த்து அவ்வப்போது பணம் கேட்பார்கள்.  ரோஸலியும் அவர்கள் தேவையை அறிந்து அவர் கேட்ட தொகையைவிட மிகக் குறைவாக வேண்டா வெறுப்பாகப் பணம் கொடுத்து உதவுவாள்.
பால் என்ற இளைய சகோதரர் ரோஸலியுடம் வசிக்கத் தொடங்கினார்.  இது ஹென்றி என்ற மூத்த சகோதரருக்குப் பிடிக்கவில்லை.  இப்போது அவருக்கும் பால் மீது,  ரோஸலிமீது என்று அவருக்குப் பொறாமை ஏற்படுகிறது.
வெகுநாட்கள் கழித்துத் திரும்பவும் இரண்டு சகோதரர்களும் முன்பு சந்தித்த அதே ஓட்டலில் சந்திக்கிறார்கள். மாமி பக்கத்தில் வசித்து வந்தாலும் அதனால் பெரிதும் பயனில்லை என்கிறார் பால்.  மாமியும் வயது அதிகமாக இருந்தாலும்,  அவ்வளவு எளிதாக மரணம் அவளுக்கு நிகழவில்லை  இது குறித்து சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மாமியை கொலை செய்துவிடலாம் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது.  நெருக்கமாக இருக்கிற பால்தான் இதைச் செய்ய முடியும் என்று ஹென்றி குறிப்பிடுகிறார்.
இருவரும் உணவில் விஷம் வைத்துக் கொல்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.   மாமியின் சமையல்காரி ஒருநாள் மீன் உணவும் இன்னொருநாள். இரண்டு முட்டைகளை வைத்து உணவை சமைத்துக் கொடுக்கிறாள்.  முட்டைகளை வைத்து சொய்யும் உணவில்தான்  விஷத்தைக் கலக்க வேண்டுமென்று பால் முடிவு செய்கிறான்.  அதேபோல் ஒரு நாள் கலந்து விடுகிறான்.
எதிர்பாராத செய்தி தினசரியில் வெளியாகிறருது.  பால் இறந்து விட்டதாக. செய்தியைப் படித்த ஹென்றிக்கு அதிர்ச்சி.  ஆம்லெட்டை சாப்பிட்டதால் வயிற்றில் கடுமையான வலி. இதனால் பால் தவிர வேற யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை.  அன்று முட்டையில் கலந்த உணவை உண்ண வேண்டிய வழக்கம்.  திடீரென்று வழக்கத்தை மீறி மாமி ரோஸ்லி மீன் உணவை உட்கொள்கிறாள்.  பால் பசியால் அந்த முட்டையில் விஷம் வைத்திருப்பது தெரியாமல் சாப்பிட்டு விடுகிறான்.
ஹென்றிக்கு பெரிய வருத்தம்.  ஆனால் இந்த மரணத்தினால் ஹென்றிக்குத்தான் பலன் அதிகம்.  அவன் இளைய சகோதரன் பால் இறந்துவிட்டதால் அவனுக்குத்தான ரோஸ்லி இறந்தபிறகு கிடைக்கப்போகிறது.  ரோஸ்லி எப்போது மரணம் அடையப்போகிறாள் என்று காத்திருக்க வேண்டும்.  ஹென்றி திட்டமிட்டு அவனுடைய சகோதரன் பாலை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக எல்லோரும் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்.
கச்சிதமாக 23 பக்கங்களில் எழுதி முடிக்கப்பட்ட இந்த மர்ம குறுநாவலை விறுவிறுவென்று படிக்க முடிந்தது.

இதுவரை இந்தக் குழுவில் சேராதவர் இப்போது கூட இந்த வாசிக்க வாசிக்க குழுவில் சேர்த்து ஒவ்வொரு நாளும் படிக்கும் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடலாம். vasipomvasipom.blogspot.com 
போய் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.


Comments