Skip to main content

பதினெட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (18.09.2019)அழகியசிங்கர்

இந்த முறை நான் எடுத்துக்கொண்ட புத்தகம் நாரணோ ஜெயராமனின் கவிதைகள் புத்தகம்.  வேலி மீறிய கிளை என்ற பெயரில் ஏற்கனவே அவருடைய கவிதைகள் தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1976. 
அதன்பின் அவர் கவிதைகள் எழுதி பத்திரிகைக்கு அனுப்பவே இல்லை.  விருட்சம் முதல் இதழில் அவர் கவிதைகள் இரண்டு வந்திருக்கும்.  
அவர் இலக்கியத்தை விட்டே ஒதுங்கி விட்டார்.  1972-76 வரை அவர் சிறுகதைகள், கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர்.  அவர் எழுதாமல் போனதற்குக் காரணம் ஜே கிருஷ்ணமூர்த்தி.
அவர் தன்னைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுதியிருக்கிறார். அதில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
üஎனக்கு வாழ்க்கைதான் ஆசான்.  விரக்தி, பரவசம், விசாரமென வாழ்க்கை அனுபவங்கள் ஞானத்திற்கு ஏற்றிச் சொல்கின்றன.ý 
ஆதர்ச புருஷர்கள் காஞ்சி மாமுனிவர், சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்று குறிப்பிடுகிறார்.  üஎன்னால் பூமியில் காலூன்றி வானத்தில் சிறகடிக்க முடிகிறது என்றால் தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தியுடன் சில ஆண்டுகள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பயணித்ததுதான்,ý என்கிறார்.
பிரமிள் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான வேலி மீறிய கிளைக்கு முன்னுரை எழுதி உள்ளார். எனக்கு பிரமிளின் முன்னுரை அன்றும் புரியவில்லை, இன்றும் புரியவில்லை. ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : üவாழ்வின் அவலமாகத் தென்படுகிறவற்றிலே கூட, இங்கே ஏற்கனவே விவரித்த வைதீகமான  பாப்புலர் தர்மா வேசங்களுக்கு எட்டாதவற்றை அனுபவித்துக் கனலும் சாந்த புஷ்டி நா.ஜெயராமனின் தர்சனம்.ý என்கிறார் பிரமிள்.
எஸ் வைதீஸ்வரனும் முன்னுரை எழுதியிருக்கிறார்.  அவர் இப்படி குறிப்பிடுகிறார்.  üஇவருடைய கேள்விகள் பிரபஞ்சபூர்வமானவை.  நிரந்தரமானவை.  எப்போதும் புதுமை குறையாததாக வாசிக்கும் சீரிய உள்ளத்தை எப்போதும் பல வினோதமான, விபரீதமான திசைகளில் சித்திக்கத் தூண்டுபவை.  தட்சிணாமூர்த்தியின் மௌனம் போல்.ý 
இரண்டு முன்னுரைகளும் குழப்பமானவையாகத் தோன்றுகிறது.  
நாராணோ ஜெயரமான் கவிதைகளை ஆராயும்போது 1972-1976 வரையுள்ள கவிதைகள் என்றும் அதன் பின்னால் 2011லிருந்து 2018 வரை உள்ள கவிதைகள் என்றும் இரண்டு பிரிவுகளில் கொண்டு வரலாமென்று தோன்றுகிறது. 
ஆரம்பக் கால கவிதைகளில் எது எது என் மனதிற்கு ஏற்ற கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கொடுக்க விரும்புகிறேன்.  1. அமிழ்தல் 2.நிலை 3. வானளாவி நின்று 4. நாய்களுக்கு 5. இரட்டை 5. அளவு 6. போக்கிடம் 7. முழுமை 8. சஞ்சாரம் 9. ஆறாவது அறிவு 10. தரிசனம் 11. பிணைப்பு 12. காட்சிப்பொருள் 13. கூர்க்காவை முன்வைத்து சில யோசனைகள் 14. பழித்தல1வ் 15. தவம் 16. அடையாளங்கள் 17. வாத்துக்கூட்டம் 18. அநாதார ஜீவி 19. வாசற்குறட்டில் 20. கடிகாரத்தை முன்வைத்து காலத்திற்குச் சொன்னவை 21. இன்று காலை கண்டவை 22. லெவல் கிராஸிங் 23. இங்கே, இப்போதே 24. உயிர் 25. பிரதிஷ்டை 26. சுயம் 27. ஸ்தாபித்தல் 28. கடல் 29. அரசியல் கூடுகள் 
மேலே குறிப்பிட்ட கவிதைகள் 1972-76வரை எழுதியவை.  இக் கவிதைகளைப் படிக்கும்போது நாராணே ஜெயராமன் ஒரு பிரபஞ்ச கவிஞராக எனக்குப் படுகிறார்.  
உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
உயிர் 
சுற்றிலும் 
இல்லாமை பிரலாபம் 
ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்

சாக்கடை யோரத்தில்
கந்தலில்
சிசுக்கள் நிலா கண்டு சிரித்து
மல்லாந்து கிடக்கும்

என்னுடைய கேள்வி ஏன் நா ஜெயராமன் தொடர்ந்து எழுதவில்லை என்பதுதான்.  பல கவிதைகளைப் படிக்கும்போது பளீர் பளீரென்று வரிகள் வாசிப்பவனைத் தாக்குகின்றன.
2011லிருந்து 2018 வரையுள்ள கவிதைகளில் பழைய நாராணோ ஜெயராமனைப் பார்க்க முடியவில்லை.  முழுவதும் மாறி விடுகிறார்.
வித்தியாசமான பார்வை கொண்டவராக இருக்கிறார். 
நேரிடையாகவே பக்தி மார்க்கத்தில் கவிதை எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு üகாஞ்சி மாமுனியே போற்றி கலம் கரை சேர..ü என்ற தலைப்பில் கவிதை எழுதியிருக்கிறார்.  
வயோதிகம் கூடி விட்டதால் மரணத்தைப் பற்றி கவிதைகள் எழுதி உள்ளார்.  நெருங்கிய உறவினர் மரணம் அவரைப் பாடாதபாடு படுத்துகிறது.  
ஆராயப் புகுமின் என்ற கவிதையில் 
இருந்ததை
இருப்பதை
இருக்கப் போவதை
தேடியலைந்து
புதிதாய் அறிவதாய்
கூறுவதாய் கொண்டால்
இல்லாததென 
ஏதேனுமுண்டா?  என்கிறார்.  எது முதல் வாதம் என்ற கவிதையில் 
நான்
உள்ளும் பார்க்கிறேன்
புறமும் பார்க்கிறேன்
நீ 
எந்த அடையாள வில்லை
வேண்டுமானாலும்
ஒட்டிக்கொள் 
என்கிறார்.  மரணம் இவரைச் சங்கடப் படுத்துகிறது.  கருந்தீண்டல் என்ற கவிதை.
மைத்துனன் இறந்தான்
போகிற வயசில்லை
உணர்ச்சியின் உச்சகட்டத்தில்
கண்ணீரில் களந்து விழுந்த சொற்கள்
üஇதென்ன மாயமா இருக்கு?
பொய்யாயிடுத்தே!
இருக்காமாதிரி இருக்கானே பாவி!ý

இல்லாள் பற்றி ஒரு காதல் கவிதை எழுதியிருக்கிறார்.
நொடிப்பொழுதில்
சிட்டுக்குருவியாய்
எங்கேனும் காரியமயமாய்
வேளாவேளைக்கு
அன்னபுரணியாய்
ஏகாந்தத்தில் சலனப்பொழுதுகளில்
ஆன்மா விகசிக்கும் மாயையாய்
அவ்வையாய் நரைதிரண்டபோதும்
அழகியாய்
நுகத்தடி பந்தத்தில்
ஒரு இனிய பசு. 
இந்தப் புத்தகம் விலை ரூ.200.  ஒருவார் வாங்கிப் படிக்க வேண்டியது அவசியம்.  டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். Comments

Popular posts from this blog